search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கணினி யோகா பற்றி தெரியுமா?
    X

    கணினி யோகா பற்றி தெரியுமா?

    கணினியால் உருவாகும் பாதிப்புகளில் இருந்து விடுபட கணினி யோகா எனும் பயிற்சி முறை உள்ளதை நீங்கள் அறிவீர்களா? இதோ சில கணினி யோகா பயிற்சிகளை பார்க்கலாம்.
    கணினிகள் இன்று அத்தியாவசியமாகிவிட்டது. அலுவலகப் பணியைத் தாண்டி ஒவ்வொரு வீட்டிலும் கணினிகள் ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டன. இணையதளம் வழியே டி.வி. நிகழ்ச்சிகள் முதல் உலக நிகழ்வுகள் அனைத்தும் ரசிக்கப்படுகின்றன. மிச்சசொச்சம் அலுவலகப் பணிகளை வீட்டிலிருந்தே செய்வோர் உண்டு. இப்படி சதா கணினியில் பணி செய்வது பல்வேறு பாதிப்புகளை உருவாக்கலாம். உடல்சோர்வு, மனச்சோர்வு, கழுத்துவலி, மணிக்கட்டு வலி, தோள்பட்டை மற்றும் விரல்களிலும் வலி உண்டாகலாம். கணினியால் உருவாகும் இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து விடுபட கணினி யோகா எனும் பயிற்சி முறை உள்ளதை நீங்கள் அறிவீர்களா? இதோ சில கணினி யோகா பயிற்சிகள்...

    * உங்கள் தலையை இடமும், வலமுமாக அசைக்கவும். அதுபோல முன்னும் பின்னுமாக அசைத்து பயிற்சி செய்யவும். மனதில் உங்களுக்கு விருப்பமான ஒன்றை நினைத்துக் கொள்ளலாம். தலை அசைவை ‘ஓ’ என்ற எழுத்து எழுதுவதாக எண்ணிக் கொண்டு அதன் போக்கிற்கு கழுத்தை அசைத்து தலைக்கு பயிற்சி கொடுக்கலாம். இது மேல்-கீழ், சுழிவு என அனைத்து வகை இயக்கங்களுக்கும் வழி வகுக்கும். இதனால் கணினியால் ஏற்பட்ட கழுத்து வலி மறையும்.

    * இதேபோல தோள்பட்டை வலியை நீக்க, தோள்பட்டையை மேலும் கீழும் அசைத்து ஒரு வட்டம் (ரவுண்டு) அடிப்பதுபோல இயக்குங்கள். இப்படி சுமார் 10 முறை செய்துவிட்டு, பின்னர் அடுத்த தோள் பட்டையில் இதுபோல பயிற்சி செய்யுங்கள். அடுத்ததாக இரு தோள் பட்டைகளுக்கும் ஒரே நேரத்தில் பயிற்சி செய்யலாம். இது நீண்ட நேர தட்டுச்சு செய்வதால் ஏற்படும் தோள்பட்டை வலியை மாயமாக்கும்.



    * மற்றொரு வகையிலும் தோள்பட்டைக்கு பயிற்சி அளிக்கலாம். கையை மடக்கி விரல்களால் தோள் பட்டையை தொட்டுக் கொண்டு கைகளை பக்கவாட்டில் சில சுற்றுகள் சுற்றலாம். இதேபோல எதிர் திசையிலும் சிலமுறை சுற்றி பயிற்சி செய்யலாம்.

    * அதிகமான தட்டச்சுப் பயிற்சியால் ஏற்படும் மணிக்கட்டு வலியையும் கணினி யோகாவால் போக்க முடியும். இதற்காக மணிக்கட்டை ஒரு வட்டமாக கடிகார சுழற்சியில் அசைக்கவும், பின்னர் எதிர் கடிகார சுழற்சியில் மணிக்கட்டை அசைக்கவும். இப்போது அடுத்த மணிக்கட்டில் இதேபோல பயிற்சி செய்யவும். பின்னர் இரு கைகளிலும் ஒரே நேரத்தில் பயிற்சி செய்யலாம்.

    * தரையில் அல்லது நாற்காலியில் நேராக அமர்ந்து கொண்டு தண்டுவடத்திற்கு பயிற்சி அளிக்கலாம். உடலை முடிந்தவரை (இடுப்பிற்கு மேல்பகுதியை மட்டும்) இடது புறத்தில் இருந்து வலது பக்கத்திற்கு திருப்புவது, பின்னர் வலதுபுறத்தில் இருந்து இடது புறத்திற்கு திருப்புவது என்று பயிற்சி செய்யலாம். பின்னர் அமர்ந்தபடியே குனிந்து அடிவயிறு தொடையில் படும் வகையில் படுத்து எழுந்தும், பின்னோக்கி முடிந்தவரை சாய்ந்து எழுந்தும் பயிற்சி செய்யலாம். இது முதுகுவலி, அசதி போன்றவற்றை அகற்றும். உற்சாகம் தரும்.

    சதா அமர்ந்த படி கணினியில் பணி செய்வதால், உடல் வெப்பமடையலாம். பாதங்களுக்கு சீராக ரத்த ஓட்டம் பாய்வதிலும் தடை ஏற்பட்டிருக்கலாம். இந்த பாதிப்புகளை சீராக்க, பாதத்தின் விரல்களை மட்டும் தரையில் ஊன்றி, குதிகால்களை உயர்த்தி நின்று சில வினாடிகள் பயிற்சி செய்யலாம். கால்வலியை போக்கி உடல் முழுவதும் ரத்தஓட்டம் சீராகவும், நரம்புகள் புத்துணர்ச்சி பெறவும் இந்த பயிற்சி உதவும்.

    * உங்களுக்கு நீங்களே மசாஜ் செய்து கொள்வது புத்துணர்ச்சிக்கு வழி வகுக்கும். விரல்களால் தலையை கோரி விடுவது, அசைப்பது என தொடங்கி, கைகால்களை மெதுவாக அழுத்தி மசாஜ் செய்யலாம், விரல்களை சொடுக்கி அதன் அயர்ச்சியைப் போக்கலாம். அன்புக்குரியவர்கள் இருந்தால் ஒருவருக்கு மற்றவர் மசாஜ் செய்துவிடுவது பாசப் பிணைப்பை அதிகரிக்கும்.

    * முழுக்க முழுக்க கணினியில் பணி செய்வர்கள் தினமும் 20 நிமிடம் இந்த கணினி யோகா பயிற்சி செய்வது உடல்சோர்வு தணித்து புத்துணர்ச்சியாக வைத்திருக்கும். நல்ல உறக்கத்தையும், உற்சாகத்தையும் தரும். அடுத்தநாள் பணிகளை ஆனந்தத்துடன் செய்ய இது அவசியமாகும்! 
    Next Story
    ×