search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மாணவரும் சமூகநலத் தொண்டும்
    X

    மாணவரும் சமூகநலத் தொண்டும்

    இந்த சமுதாயத்திற்காக மாணவர்கள் ஆற்றவேண்டிய கடமைகள் உள்ளன. இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள். அவர்கள் சமுதாய உணர்வுடையவர்களாய் வளர்ந்தால்தான் வீடும், நாடும் நலம் பெறும்.
    என் கடன் பணிசெய்து கிடப்பதே என்பார் அப்பர். ஒவ்வொருவருக்கும் உரிய கடமைகள் உண்டு. இந்த சமுதாயத்திற்காக மாணவர்கள் ஆற்றவேண்டிய கடமைகள் உள்ளன. இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள். அவர்கள் சமுதாய உணர்வுடையவர்களாய் வளர்ந்தால்தான் வீடும், நாடும் நலம் பெறும்.

    ஓர் உயிர் படும் துன்பத்தை கண்டு அதனைத் தாங்கிக் கொள்ள இயலாமல் உடனே ஓடிச் சென்று உதவுவது தான் தொண்டு. அவ்வகையில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள நம் நாட்டு மக்களுக்கு செய்யவேண்டிய தொண்டுக்கு அளவே இல்லை. நம் சமுதாயம் வறுமை, கல்வியின்மை, அறியாமை, சாதிமத வேறுபாடுகள், தீண்டாமை, மூடப்பழக்க வழக்கங்கள் ஆகிய கொடுமைகளால் சிதைந்துள்ளது. குறிப்பாக கிராமங்களில் வாழும் மக்கள் மிகவும் பின்தங்கியுள்ளனர். சமுதாயத்தின் உறுப்பாய் விளங்கும் மாணவர்கள் சமுதாய மேம்பாட்டுக்காக தொண்டாற்றுவது கடமையாகும்.

    மாணவர்கள் தம் பள்ளி பருவத்தில் தொண்டு செய்வதற்கு வாய்ப்பாக பள்ளிகளில் செஞ்சிலுவை சங்கம், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்டம் போன்ற அமைப்புகள் உள்ளன. மாணவர்கள் இவ்வமைப்புகளில் சேர்ந்து தொண்டாற்றலாம்.

    தெருக்களை தூய்மை செய்தல், நீர்நிலைகளை தூய்மைப்படுத்துதல், சாலைகளை செப்பனிடுதல், மருத்துவ உதவி பெற வழிகாட்டுதல், விழாக்காலங்களில் கூட்டத்தை ஒழுங்குப்படுத்துதல், தவறிய பொருட் களைத் தேடி கண்டுபிடிக்க உதவுதல் ஆகிய தொண்டுகளை மாணவர்கள் மேற்கொள்ளலாம். எழுத்தறிவற்றவர்களுக்கு எழுத்தறிவை போதிக்கலாம்.

    செய்தித்தாள்களை வாசித்து காட்டலாம். நூல்நிலையங்கள், படிப்பகங்கள் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அரசின் செய்தித்துறையினர் உதவி கொண்டு வேளாண்மை, குடும்ப நலம், நோய்த்தடுப்பு முதலியன பற்றிய திரைப்படங்களை காட்டி பொது அறிவை வளர்க்க உதவலாம். கிராமங்களில் உள்ள விவசாயிகள் தம் ஓய்வு நேரத்தை பயன்படும் வகையில் போக்க அரசின் நிதிஉதவி பெற வழிகாட்டலாம். அதன் மூலம் அவர்கள் கோழி பண்ணைகள் வைத்தல், தேனீக்கள் வளர்த்தல், பாய் பின்னுதல், கூடை முடைதல் போன்ற கைத்தொழில்களை செய்ய அறிவுறுத்தலாம். நல்ல ஆட்சி அமைய நல்ல வேட்பாளர்களை வழிகாட்டலாம்.

    நகர்புறங்களில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த காவல்துறையினருக்கு உதவலாம். பள்ளி வகுப்பறையையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். ஏழை மாணவர்களுக்கும், படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கும் தம்மால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும். ஒழுக்கம் தவறும் மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். ஏழை மாணவர்களுக்கு ஆண்டு இறுதியில் தம்முடைய புத்தகங்களை இலவசமாக கொடுத்து உதவலாம்.

    இயற்கை சீற்றங்கள், புயல், வெள்ளம் போன்றவை நிகழும்போது, அந்த பகுதிக்கு சென்று நிவாரண பணிகளில் ஈடுபட்டு மக்களின் நலன் காக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான உணவு, உடை மற்றும் மருந்து பொருட்களை தந்து உதவவேண்டும். மஞ்சள் காமாலை, போலியோ மற்றும் இதர நோய் தடுப்பு பிரசாரங்களில் ஈடுபட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நாட்டுக்கும், வீட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் மாணவர்கள் திகழ வேண்டும். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று நினைத்து சமூக நலத்தொண்டாற்ற வேண்டும். 
    Next Story
    ×