search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சாகசம் செய்ய விரும்பு...
    X

    சாகசம் செய்ய விரும்பு...

    நமது பிள்ளைகளுக்கும் சாகசம் செய்ய ஆர்வம் உண்டு. எனவே அவர்களை விளையாட அனுமதியுங்கள். பிள்ளைகளை தைரியசாலிகளாகவும், சாதனையாளர்களாகவும், சாகசம் புரிபவர்களாகவும் வளருங்கள்.
    சென்னையைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமி லோகிதா 5 கி.மீட்டர் தூரம் மெரினா கடலில் நீந்தி சாதனை படைத்தார். கடலில் நீந்திய சிறுமியையும், நீந்த வைத்த தந்தையையும், தாயையும், பயிற்சியாளரையும் பாராட்ட வேண்டும். இவரது தந்தை மகிமைதாஸ் சென்னை நகர போலீஸ் காவலர், தேசிய நீச்சல் வீரர் சென்ற ஆண்டு என்னுடன் இலங்கையிலிருந்து ராமேசுவரத்திற்கு கடலில் நீந்தியவர்.

    பயமறியாத லோகிதா இன்று சிறுவர்களின் கதாநாயகி. ஆனால் இந்த சாதனை பலருக்கும் தெரியாது. அதைப்பற்றி கவலையும் நமக்கு இல்லை. இது ஒரு உண்மையான சாகசம். ஆனால் சாகசத்திற்கு மரியாதை இல்லாமல் போய்விட்டது. கிரிக்கெட் வீரர்களின் சாதனை மட்டும் தெரிந்தால் போதும் என்ற நிலைதான் இன்று.

    விளையாட்டில் சாதித்தவர்கள் கூட அவர்களது பிள்ளைகளை விளையாட அனுமதிப்பது இல்லை. அந்த அளவுக்கு விளையாட்டு மீது அக்கறையில்லாமல் போய்விட்டது. எனவே இன்று பிள்ளைகளிடம் சாதனை உணர்வு வளர்க்க வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம். அது நமது கடமையாகவும் இருக்கிறது. முன்பெல்லாம் நீச்சல் அனைவருக்கும் தெரிந்திருந்தது. ஆற்றிலும், குளத்திலும், கிணற்றிலும் நீந்தினார்கள். ஆறுகளும், குளங்களும் வற்றிய பிறகு அதிலும் சில ஆறுகள் சாக்கடையான பிறகு நீந்த முடியவில்லை. இளைஞர்களுக்கு நீந்தத் தெரியாத நிலை இன்று உள்ளது. நகர்ப்புறங்களில் மட்டும் நீச்சல் குளங்களில் நீச்சல் கற்றுக்கொள்ள முடிகிறது.

    தமிழ்நாட்டில் மட்டும் 1,000 கி.மீட்டர் தூரம் கடற்கரை இருக்கிறது. கடற்கரை மாவட்டத்து மக்கள் கூட கடலில் நீந்துவதில்லை. நீந்திப் பழக்கமில்லை. பெற்றோரும் அனுமதிப்பது இல்லை. அவ்வளவு பயம். கடலில் கால் நனைக்க போகிறவர்கள் கூட நீச்சல் தெரியாததால் கடல் நீரில் மூழ்கி இறக்கும் நிலைதான் உள்ளது. ஆனால் நமது ஊரில் வேலை செய்யும் வெளிநாட்டினர் இங்கே தினமும் கடலில் நீந்துகிறார்கள். அவர்களுக்கு பயமில்லையா? உயிர் மீது அக்கறை இல்லையா? இருக்கும். ஆனால் அவர்களுக்கு உயிரைவிட சாகசம் செய்வது பெரியதாகத் தெரிந்திருக்கிறது. அதனால்தான் உயர் தொழில்நுட்ப வேலை செய்ய சாதனை படைத்த அவர்களை நாம் இங்கு அழைத்து வந்திருக்கிறோம்.

