search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ‘ஆட்டிசம்’ குழந்தைகளுக்கு அதிநவீன சிகிச்சை முறை
    X

    ‘ஆட்டிசம்’ குழந்தைகளுக்கு அதிநவீன சிகிச்சை முறை

    குழந்தைகளின் வளர்திறன் நிலைகளில் - சமூக உரையாடலிலும், மனசீரொழுக்க நிலையிலும் ஏற்படும் பிறழ்ச்சியே “ஆட்டிசம்” எனப்படும் தற்காதல் நிலையாகும்.
    குழந்தைகளின் வளர்திறன் நிலைகளில் - சமூக உரையாடலிலும், மனசீரொழுக்க நிலையிலும் ஏற்படும் பிறழ்ச்சியே “ஆட்டிசம்” எனப்படும் தற்காதல் நிலையாகும்.

    சராசரியாக மற்ற குழந்தைகள் போல் உடல் வளர்ச்சியிலும், புழக்கத்திலும் எந்த தடுமாற்றமும் இல்லாத இந்த குழந்தைகளில், மற்றவர்களோடு தொடர்பு கொள்வதில் தடங்கலும், ஒரே செயலை மீண்டும் மீண்டும் செய்யும் “வார்ப்பு ஓழுக்க நிலையும்’, மிக நுண்ணிய கவனச்சார்பும் பிரதான மாற்றங்களாக காணப்படுகிறது. இவ்வகை நிகழ்வுகளால் வயதொத்த குழுமத்துடன் பழகும் முறையின்மை, மேலும் சமூக ஆற்றல் குறைப்பாடும் ஏற்படுகிறது. நோய் என்ற விளக்கத்தினுள் இவர்கள் அமைந்தாலும், இவர்களில் காணப்படும் சில அதீத திறன், இவர்களை வளர்திறன் மாற்றுத்திறனாளிகளாகவே வகைபடுத்த முடிகிறது.

    ஆட்டிசம் வரக் காரணம் என்ன?

    குறிப்பான காரணிகளை இதுவரை ஆதாரத்துடன் கண்டறிய முடியவில்லை. இருப்பினும், ஆட்டிசம், மரபணு சார்ந்த நேர்ச்சியுள்ள குழந்தைகள் அதற்கு ஏதுவான சூழ்நிலையில் வளரும் பொழுது வெளிப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மரபணுக்காரணிகள் குறிப்பிடப்படவில்லை என்றாலும் “மேல்மரபியல்” இதற்கான பதிலை கூற வாய்புள்ளதாக அறியப்படுகிறது. மேல் மரபியல் என்பது பிறக்கும் குழந்தை உயிரியின்- டி.என்.ஏ. வரிசையில் -எந்தவித மாற்றமும் இல்லாமலேயே ஒருசில பண்புகள் அக்குழந்தையின் வளர்ச்சியின் போது வெளிப்படுவதைக் குறிக்கிறது.

    எப்பொழுது கண்டுபிடிக்க வேண்டும்?

    எந்த ஒரு பிரச்சனையும் போல் ஆரம்பத்திலேயே கண்டறிய முற்படுவதே ஆட்டிஸம் பிரச்சனைக்கும் நல்லது. ஆனால், குறிப்பிட்ட வயது வரும் வரை அதன் அறிகுறிகள் தெளிவாக பிரித்து காணப்படுவது இல்லை. பல ஆராய்ச்சிகளுக்கு பிறகு, 12 முதல் 24 மாதங்களுக்குள், சூழ்நிலை கவனச்சிதறலும், சமூகத்தொடர்புக்கு குழந்தை எடுக்கும் முயற்சிகளில் சோர்வும் மிக அதிக முக்கியத்துவம் வாய்ந்த அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது. இந்த வயதினினும் குறைவாக கண்டுபிடிக்க, வளர்திறன் மருத்துவரின் வாயிலாக பார்த்தால் மட்டுமே முடியும்.

    அதாவது, 2 வயது முடிந்த ஒரு குழந்தையின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்ட பெற்றோர், சுமார் ஒரு மாதமாக மட்டுமே இது போன்ற மாற்றத்தை காண்பதாக கூறினாலும், குழந்தையை அடிக்கடி வீடியோ பதிவு செய்யும் இந்த காலத்தில், அந்த பதிவுகளை வளர்திறன் மருத்துவர் பார்க்கும் பொழுது கணிசமான மாற்றங்கள் 1 வயது முடிந்தவுடனேயே இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

    1 வயதுக்கும் குறைவான குழந்தைகளில் ஆட்டிஸம் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டுபிடிக்க ஆதாரபூர்வமான முறைமைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆராய்ச்சி நிலையிலேயே உள்ளது. ஆனால் அக்குடும்பத்தில் உள்ள வேறு ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் கண்டுபிடிக்கப்பட்டு இருந்தால், வளர்திறன் குழந்தைகள் மருத்துவரின் கண்காணிப்பு மிக அவசியம்.

