search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ஆரோக்கிய வாழ்க்கைக்கு யோகா அவசியம்
    X

    ஆரோக்கிய வாழ்க்கைக்கு யோகா அவசியம்

    யோக தினமான இன்று (21-6-2018) ஒவ்வொருவரும் மனித வாழ்க்கைக்கு யோகம் எவ்வளவு நன்மை அளிக்கிறது என்று அறிந்து கொள்வது அவசியமாகிறது. #InternationalYogaDay2018 #yoga
    இன்று வியாழக்கிழமை (21-6-2018) உலக யோக தினம். யோக தினத்தன்று ஒவ்வொருவரும் மனித வாழ்க்கைக்கு யோகம் எவ்வளவு நன்மை அளிக்கிறது என்று அறிந்து கொள்வது அவசியமாகிறது.

    யோகத்தின் சிறப்பு

    மனித வாழ்க்கையில் ஒவ்வொருவரும் தான் செல்லும் பாதைகளில் வெற்றியடைய நல்ல உடல், மன ஆரோக்கியம் அவசியமாகிறது. நம் உடல், மூச்சு, மனம் இம்மூன்றின் சேர்க்கையே உயிர் வாழ்க்கையாகிறது. உடல், மூச்சு, மனம் ஆகிய மூன்றில் எது பாதித்தாலும் அது மற்றதை பாதித்து விடுகிறது.

    இம்மூன்றையும் சீர்படுத்த ஹடயோகம் உதவுகிறது. பழங்கால பயிற்சி முறையான ஹடயோகம் பாரத நாட்டு யோகிகளால் உபதேசிக்கப்பட்ட உடல், மூச்சு, மனம் மற்றும் ஆன்மா சம்பந்தமான ஓர் அற்புத விஞ்ஞானமாகும். ஹடயோகம்-ஆசனம், பிராணாயாமம், முத்திரை, பந்தம் ஷட்கர்மா, தியானம் என ஆறு முக்கிய அங்கங்களை கொண்டுள்ளது.

    யோகத்தில் வரும் ஆசனங்கள். உடலை ஆரோக்கியமடையச் செய்யவும். பிராணாயாமம் மூச்சை ஒழுங்குபடுத்தி நீண்ட ஆயுளை அடையவும், முத்திரைகள் குறிப்பிட்ட நாடி, நரம்புகளில் பிராஹ சக்தியை (மின்காந்த சக்தியை) செலுத்தவும், வந்தங்கள் குறிப்பிட்ட நாடிகளில் பிராண சக்தியை நிலை நிறுத்தவும், ஷட்கர்மா உடலின் உள் உறுப்புகளை தூய்மைப்படுத்தவும், தியானம் மனதை தூய்மைப்படுத்தவும், தனது நிஜவடிவான இறை தன்மையை அறியவும் உதவுகிறது.

    தற்கால நவீன மருத்துவம்-எலும்பு மண்டலம், தசை மண்டலம், சுவாச இயக்க மண்டலம், ரத்த சுழற்சி மண்டலம், உணவூட்ட சுழற்சி மண்டலம், கழிவு, நீக்க மண்டலம், மூளை மற்றும் நரம்பு மண்டலம், நாளமில்லா சுரப்பி மண்டலம், என உடல் இயக்கத்தை பிரித்து விவரித்து கூறுகின்றன. யோகப் பயிற்சிகள் இந்த அனைத்து இயக்கங்களும் சரியாக இயங்க உதவுவதோடு மட்டுமல்லாமல் நவீன மருத்துவம் இன்னும் முழுமையாக தெரிந்து கொள்ள முடியாத நுட்ப உடல், காரண உடல் மற்றும் ஆன்மாவை அறிந்து கொள்ளவும் யோகம் வழிகாட்டுகிறது.

