search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    முதன் முதலான தியானம் செய்யும் போது மனதில் ஏற்படும் மாற்றங்கள்
    X

    முதன் முதலான தியானம் செய்யும் போது மனதில் ஏற்படும் மாற்றங்கள்

    தியானத்திற்கான பயணத்தை விடாமுயற்சியோடு தொடர்ந்தால் உங்களுக்குக் கிடைக்கக் கூடிய பலன்கள் அளவிட முடியாதவை.
    உற்சாகமாக தியானம் செய்ய ஆரம்பித்து அதைத் தொடர்ந்து செய்ய முடியாமல் கைவிட்டு விடும் மனிதர்கள் ஏராளம். பலரும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி தியானத்தைக் கைவிட்டு விடுகிறார்கள். சில சமயங்களில் கைவிடாவிட்டாலும் தியானம் எந்திரத்தனமான ஒரு வேலை போல ஆகிறது. அதற்கு பல காரணங்கள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்….

    நாம் தியானம் செய்ய ஆரம்பிக்கிறோம். நிறைய எதிர்பார்ப்புகளுடன் ஆரம்பிக்கிற தியான அனுபவம் நாம் எதிர்பார்க்கிற விதத்திலும், எதிர்பார்க்கிற வேகத்திலும் நமக்குக் கிடைப்பதில்லை. அதனால் அலுப்பு தட்ட ஆரம்பிக்கிறது. சிலர் வேறு குருவைத் தேடிப் போவதுண்டு.

    வேறு சில பயிற்சி முகாம்களை நாடிப் போவதுண்டு. அங்கும் ஆரம்பத்தில் ஒரு உற்சாகம், ஒரு எதிர்பார்ப்பு பின் ஏமாற்றம், அலுப்பு என்று தொடர்கிறது. யதார்த்தத்திற்கு ஒத்து வராத நம் எதிர்பார்ப்புகளே தியானம் தொடர முடியாமைக்கு முதல் காரணம் என்று சொல்லலாம்.

    இரண்டாவது, தியானத்திற்குப் பொருத்தமான சூழ்நிலைகள் பயிற்சி இடங்களில் கிடைக்கின்றன. அங்கு தியானத்தின் மூலம் நல்ல அமைதி கிடைப்பது போல பயில்பவர்கள் உணர்கிறார்கள்.

    மூன்றாவது, சடங்குகளிற்கு அளவுக்கதிக முக்கியத்துவம் தந்து சத்தான விஷயங்களை புறக்கணிப்பது. நான் தினமும் அரை மணி நேரம் தியானம் செய்கிறேன் என்று சொல்லி பெயருக்கு ஆண்டாண்டு காலம் தினமும் அரைமணி நேரம் தியானத்திற்காக அமர்ந்தாலும் பயன் இருக்காது.



    தொடர்ந்து தியானத்தில் ஈடுபடுவது என்பது வேறு, தொடர்ந்து தியானம் என்ற பெயரில் எந்திரத்தனமாய் அமர்ந்திருப்பது என்பது வேறு. தியானம் வெறும் சடங்காகும் போது அர்த்தமில்லாததாகப் போகிறது.

    ஆரம்ப காலங்களில் அரைமணி நேரம் தியானப் பயிற்சி செய்வோமானால், அதில் ஒருசில வினாடிகள் மனம் தியானத்தில் லயிக்குமானால் அதுவே பெரிய வெற்றி. உண்மையில் தியானம் வெற்றிகரமாக கைகூடினால் மனதில் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒருவித அமைதி கண்டிப்பாக உணரப்படும்.

    அது தொடருமேயானால் உங்கள் முகத்தை மாற்றும். உங்கள் பேச்சை மாற்றும். நீங்கள் வாழ்க்கையைப் பார்க்கும் விதத்தை மாற்றும். நீங்கள் செயலாற்றும் முறையை மாற்றும். நீங்கள் அறிகிறீர்களோ இல்லையோ உங்களிடம் பழகுபவர்கள் அதை உங்களிடம் உணர ஆரம்பிப்பார்கள்.

    தியானத்தில் நீங்கள் வேரூன்றிய பின் தியானத்தின் போது நீங்கள் அனுபவித்த அமைதி உங்கள் தினசரி வாழ்க்கையிலும் தொடரும். காலப்போக்கில் நீங்கள் எங்கும், எப்போதும் உங்கள் விருப்பப்படி தியான நிலைக்குள் புக முடியும் என்ற நிலை ஏற்படும்.



    தியான நிலைக்கே மனம் போகாமல் போகலாம். அதைக் கண்டு ஒருவர் பின்வாங்கி விடக்கூடாது. உள் மனதில் உறங்கிக் கிடந்த ஏதோ ஒரு குப்பையை மனம் மேல் தளத்திற்கு எறிந்திருக்கின்றது என்று அர்த்தம். அதைக்கவனியுங்கள்.

    அதற்கான காரணம் உங்களுக்குள்ளே இருந்திருக்கின்றது என்பதை அங்கீகரியுங்கள். விருப்பு வெறுப்பில்லாமல் ஆராயுங்கள். பின் அது குப்பை என்பதை உணர்ந்து, தெளியுங்கள். இதை ஒழுங்காகச் செய்தீர்களானால் இனி அந்தக் குப்பை திரும்பி வந்து உங்களைத் தொந்திரவு செய்யாது. மறுபடி முன்னேற்றம் தொடரும்.

    திடீரென்று இன்னொரு நாள் இன்னொரு குப்பை மேலே வரலாம். இதுவும் சறுக்கல் போல் தோன்றலாம். முதல் குப்பையைக் கையாண்டது போலவே இதையும் நீங்கள் கையாண்டு விலக்கி விடுங்கள். உள்ளே ஆழத்தில் உள்ள குப்பைகள் முழுவதுமாக நீக்கப்படும் வரை இந்த அனுபவங்கள் நிச்சயமாய் தொடரும்.

    ஆனால் தியானத்திற்கான பயணத்தில் இது போன்ற அனுபவங்கள் சகஜம் என்பதைப் புரிந்து கொண்டு தியானத்தைத் தொடருங்கள். விடாமுயற்சியோடு தொடர்ந்தால் உங்களுக்குக் கிடைக்கக் கூடிய பலன்கள் அளவிட முடியாதவை.
    Next Story
    ×