search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    இந்தி திணிப்பு: மாணவர்கள் கருத்து சொல்லட்டும்
    X

    இந்தி திணிப்பு: மாணவர்கள் கருத்து சொல்லட்டும்

    இந்தி பேசும் மாநில மாணவர்களைப்போல, 3-வது மொழியாக எந்த மொழியை கற்கவேண்டும் என்பது மாணவர்களின் முடிவுக்கே விடப்பட்டுள்ளது.
    கல்வித்தரத்தை உயர்த்த வேண்டுமென்ற குரல் நாடு முழுவதும் எதிரொலிக்கிறது. அந்தவகையில், கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின்போது பா.ஜ.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ‘தேசிய கல்வி கொள்கையை வகுக்க பா.ஜ.க. தேசிய கல்வி ஆணையத்தை அமைக்கும்’ என்று கூறப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், மத்திய அரசாங்கத்தின் முன்னாள் செயலாளர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. சொன்னதுபோல, 2 ஆண்டுகளில் இந்த குழு தனது அறிக்கையை தாக்கல் செய்தது.

    ஆனால், இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதால், அரசு மீண்டும் இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் ஒரு குழுவை 2017-ல் அமைத்தது. இந்த குழு தேசிய கல்வி கொள்கைக்காக ஒரு வரைவு அறிக்கையை தயாரித்து, புதிதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரியாக பொறுப்பேற்ற ரமேஷ் பொக்ரியால் நிஷாங்கிடம் தாக்கல் செய்தது. இந்த அறிக்கையின் முழு விவரம் மனிதவளத்துறை அமைச்சகத்தின் இணையதளமான www.mhrd.gov.in -ல் வெளியிடப்பட்டுள்ளது.

    484 பக்கங்கள் கொண்ட இந்த வரைவு அறிக்கையில் பல வரவேற்கத்தக்க சீர்த்திருத்தங்கள் இடம்பெற்றிருந்தாலும், மொழிகளை பொறுத்தமட்டில், ஒரு பெரிய சர்ச்சையை கிளப்பியது. அனைத்து மாநிலங்களிலும் மும்மொழி கல்வித்திட்டத்தை கொண்டுவரவேண்டும். இந்தியை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு இந்தி தவிர, ஆங்கிலமும், மேலும் ஒரு இந்திய மொழியும் கற்றுக்கொடுக்கவேண்டும். இந்தி பேசாத மாநிலங்களை சேர்ந்தவர்கள் அவர்களின் தாய்மொழியோடு, ஆங்கிலம் மற்றும் இந்தியை கட்டாயம் பயிலவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

    இதைத்தொடர்ந்து தமிழ்நாடு, கர்நாடகம், மேற்குவங்காளம் போன்ற பல மாநிலங்களில் இது இந்தி திணிப்பு என்று அரசியல் கட்சிகளிடமிருந்து பலத்த எதிர்ப்பு அலைகள் கிளம்பின. தமிழக அரசின் சார்பில் இருமொழி கொள்கைதான் எங்கள் உறுதியான நிலைப்பாடு என்று கூறப்பட்டது. இந்தநிலையில், மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோர், ‘மக்களின் கருத்துகளை கேட்டறிந்த பிறகே கல்விக்குழுவின் வரைவு அறிக்கை அமல்படுத்தப்படும்’ என்று தமிழில் டுவிட்டரில் பதிவு செய்துள்ளனர். ஆனாலும் எதிர்ப்புகள் குறையவில்லை.

    இந்தநிலையில், வரைவு திட்டத்தில் நேற்று இணையதளத்தில் மாற்றம் வெளியிடப்பட்டன. இதன்படி, இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழியாக இந்தியை கட்டாயமாக கற்பிக்கவேண்டிய அவசியம் இல்லை. இந்தி பேசும் மாநில மாணவர்களைப்போல, 3-வது மொழியாக எந்த மொழியை கற்கவேண்டும் என்பது மாணவர்களின் முடிவுக்கே விடப்பட்டுள்ளது. ஆக, இப்போது இந்தி திணிப்பு இல்லை, ஆனால் மும்மொழி கல்வித்திட்டம் வேண்டுமா?, வேண்டாமா? என்பதுதான் தமிழ்நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினையாகும்.

    இதில், அரசோ, அரசியல் கட்சிகளோ என்ன நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டாலும், கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர் என்ன கருதுகிறார்கள்? என்று அறிந்து முடிவெடுப்பது சாலச்சிறந்ததாகும். தான் என்ன படிக்கவேண்டும் என்பதை மாணவர்களும், பெற்றோர்களுமே முடிவு செய்யட்டும். மொழிகளை கற்கும் விஷயத்தில் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை இந்த மாதம் 30-ந்தேதிக்குள் nep.edu@nic.in என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது. எனவே, இருமொழி கல்வித்திட்டம்தான் வேண்டுமா,? மும்மொழி கல்வித்திட்டம்தான் வேண்டுமா? என்பதையெல்லாம் தெரிவிக்கும் வகையில், தமிழ்நாட்டிலிருந்து பெருமளவில் கருத்துகள் பதிவிடப்படவேண்டும் என்பதைத்தான் சமுதாயம் எதிர்பார்க்கிறது.
    Next Story
    ×