    ஏன் சீக்கிரம் கண்டுபிடிக்க வேண்டும்?

    “ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?” என்ற பழமொழிக்கு ஏற்ப, ஆட்டிஸம் பாதிப்பில் உள்ள குழந்தைகளுக்கு எவ்வளவு விரைவாக கண்டுபிடித்து பயிற்சிகளை துவக்குகிறோமோ அவ்வளவு துல்லியமாக முன்னேற்றங்களை காணமுடிகிறது. சமீப கால மருத்துவ அறிவியல் பதிவுகளில், சமூக தொடர்பு குறைபாடு மட்டும் கொண்ட குழந்தைகளுக்கு, ஆட்டிஸம் என்று முழுமையாக அறியப்படும் முன்னமே, பயிற்சியை துவங்கினாலும் நன்மையே பயத்திருக்கிறது.

    ஆட்டிசம் பாதிப்பு கண்டறிய, அனைத்து குழந்தைகளுக்கும், 15 மாதம் முதல் 30 மாதம் முடிய வி-சிபிகிஜி எனப்படும் வினாநிரலை பயன்படுத்துவது சிறந்த முறையாகும். இதனை செயல்படுத்த எந்த ஒரு குழந்தைகள் மருத்துவரின் வெளிநோயாளிகள் காத்திருக்கும் நேரத்திலும் மேற்சொன்ன வயதுள்ள குழந்தைகளின் பெற்றோர் பதிலுரைத்து விடலாம். குறிப்பாக ஆட்டிஸம் பாதிப்பு உறுதி செய்வதற்கான சிறப்பு கருவிகளில் (Diagnostic tools) பயிற்சி பெற்ற குழந்தைகள் வளர்திறன் மருத்துவரிடமே உங்களுக்கான சரியான பதில் கிடைக்கும்.

    இதை சரி செய்ய உள்ள மருத்துவ சிகிச்சை முறைகள் யாவன?


    ஆட்டிசம் ஒரு பேச்சு மற்றும் பேசும் தொடர்பு சார்ந்த மனத் தகைமை சீர்குலைவு பிரச்சனை. ஆகையால், முதல் நிலை சிகிச்சை முறை, தகைமை மற்றும் வாய்மொழி / வாய்மொழி அல்லாத சமூகத் தொடர்பு நிலையை உயர்த்தும் நோக்கத்தில் இருக்க வேண்டும். ஆரம்ப பள்ளிகளில் கூட இந்த வகை பயிற்சியை அளிக்க முடியும். இருப்பினும், ஆட்டிசம் உள்ள குழந்தைகளுக்கு ஏதுவான சூழலும் கற்றலுக்கு அவசியம் என்பதால், அதற்கான சிறப்பு பயிற்சி பெற்ற சிகிச்சையாளர்கள் கொண்டு செய்வதே நல்லது.

    குழந்தைகள் வளரும் பொழுது அவர்களுக்கான தேவைகளை கேட்பதற்கும், தானே செய்து கொள்வதற்குமான பயிற்சியை தொழில் வழி சிகிச்சை முறைகள் மூலம் தர முடியும். தவிர இந்த குழந்தைகளில் சிலருக்கு சராசரியாக வெளியுலகம் தரும் வெளிச்சம், ஓலி, மற்றும் தொடுபுலன்சார் வேண்டாநிலை இருப்பின் அதனை களையும் தனித்துவ சிகிச்சை முறையையும் பயன்படுத்த வேண்டும்.

    மருந்து மூலமாக ஆட்டிசம் நோயை குணபடுத்த முடியாது என்றாலும், ஐந்து வயதிற்கு மேல் சில மருந்துகள் சக நோயுற்ற நிலைகளில், இப்பொழுது அங்கீகரிக்கப்பட்டுள்ளன.



    அறிவியல் ஆதாரபூர்வமான சிறந்த சிகிச்சை முறைகள் என்ன?

    ஆட்டிசம் பாதிப்புள்ள குழந்தைகளுக்கான மிகச் சிறந்த, அதிக முன்னேற்றத்தை கொடுத்துள்ள சிகிச்சை முறை “அப்ளைட் பிஹேவியர் அனாலிசிஸ்” (Applied Behavioural Analysis-ABA).. இந்த வகை சிகிச்சை அளிப்பவர்கள் உண்மையில் பயிற்சி பெற்றவர்கள் தானா என்பதை தெரிந்து கொள்ள, உலக நாடுகள் வாரியாக அங்கீகாரம் பெற்றவர்களின் நிரலை இணையதளத்தில் காணலாம்

    (<https://www.bacb.com/services/o.php?page=100155>)

    எதை வைத்து சிகிச்சை முறைகளை தேர்ந்தெடுப்பது?