    எலும்பு மண்டலம்

    மனித உடலுக்கு அடிப்படை உருவத்தை எலும்புகள் அமைத்துக் கொடுக்கின்றன. மண்டை ஓடு, முதுகெலும்புத் தொடர், மார்பு எலும்பு, விலா எலும்பு, இடுப்பு எலும்பு, மேற்கை எலும்பு, கீழ்க்கை எலும்பு, தொடை எலும்பு, கால் எலும்பு, விரல் எலும்புகள் எனப் பலவகை எலும்புகள் நம் உடலில் உள்ளன. மூளையிலிருந்து உடலெங்கும் பரவி நிற்கும் நரம்புகள் முதுகெலும்புத் தொடரை சார்ந்து செல்கின்றன. முதுகெலும்புத் தொடர் முன்னோக்கியும், பின் நோக்கியும், பக்கவாட்டிலும் வளையக்கூடிய தன்மை உள்ளவரை, இளமை, சுறுசுறுப்பு நீடிக்கும்.

    முறையான ஆசனப் பயிற்சிகள் எலும்புகளை உறுதிப்படுத்தி அவைகளின் இயல்பான வளைவு தன்மையை மிகச் செய்கின்றன. உத்தித திரிகோணாசன நிலை முழு முதுகெலுப்புத் தொடருக்கும், அதிகபட்சமாக 85 (டிகிரி) வரை பக்க வளைவைத் தருகிறது. இடுப்பு-20, மார்பு-20, கழுத்து-35-45 (டிகிரி) வரை வளைவு பெறுகின்றன. இதனால் எலும்புகளில் அமைந்துள்ள அனைத்து பந்தகங்களும் (Ligaments) மற்றும் தசைகளும் நன்கு நீட்சி (Stretch) அடைகின்றன.

    சசாங்காசன நிலை சட்டகத்திற்கு முன் நோக்கி 110 வளைவைத் தருகிறது. இந்த ஆசனம் முதுகெலும்பு பந்தகங்களுக்கு ஓய்வளிப்பதுடன் பின்புறத் தசைகளை நீட்சியடையச் செய்கின்றன. மேலும் நிற்கும் நிலையில் இடுப்பு முன்னெலும்பு இடைத்தட்டுகளில் சாதாரணமாய் காணப்படும் அழுத்தத்தை விடுக்கின்றன.



    தசை மண்டலம்

    உடலின் அசைவுகளுக்கு எலும்புகள் காரணம் என்றால் அந்த எலும்புகளை இயக்குபவை தசைகள்தான் தசைகள் எலும்புகளோடும், மூட்டுகளோடும் தசை நார்களால் இணைக்கப்பட்டுள்ளன. எலும்புகளை மூடி உடலுக்கு வடிவையும், அழகையும் தசைகளே தருகின்றன. ஆசனம் பயிற்சிகள் ஒவ்வொரு தசைகளையும் முறையாக இயக்கி உடலை அழகான வடிவடையதாக்குகிறது மற்றும் பலப்படுத்துகிறது. ஆசனப் பயிற்சியின் மெதுவான இயக்கங்களும் ஆழமான மூச்சும் தசைகளுக்கு பிராணவாயுவின் விநியோகத்தை அதிகரிப்பதால் தசை நார்களில் லாக்டிக் அமிலம் தங்குவதைத் தடுக்கிறது.

    பஸ்சிமோந்தாசனம்-முட்டி, பாதம் மற்றும் கழுத்துப் பகுதி எக்ஸ்டென்சார் (extensors) தசைகளை இயக்குவதுடன் முட்டி பந்தகங்கள் மற்றும் முதுகுத்தசைகளை நீட்டியடையச் செய்கிறது. பூர்ண புஜங்காசன நிலையில் முட்டி, பாதம், முதுகெலும்பு மற்றும் கழுத்துப் பகுதிகளில் உள்ள பிளக்சார் தசைகள் இயக்கப்படுகின்றன.

