search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    குழந்தைகளே கோடை வெயிலில் ஆட்டம் போடலாமா?

    குட்டீஸ், நீங்கள் எல்லாரும் விடுமுறை என்றாலே குதூகலமாகிவிடுவீர்கள்தானே? கோடையில் எங்கு சென்றாலும் வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்வது அவசியம்.
    கோடை, கத்தரி வெயில்போல காட்டமாக வாட்டி வதைக்கத் தொடங்கிவிட்டது. சிறுவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுவிட்டது. மீதி மாணவர்களுக்கும் இன்னும் சில நாட்களே பள்ளி இயங்க இருக்கிறது. பின்னர் விடுமுறைதான். குட்டீஸ், நீங்கள் எல்லாரும் விடுமுறை என்றாலே குதூகலமாகிவிடுவீர்கள்தானே? கோடையில் நீங்கள் எங்கே செல்ல திட்டமிட்டு இருக்கிறீர்கள்? சுற்றுலாவுக்கா, உறவினர் வீட்டிற்கா, இல்லை கோடை பயிற்சி வகுப்புகளுக்கா? எங்கு சென்றாலும் வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்வது அவசியம். கோடை வெயிலின் கடுமை பற்றியும், அதிலிருந்து தப்பிக்கும் வழிகளையும் தெரிந்துகொள்வோம்...

    வெயிலில் அலைந்தால்தானே நமக்குப் பாதிப்பு என்றுதான் பலரும் எண்ணுவோம். ஆனால் கோடையின் உக்கிரம் என்பது, நேரடியாக இல்லாமல் மறைமுகமாகவும் உடல் வெப்பம் மற்றும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. உடல் சூடு, சரும பாதிப்புகள், அதிக வியர்வை, உடல் அசதி என பாதிப்புகள் நீண்டு கொண்டே செல்லும்.

    கோடை வெப்பத்தால் ஏற்படும் சோர்வு உங்களை எளிதில் களைப்படைய வைத்துவிடும் குட்டீஸ். எனவே வெயிலிலும், வெப்பம் நிறைந்த இடங்களிலும் நீண்ட நேரம் விளையாடுவதை தவிர்க்க வேண்டும். கிரிக்கெட் விளையாடுவது, சைக்கிள் ஓட்டுவது மற்றும் பிற விஷயங்களுக்காக நண்பர்களுடன்/ தோழிகளுடன் வெயிலில் திரிவது தவறாகும். குறிப்பாக உச்சி வெயலில் கண்டிப்பாக வெளியே சுற்றுவதை தவிர்க்க வேண்டும்.

    வெயிலில் அதிகமாக சுற்றுவதால் ஏற்படும் களைப்பு சிலரை மயக்கத்தில் தள்ளிவிடும் என்பதால் கவனம் தேவை. சக தோழர்களோடு விளையாடும்போது மயக்கமடைந்தால் அவர்களும் திகைப்படைவார்கள். முதலுதவி பற்றி யாருக்கும் தெரியாவிட்டால் சிக்கலாகிவிடும். எனவே விளையாட்டு எவ்வளவு சுவாரஸ்யமாக இருந்தாலும், உடம்பு களைத்துவிட்டது தெரிந்தால், அதிகமாக தாகம் எடுப்பதை உணர்ந்தால் விளையாட்டிற்கு ஓய்வு கொடுத்துவிட்டு, நிழலில் இளைப்பாறுங்கள். தண்ணீர் மற்றும் பழரச பானங்களை பருகி உடலுக்கு தெம்பூட்டுங்கள்.

    ஒருவேளை உங்களுடன் விளையாடும் தோழன்-தோழி யாராவது மயக்கமடைந்தால் உடனே அருகில் உள்ள பெரியோர்களின் உதவியுடன் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யுங்கள். பெற்றோருக்கும் தகவல் தெரிவியுங்கள். முடிந்தவரை, ஆள்நடமாட்டம் இல்லாத கண்மாய், காடுகளில் விளையாடுவதை தவிர்த்துவிடுங்கள். நிழல் நிறைந்த இடங்களில், வீட்டிற்கு அருகிலேயே விளையாடுங்கள்.