    ஆட்டிஸம் ஒரு அலைநிரல் தொகுப்பான சுகவீனம். அதாவது spectrum disorder என ஆங்கிலத்தில் கூறுவர். இதன் காரணம், இந்த பாதிப்பு உள்ள குழந்தைகளின் முதல் நிலை அறிகுறிகளும், பின்னர் அவர்களின் இயற்கையான வளர்ச்சிப் போக்கும்- ஒரே குழந்தைக்குள்ளான தனிதிறன்களிலும், ஒரு வயதை உடைய பல்வேறு குழந்தைகளோடு ஒப்பிடும் பொழுதும், கணிசமான அளவில் மாறுபட்டு இருக்கும். இதனால் எல்லா ஆட்டிஸம் பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான சிகிச்சையை தர முடியாது. இவ்வகை சிகிச்சைகளின்அளவும், நோக்கமும் ஓவ்வொரும் குழந்தைக்கும் வேறுபடுமாதலால், அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான சிகிச்சையை தர முடியாது. அதனை கண்டறிந்து சரியான “தனித்துவ பயிற்சித் திட்டம்” குழந்தைகள் வளர்திறன் சிறப்பு மருத்துவர் மட்டுமே அளிக்க முடியும்.

     இந்த சிகிச்சை முறையின் திருத்தியமைக்கப்பட்ட பரிமாணங்களும் உள்ளன. அவையாவன...

    · எளிய பாடங்களும், நேரிடை வலுவூட்டலும் கலந்த பயிற்சி.
    · கற்றலுக்கு, வாய்மொழி அல்லது வாய்மொழி அல்லாத தொடர்பை மேம்படுத்தும் பயிற்சி.
    · ஐந்து வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கான தகைமை பயிற்சி.
    · வாய்மொழித் திறன் மேம்படுத்தும் பயிற்சி.
    · விளையாட்டு வழிப் பயிற்சிகள்.

     ஆட்டிசம் குழந்தைகளின் அதீத சக்தி


    பல நேரங்களில், ஏன்!... அனேகமாக நாம் அனைவருமே பேசத் தெரிந்திருப்பதனால் இவ்வுலகை ஆள தகுதி பெற்றோம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். பேசும் சக்தி மற்ற உயிரினங்களிடமிருந்து மனித குலத்தை உயர்த்தி காட்டியிருக்கிறது. ஆனால், சற்றே கூர்ந்து நோக்கினால் இந்த பேசும் சக்தி இல்லாத உயிரினங்கள் இயற்கையோடு இசைந்து தன் இன வளர்ச்சிக்கும், இயற்கையின் சமநிலைக்கும் சிறந்த வகையில் பங்காற்றியுள்ளன.....ஆனால் நம்மால், அதனை சிதைக்கவே முடிந்திருக்கிறது.

    ஆட்டிசம் பாதிப்புள்ளானவர்களின் ஆக்க சக்தி அவர்களின் பார்வை வழி கற்றலில் உள்ளது. உலகின் பல திறன் சோதனை முறைகளில், வாய்மொழி சோதனைகளே பிரதானம். சைகை முறை / வாய்மொழி அல்லாத சோதனை வழி கண்டறியப்பட்ட திறன் அளவில் சராசரி மனிதர்களை விட ஆட்டிசம் பாதிப்பு உள்ள பெரியவர்கள் ஓங்கியிருந்தது தெள்ளத் தெளிவாக தெரிந்துள்ளது. ஆட்டிசம் பாதிப்புள்ளோருக்கு அகன்ற பகுப்பாய்வு சார் மூளைத்திறன் அதிகம். அறிவியல் ஆராய்ச்சி உலகில் ஆட்டிசம் உள்ளோர் சிறந்து விளங்கும் வாய்ப்பு உள்ளது.

    இதையெல்லாம் வைத்து பார்க்கும் பொழுது ஆட்டிசம் ஒரு குறைதானா? என்ற சந்தேகமே மேலோங்கியிருக்கறது. செவிக்குறை, பார்வைக்குறை மற்றும் பிற உடற்குறையுள்ளோரை அணைத்து தன்னுள் எடுத்துக் கொண்ட சமூகமே முற்போக்கு சிந்தனை உள்ள சமூகம். அவ்வகையில், ஆட்டிசம் உள்ளோரை உயரிய இடத்தில் இவ்வுலகம் போற்றும் நாள் வெகுதூரத்தில் இல்லை....!
    Next Story
    ×