search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சுவாச உறுப்புகளுக்கு பலம் தரும் தனுராசனம்
    X

    சுவாச உறுப்புகளுக்கு பலம் தரும் தனுராசனம்

    இந்த ஆசனத்தை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் சுவாச உறுப்புகள் பலம் பெறும். இந்த ஆசனம் சுவாச கோளாறுகளுக்கு பயனுள்ளது. இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.
    பெயர் விளக்கம் : ‘தனுர்’ என்றால் வில் என்று பொருள் இந்த ஆசனத்தில் உடலை வில் போல் வளைப்பதால் தனுராசனம் என்று அழைக்கப்படுகிறது.

    செய்முறை : முதலில் தரை விரிப்பின் மேல் குப்புறப்படுக்கவும். தலையை மேலே தூக்கி தாடையை தரைவிரிப்பின் மேல் வைக்கவும். இருகால்களையும் மடக்கி வலது கைவிரல்களால் வலது கணுக்காலையும், இடது கை விரல்களால் இடது கணுக்காலையும் பிடித்துக் கொள்ளவும். இந்த நிலையில் 2-3 முறை மூச்சை ஆழமாகவும் நிதானமாகவும் இழுத்துவிடவும்.

    மூச்சை வெளியேவிட்டு மடக்கிய கால்களை அப்படியே மேலே தூக்கவும். அப்படி தூக்கும்போது தலையிலிருந்து மார்புவரை உள்ள உடல் பகுதியையும் மேலே தூக்க வேண்டும். வயிற்றுப் பகுதி மட்டும் தரை விரிப்பின் மேல் பதிந்திருக்க வேண்டும். கண்களால் மேல் நோக்கி பார்க்கவும். இந்த ஆசன நிலையில் நிதானமாக ஆழமான மூச்சுடன் 30 முதல் 60 வினாடி நிலைத்திருக்கவும். பிறகு மூச்சை வெளியே விட்டு வந்து அதிலிருந்து ஓய்வு நிலைக்கு செல்லவும்.
    இந்த ஆசனத்தை 2-3 முறை பயிற்சி செய்யலாம்.

    கவனம் செலுத்த வேண்டிய இடம் : அடி வயிறு, தொடைகள், முதுகுத்தசை மற்றும் மூச்சின் மீதும் விசுத்தி, அனாஹதம் அல்லது மணிபூர சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

    பயிற்சிக் குறிப்பு : பொதுவாக பருமனானவர்களும், பெருந்தொந்தி உள்ளவர்களும் கால்களை மடக்கி கணுக்கால் பகுதியை கைவிரல்களால் பிடிப்பதற்கு இயலாது. அத்தகையவர்கள் மற்றொருவரின் துணை கொண்டு எட்டாத காலை மெதுவாக பிடித்துக் கொடுக்கச் சொல்லி சில நாட்கள் பயிலலாம். அல்லது ஒரு காலை மட்டும் மாற்றி மாற்றி பிடித்து சில நாட்கள் பயிற்சி செய்யலாம். சிலருக்கு கால்களை கை விரல்களால் பிடித்துக் கொள்ள வரும். ஆனால் உடலை மேலே தூக்கும் போது தொடைகள் மேலே எழும்பாது. அத்தகையவர்கள் மார்பை கீழ் நோக்கியும் தொடைகளை மேல் நோக்கியும் கொண்டு வந்து உடனே தொடைகளை கீழே இறக்கி மார்பை மேலே தூக்குவதுமாக சிலமுறை உடலை மேலும் கீழுமாக ஆட்டி செய்து வந்தால் சில நாட்களில் தனுராசனம் சரியாக செய்ய வந்து விடும்.

    தடைகுறிப்பு : உயர் ரத்த அழுத்தம், குடல் பிதுக்கம், வயிறு, குடல் புண், இருதய பலகீனம், குடல் வீக்கம், விரை வாதம் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.

    பயன்கள் : முதுகெலும்பைச் சார்ந்த எல்லா நாடி நரம்புகளுக்கும் சுத்தமான ரத்தம் பரவி நரம்பு மண்டலம் முழுவதும் உறுதி அடைகிறது. முதுகெலும்பின் நடுப்பாகம் நன்கு வளைக்கப்படுவதால் எந்த வயதிலும் இளமையோடு சுறுசுறுப்பாக இருக்க முடிகிறது. சுவாச உறுப்புகள் பலம் பெறும். சுவாச கோளாறுகளுக்கு பயனுள்ளது. 
    Next Story
    ×