    இப்படி வெளிநாட்டவர்கள் எல்லாம் பிள்ளைகளுக்கு சாகச பயிற்சி தரும்போது நாம் மட்டும் பிள்ளைகளை பாதுகாப்பாக பத்திரப்படுத்தி வைப்பது நல்லதா? இமயமலையின் எவரெஸ்டு சிகரம் 8,848 மீட்டர். இன்று இதில் ஏற வரிசையில் மலையேறும் வீரர்கள் காத்து நிற்பதாக ஒரு புகைப்படத்தைப் பார்த்தேன். கடந்த சில நாட்களில் ஏறச் சென்ற ஏழு பேர் உயிர் இழந்திருக்கிறார்கள் என்று செய்தி வருகிறது. அந்த அளவுக்கு உயிரை துச்சமாக மதித்து உலக மக்கள் சாகச செயல்கள் புரிய விழையும் போது நாம் மட்டும் பாதுகாப்பாக இருக்க நினைத்தால் என்னவாகும்.

    சாகசம் புரிபவர்கள் ஆபத்தை எதிர்கொள்வார்கள். அவர்கள் ஆராய்ச்சியிலும், தொழிலிலும், வணிகத்திலும், விளையாட்டிலும், போரிலும் துணிந்து இறங்குவார்கள். எனவேதான் ஆப்பிள் ஐ போன், மைக்ரோசாப்ட், அமேசான் என்று உலக நிறுவனங்களை சாகசக்காரர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். சோம்பியிருக்கும் மக்களால் அதெல்லாம் முடியாது. அவர்கள் முற்கால பெருமைகளை பேசிக்கொண்டிருப்பார்கள்.

    சாகச விளையாட்டுகளுக்கும், சாதனை விளையாட்டுகளுக்கும் ஏன் இன்னும் நம்மிடம் அங்கீகாரம் இல்லாமல் போய்விட்டது என்று புரியவில்லை. ஓட்டப்பந்தயம், கையுந்து பந்து, கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி போன்ற விளையாட்டுகள் நம் நாட்டில் மிகவும் சிறப்பாக இருந்திருக்கின்றன. ஆனால் இப்போது அதற்கு அவ்வளவு வரவேற்பு இல்லை. 1956-ம் ஆண்டு மெல்போர்ன் ஒலிம்பிக் போட்டியில் இந்திய கால்பந்து அணி ஆஸ்திரேலியா அணியை தோற்கடித்து அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

    பின்னர் யுகோஸ்லாவாகியா அணியுடன் மோதி தோல்வி கண்டது. அது போல 1951-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு கையுந்து பந்து போட்டியில் நாம் தங்கப்பதக்கம் பெற்றுள்ளோம். ஆனால் இன்று நாம் உலககோப்பை போட்டியிலும் விளையாடக்கூட தகுதி இல்லாமல் போய்விட்டோம்.

    ஒலிம்பிக் போட்டிகள் உலக விளையாட்டுத் திருவிழா அதில் விளையாடி பதக்கம் பெறுவது ஒரு நாட்டிற்கு பெருமை சேர்க்கும். ஆனால் உலகிலேயே இரண்டாவது பெரிய நாடான இந்தியாவிற்கு 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஒரு தங்கப்பதக்கம் கூட கிடைக்கவில்லை.

    கையுந்து பந்து, கால்பந்து, ஓடுவது போன்றவை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள். ஆனால் சில பெற்றோர்கள் ஒலிம்பிக் அல்லாத விளையாட்டில் தங்களது பிள்ளைகளை உற்சாகமாக ஈடுபடுத்துகிறார்கள். இது கூட ஒரு வீண்வேலை என்றே தோன்றுகிறது. அதற்கு பதில் ஒலிம்பிக்கில் விளையாடும் விளையாட்டில் ஈடுபட வைத்தால் அந்த குழந்தைக்கும் உலக அரங்கில் ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கும், இந்தியாவிற்கும் ஒரு பதக்கம் கிடைத்திருக்கும்.