    ஆசனங்களின் எதிரெதிராக செயல்படும் ஒவ்வொரு இணைத் தசைகளையும் அடுத்தடுத்து முறையாக செயல்பட வைக்கிறது. எடுத்துக்காட்டா முன் நோக்கி வளையும் பஸ்சிமோத்தாசனத்தையும், பின் நோக்கி வளையும் பூர்ண புஜங்காசனத்தையும் கூறலாம். இத்தகைய மாற்று ஆசனப் பயிற்சிகளினால் தசைகளை இளமையுடனும், மீள் தன்மையுடனும் மேலும் ஒன்றுக்கொன்று சம நிலையிலும் வைக்க முடிகிறது.

    சுவாச இயக்க மண்டலம்

    உயிர் வாழ்க்கைக்கு அவசியமான பிராண வாயுவை நாம் சுவாசிப்பதன் மூலம் பெறுகிறோம். நுரையீரல்கள் நன்றாக விரிந்தால்தான் நாம் நிறைய பிராண வாயுவைப் பெற முடியும். அதே போல் நுரையீரல்கள் நன்றாகச் சுருங்கினால்தான் நாம் கரியமில வாயுவை அதிக அளவு வெளியேற்ற முடியும். உடம்பு நிமிர்ந்த நிலையில் இருக்கும் போது இது எளிதாக நடைபெறும். ஆனால் மக்களில் அநேகம் பேர் உடலை எப்போதும் கூனி குறுகியபடி வைத்துக் கொள்வதால் சுவாச இயக்கம் சீராக நடைபெற இயலுவதில்லை.

    ஒவ்வாமை, ஆஸ்துமா போன்றவற்றினால் பாதிக்கப்படும் போது நுரையீரல்களின் சிறுகுழல்கள் மற்றும் காற்று நுண்ணுறைகள் இறுக்கமடைகின்றன. சுவாசத் தசை நார்கள் வலுவிழக்கின்றன. நோயின் தன்மை அதிகரிக்கும் போது அசுத்தக் காற்றை வெளியேற்றவோ, சுத்தக் காற்றை உட்கொள்ளவோ முடியாமல் நோயாளிகள் மிகவும் துன்பப்படுவர்.

    புஜங்காசன, உஷ்ட்ராசனம், மதஸ்யாசனம் போன்ற ஆசனங்களும், கபால பாத்தி போன்ற வயிற்று சுவாச பயிற்சிகளும் சுவாச இயக்கத்திற்கு உதவும் மூச்சு, சுவாச குழல், உதரவிதானம், மார்புக்கூடு, விலா இடைத் தசைகள் மற்றும் நுரையீல்களின் செயலை சீர்படுத்தி எல்லா சுவாச பணிகளையும் மேம்படுத்துகிறது. நாடி சோதனா போன்ற பிராணாயாமப் பயிற்சியினால் சாதாரண மூச்சில் நுரையீரல்களுக்கு செல்லும் காற்றின் அளவைவிட ஐந்து மடங்கு காற்று அதிகமாக நுரையீரல்களுக்கு செல்வதுடன் வலுவான தசைகளை உருவாக்குகின்றன.



    ரத்த சுழற்சி மண்டலம்

    உடலில் பல பாகங்களில் வளர்சிதை மாற்றத்தின்போது ஏற்படும் கழிவுகள் கலந்த அசுத்த ரத்தத்தை சிரைகளின் வழியாக இருதயம் பெற்று நுரையீரல்களுக்கு அனுப்பி, பிராணவாயு கலந்த சுத்த ரத்தமாக மாற்றி, மீண்டும் நுரையீரல்களிலிருந்து இருதயம் பெற்று, இருதயத்திலிருந்து வெளியேறும் தமனிகள் (Artevie) வழியாக உடல் முழுவதும் சுத்த ரத்தத்தை பாய்ச்சுகிறது.

