search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ஆஸ்துமா, நீரிழிவு நோய்க்கு பயனுள்ள சர்வாங்காசனம்
    X

    ஆஸ்துமா, நீரிழிவு நோய்க்கு பயனுள்ள சர்வாங்காசனம்

    ஆஸ்துமா, நீரிழிவு நோய்க்கு பயனுள்ளது இந்த சர்வாங்காசனம். லவிதமான மனக்கோளாறுகளை நீக்கி மனோசக்தியை மிகச் செய்கிறது. இந்த இந்த ஆசனத்தை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    பெயர் விளக்கம்: ‘சர்வ’ என்றால் எல்லாம் என்று பொருள். ‘அங்க’ என்றால் உடல் பகுதி என்று பொருள். இந்த ஆசன பயிற்சியில் உடல் இயக்கத்திற்கு முக்கிய பங்காற்றும் தைராய்டு, பாரா தைராய்டு, பிட்யூட்டரி போன்ற நாளமில்லா சுரப்பிகளுக்கு ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் எல்லா உறுப்புகளும்  பயன்பெறுகின்றன என்பதனால் இந்த ஆசனம் சர்வாங்காசனம் என்று அழைக்கப்படுகிறது.

    செய்முறை: சவாசனத்தில் படுத்து, கால்கள் இரண்டையும் ஒன்றாக சேர்த்து வைக்கவும். கைகள் இரண்டும் உடலோடு ஒட்டியபடி நீட்டி வைக்கவும். உள்ளங்கைகளும் தரையோடு படிந்திருக்கட்டும். இந்த நிலையில் மூச்சை உள்ளுக்குள் இழுக்கவும். மூச்சை வெளியே விட்டபடி கால்களை மடித்து வயிற்றுப் பகுதியை முழங்கால்கள் தொடும்படி கொண்டு போய் முதுகை தரையிலிருந்து தூக்கி

    கால்களை உயர்த்தவும். அதே நேரத்தில் முழங்கைகளை தரைவிரிப்பில் நன்றாக ஊன்றி பிருஷ்ட பாகத்தை இரு உள்ளங்கை களாலும் தாங்கிப் பிடித்து முழங்கால்களை மேலே உயர்த்தி கால்களை நேராக நிமிர்த்தவும். கால்களை உயர உயர  பிருஷ்டபாகத்திலிருந்து கைகளை கீழே கொண்டு போய் மார்பு கூட்டுக்குப் பின்புறம் உள்ளங்கைகளை நிறுத்தி உடல் எடை இரு கைகளிலும் சமமாக இருக்கும்படி தாங்கிக் கொள்ளவும்.

    கால்களை விறைப்பாக வைத்துக் கொள்ளாமல் தளர்ந்த நிலையில் இருக்கும்படி வைத்துக் கொள்ளவும். தாடைப்பாகம் நெஞ்சில் பதியட்டும். 3 முதல் 5 நிமிடம் இந்த ஆசனத்தில் சாதாரண மூச்சுடன் நிலைத்திருக்கவும் ஆரம்பப் பயிற்சியில் முடிந்த அளவு காலம் (சில வினாடிகள்)  பயிற்சி செய்யவும். பிறகு கால்களை மடக்கி கைகளால் பிருஷ்டபாகத்தை வழுக்கி கீழே இறக்கி கைகளையும், கால்களையும் நேராக நீட்டி வைத்து சவாசன நிலைக்கு செல்லவும்.
    உடலில் கழுத்து, முதுகுப் பகுதிகளில் வளையும் தன்மை குறைவாக உள்ளவர்களும், உடல் பருமனாக உள்ளவர்களும் மேற்கண்ட முறைப்படி பயிற்சி செய்து வரவும்.



    உடலை கைகளால் தாங்காமலேயே மேலே தூக்கக் கூடிய அளவு பயிற்சியில் முன்னேற்றம் அடையும்போது கால் முட்டிகளை மடக்காமல் தலைக்குப் பின்னால் கால்களை கொண்டுபோய், கால்களை மேலே உயர்த்தி சர்வாங்காசனத்தை செய்ய வேண்டும். பயிற்சியை முடிக்கும் போதும் கால்களை மடக்காமல் கீழே இறக்க வேண்டும்.

    கவனம் செலுத்த வேண்டிய இடம்: தொண்டை, கழுத்து மற்றும் உடல் எடையை சமமாக இரு தோள்களிலும் தாங்கச் செய்வதின் மீதும், உடலை தளர்வாக வைத்துக் கொள்வதின் மீதும், விசுத்தி சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

    பயிற்சிக்குறிப்பு: உடலை கீழே இறக்கும் போது தலையை தரைவிரிப்பிலிருந்து மேலே தூக்காமல் முதுகை கீழே இறக்கி கால்களை கீழே இறக்கவும்.

    தடைக்குறிப்பு: கல்லீரல், மண்ணீரல் மற்றும் கண்டச்சுரப்பி வீக்கம் கழுத்து நரம்புக் கோளாறு, கழுத்தில் அறுவை சிகிச்சை, உயர் ரத்த அழுத்தம், இருதயக் கோளாறு மிக பல உஷ்ணமான ரத்த நாளமுள்ள கண்கள், இடம் பெயர்ந்த டிஸ்க், உடலில் மிக அசுத்தமான ரத்தம் போன்ற எந்தவிதமான குறைபாடுகள் இருந்தாலும் சர்வாங்காசனம் செய்யக்கூடாது.

    பயன்கள்: சிறுவயதினரின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டச்சத்து போன்று உதவுகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தைராய்டு, பாரா தைராய்டு, சுரப்பியை நன்கு இயங்கச் செய்கிறது. அச்சுரப்பிகளில் ஏற்படும் கோளாறுகளை நீக்குகிறது. மற்றும் தைமஸ் சுரப்பி செயல்படத் தூண்டுகிறது. பலவிதமான மனக்கோளாறுகளை நீக்கி மனோசக்தியை மிகச் செய்கிறது. நினைவாற்றல் அதிகரிக்கும். குரல் வளம் சிறப்பாக அமையும். சளி, இருமல், நரம்பு பலகீனம், மார்புவலி, தொண்டை வலி, தொண்டை  சதை வளர்ச்சி, தலைவலி, அண்டவாயு நீங்க உதவுகிறது. ஆஸ்துமா, நீரிழிவு நோய்க்கு பயனுள்ளது. 
    Next Story
    ×