    காவல்துறையில் இப்போது சேரும் காவலர்களிடம் விளையாடுவீர்களா என்று கேட்டால் விளையாடுகிறோம் என்கிறார்கள். என்ன விளையாட்டு என்றால் கிரிக்கெட் என்கிறார்கள். கிரிக்கெட் ஒலிம்பிக் போட்டிகளில் இல்லவே இல்லை. அந்த விளையாட்டு விளையாடி என்ன பயன்? ஆனால் இதே காவல் துறையில் ஹாக்கி விளையாடிய வீரர்கள் பிரான்சிஸ், லட்சுமணன் ஆகியோர் 1956-ம் ஆண்டு மெல்போர்ன் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற இந்திய தேசிய அணியில் விளையாடியவர்கள். இதில் லட்சுமணன் இந்திய அணியின் கோல் கீப்பர் என்பது குறிப்பிடத்தக்கது. 1980-ம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் இந்தியா சார்பில் ஓடிய சுப்பிரமணியன் தமிழ்நாடு காவல்துறையில் காவலராக பணியாற்றியவர். அவருக்கு பதவி உயர்வு வழங்கி கவுரவித்தார் அன்றைய முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். ஆனால் அவர் காவல்துறையிலிருந்து விலகி ரெயில்வே துறைக்கு சென்றுவிட்டார் என்பது வேறுகதை.

    சாகச தன்மையுள்ள விளையாட்டுகளை நமது பிள்ளைகள் விளையாடவில்லை என்றால் நமக்கு ஒலிம்பிக் பதக்கம் கிடைக்குமா என்பது மட்டுமல்ல, சாகச குணம் கொண்ட உலக மக்களுடன் நமது பிள்ளைகள் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் வர்த்தகத்திலும் எப்படி போட்டியிட முடியும் என்பதுதான் முதல் கேள்வி. உலக மக்கள் ஓடி, சைக்கிள் ஓட்டி, நீச்சலடித்து, உடல்நலம் காத்து ஆரோக்கியமாக இருக்கும்போது அவர்களுடன் உடல் நலம் குறைந்த நமது பிள்ளைகள் எப்படி விளையாட்டில் போட்டியிட முடியும் என்பது இரண்டாவது கேள்வி. இப்படி விளையாடாத பிள்ளைகள் நோய்கள் பல வந்த பிறகு அவற்றை குணமாக்க நம்மிடம் போதுமான நிதி ஆதாரம் இருக்கிறதா என்பது மூன்றாவது கேள்வி.

    நமது பிள்ளைகளுக்கும் சாகசம் செய்ய ஆர்வம் உண்டு. எனவே அவர்களை விளையாட அனுமதியுங்கள். ஒலிம்பிக் விளையாட்டுகள் மேலானவை. குறிப்பாக நீச்சல் பழக்கிவிடுங்கள். வேடிக்கை விளையாட்டுகளையும், சோம்பேறி விளையாட்டுகளையும், சூதாட்ட விளையாட்டுகளையும், கம்ப்யூட்டர் விளையாட்டுகளையும் புறந்தள்ளுங்கள். பிள்ளைகளை தைரியசாலிகளாகவும், சாதனையாளர்களாகவும், சாகசம் புரிபவர்களாகவும் வளருங்கள்.

    பள்ளிக்கூடங்கள் திறக்கும் தருவாயில் உலக மக்கள் விளையாடும் உண்மையான விளையாட்டுகளை நமது பிள்ளைகள் விளையாடட்டும். விளையாடிக்கொண்டே படிக்கட்டும். படித்துக்கொண்டே விளையாடட்டும். இன்றைய சூழ்நிலையில் உண்மையான கல்வி என்பதும் அதுதான்.

    முனைவர் செ.சைலேந்திரபாபு,

    ஐ.பி.எஸ். காவல்துறை இயக்குனர்.
    Next Story
    ×