    ரத்தம் பிராண வாயுவையும், ஜீரண உறுப்புகள் உணவிலிருந்து கிரகித்துத் தரும் சத்துக்களையும் நாளமில்லா சுரப்பிகள் சுரக்கும் ஹார்மோன்களையும் உடலின் திசுக்களுக்கு வழங்கி உடலில் ஆங்காங்கே வெளிப்படும் கழிவுகளையும், கரியமில வாயுவையும், சிறுநீரகங்கள், சருமம் மற்றும் நுரையீரல்களுக்கு எடுத்துச் செல்லும் பணியை செய்கிறது.

    ரத்த சுழற்சி என்பது ஒரு ஆரோக்கியமான இருதயத்தையும், முதன்மை தமனிகள் மற்றும் சிரைகளில் (Veines) இருந்து சிறிய நுண் ரத்தக்குழல்கள் வரை மீள்தன்மை மற்றும் அடைப்புகள் அற்ற ரத்த நாளங்களையும் நம்பியுள்ளது.

    அனைத்து ஆசனங்களும், குறிப்பாக சிரசாசனம், சர்வாங்காசனம் போன்ற தலைகீழாக வரும்படி செய்யும் ஆசனப் பயிற்சிகள் ரத்த சுழற்சிக்கு நன்மை அளிக்கிறது. தலைகீழாக நிற்கும் போது புவி ஈர்ப்பு விசையின் விளைவை மாற்றி அமைப்பதால் இருதயம் தரும் அழுத்தம் இன்றியே தலைக்கும், கழுத்திற்கும் ரத்தம் கீழ்நோக்கி ஓடி வருகிறது. இதனால் இருதயம் ஓய்வு பெற்று மீண்டும் நன்கு இயங்கும் ஆற்றலை பெறுகிறது.

    உடலின் தலைகீழ் பயிற்சியான ஆசனங்கள் வால்வுகளும், சிரைச்சுவர்களும் ஓய்வு பெற உதவுகின்றன. சில குறிப்பிட்ட ஆசனங்கள் வெரிகோஸ் நிலையை வராமல் தடுப்பதுடன் அந்தக் குறைபாட்டை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தவும் பயன்படுகிறது.

    பொதுவாக ஆசனப் பயிற்சிகள் உடல் தசைகளை மெதுவாக அமுக்குவது போல செய்வதால், திசுக்களில் உள்ள தேவையற்ற கழிவுகளை கொண்ட திரவங்களை வெளியேற்றுகிறது. மேலும் திசுக்களை நீட்சி அடைய வைப்பதால் புதிய வாழ்வு தரும் உணவுப் பொருட்கள் மற்றும் ஆற்றல் ஆகியவை கொண்ட திரவங்கள் உட்செல்ல வைக்கிறது.

    உத்ரவிதானத்தின் சுவாச அசைவுகள் ஜீரண உறுப்புகளை தொடர்ச்சியாக அமுக்கிவிடுவதால் அவற்றை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. அக்னிசாரா கிரியா உதரவிதானத்தை நேரடியாக பலப்படுத்த உதவுகிறது. புஜங்காசனம், சவாசனம் போன்ற பின் வளைந்து செய்யும் ஆசனங்களும் தண்டுவட சுழற்ப்பயிற்சியான அர்த்த மத்ஸ்பேந்திராசனம் ஆகியவையும், உதரவிதானம் மற்றும் வயிற்றிலுள்ள முக்கியமான உறுப்புகளை அமுக்கி விடுவதன்மூலம் ஜீரண கருவிகளின் கோளாறுகளை நீக்கி அவ்வுறுப்புகள் நல்ல ஆரோக்கியத்துடன் செயல்பட வைக்கிறது.

    மேலும் கழிவு நீக்க மண்டலம், மூளை மற்றும் நரம்பு மண்டலம், நாளமில்லா சுரப்பி மண்டலம் போன்ற எல்லா மண்டலங்களும் நன்கு இயங்க, குறைபாடுகள் நீங்க யோகப்பயிற்சி உதவுகிறது.

    யோகத்தை பயிலுங்கள் உடல் மன ஆரோக்கியத்துடன் வாழுங்கள். #InternationalYogaDay2018 #yoga
    Next Story
    ×