    நீண்ட நேரம் விளையாடாமல் இருந்தாலும் வெயிலின் தாக்கம், உங்களை பாதிக்கலாம். தினமும் கொஞ்ச நேரம் வெயிலில் விளையாடுவதால், அந்த வெப்பம் தலைவலியை ஏற்படுத்தலாம். சருமத்தில் சுருக்கங்களையும், அதிகமான வியர்வை வெளியேற்றத்தையும் உண்டாக்கலாம். இதனால் தோல் வெளிறிப் போவதுண்டு. சிலருக்கு சருமம் கருப்பாக மாறிவிடும். சிலருக்கு நேர்மாறாக உடலின் சூடு குறைந்துவிடுவதும் உண்டு. நாக்கு வறட்சி அடிக்கடி ஏற்படும்.



    வெயிலில் திரிந்து திரும்பியபின்பு, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்படலாம். சிறுநீர் அதிகமான மஞ்சள் நிறத்துடன் வெளியேறினால் கவனிக்க வேண்டும். தொடர்ந்து இப்படி ஏற்படுவது மஞ்சள் காமாலை பாதிப்பை குறிக்கும். எனவே கவனமாக இருக்க வேண்டும்.

    வெயிலினால் வியர்வை மற்றும் சிறுநீருடன் சேர்த்து உப்புக்களும் வெளியேறுவது, களைப்புக்கு காரணமாகும். இதை ஈடு செய்ய தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்து பருகலாம். அல்லது எலுமிச்சை சாறுடன், உப்பு சேர்த்து பருகலாம். இனிப்பு தேவைப்படுபவர்கள் சர்க்கரையும் சேர்த்துக் கொள்ளலாம்.

    வீட்டின் உள்ளே இருந்தாலும் சிறுகுழந்தைகள் வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்படும். வியர்க்குரு உள்ளிட்ட சரும பாதிப்புகள் ஏற்படும். உயரம் குறைவாக உள்ள வீடுகளில் வசிப்பவர்கள், ஆஸ்பெஸ்டாஸ் கூரை வீடுகளில் வசிப்பவர்களுக்கு இதுபோன்ற பாதிப்புகள் அதிகம் ஏற்படும். வழக்கத்திற்கு மாறாக குழந்தைகள் அழுவது, சருமத்தை சொரிந்து கொண்டி ருப்பது, சுறுசுறுப்பாக விளையாடாமல் முடங்கிவிடுவது, சிறுநீரில் மாற்றங்கள் தெரிவது போன்ற நடவடிக்கைகள் தெரிந்தால் குழந்தையின் தாயார் அதிக கவனமாக குழந்தையை பராமரிக்க வேண்டும்.

    வெப்பத்தை தணிப்பதற்காக சுகாதாரமற்ற வகையில் தயாரித்து விற்கப்படும் சர்பத் மற்றும் ஜூஸ்களை குடிக்க வேண்டாம். குளிர்பானங்களையும் தவிர்க்கலாம்.

    வெளியில் விளையாடிவிட்டு வீட்டிற்குச் சென்றால், கைகால்களை கழுவாமல் எந்த வேலையிலும் ஈடுபடக்கூடாது. முக்கியமாக சாப்பிடக்கூடாது.

    அம்மை நோய் தாக்கம் ஏற்பட்டால், வெயிலில் திரியாமல், தனியறையில் இருந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். சின்னம்மை, மஞ்சள் காமாலை பாதிப்புகளுக்கு மருந்தும், சிகிச்சையும் உள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள்.

    வெயில் உயிர்களுக்கு பலவிதங்களில் நன்மை செய்கிறது. கோடை வெயிலாலும் பல நன்மைகள் உண்டு. ஆனாலும் கோடை வெயிலால் உடல் நிலையில் தாக்கம் ஏற்படும் என்பதால் கவனமாக விளையாட வேண்டும். சரியா குட்டீஸ்!
    Next Story
    ×