search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மாணவர்களின் உணவும், உடல் நலனும்...
    X

    மாணவர்களின் உணவும், உடல் நலனும்...

    தேர்வு நேரத்தில் மிகவும் உணவுக் கட்டுப்பாடு அவசியம். மாணவர்களின் உணவுப் பழக்க வழக்கம் கல்வியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது.
    தேர்வு நேரத்தில் மிகவும் உணவுக் கட்டுப்பாடு அவசியம். மற்ற நேரங்களிலும் உடல் நலத்தில் அக்கறை செலுத்துவது நல்ல பண்பாடு. மாணவர்களின் உணவுப் பழக்க வழக்கம் கல்வியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. உணவு சாப்பிடாமல் இருந்தால் பாடத்தில் கவனம் செலுத்த முடியாது. அதிகமாக சாப்பிட்டாலும் படிப்புக்கு இடையூறு செய்யக்கூடியது உணவு. மாணவர்களின் உடலுக்கும், கல்விக்கும் பாதிப்பில்லாமல் உணவுப் பழக்க வழக்கம் அமைய வேண்டும் அதற்கான சில டிப்ஸ்...

    காலையில் எழுந்ததும் அரை லிட்டர் முதல் ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். பல்துலக்கிய பின்பு சிறிது சிறிதாக தண்ணீர் குடிப்பது நல்லது. இந்தப் பழக்கமானது மலச்சிக்கலைப் போக்கும். பள்ளியிலும், மற்ற வேளைகளிலும் திடீரென கழிவறை செல்லும் உணர்வை தடுத்துவிடக்கூடியது இந்தப் பழக்கம். ஆரோக்கியமான இந்த பழக்கத்தை எத்தனை பேர் இப்போது பின்பற்றி வருகிறீர்கள்?

    காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பதைப்போல ஒவ்வொரு மணி நேர இடை வேளைக்கும் ஒரு டம்ளர் (100 மி.லி.) தண்ணீர் குடிப்பது நல்லது. ஒரு நாளைக்கு சுமார் 3 லிட்டர் தண்ணீர் பருகுவது ஆரோக்கியத்தை வழங்கும். தண்ணீர் குடிப்பது உடல் உஷ்ணத்தை தடுக்கும். பெரும்பாலான நோய் தாக்குதலை தடுக்கும்.

    ஒவ்வொரு உணவு நேரத்திற்கும் குறைந்தபட்சம் 6 மணி நேர இடைவேளை வேண்டும். 3 மணி நேர இடைவெளிக்குள்ளாக நொறுக்குத்தீனி பண்டங்களை சாப்பிடக்கூடாது. தேவையற்ற நேரத்தில் பஜ்ஜி, போண்டா, பர்கர், பீஸா என்று சாப்பிடும் பழக்கமுள்ள மாணவர்கள் உடல் நலத்தை கெடுப்பதுடன், படிக்கும் மனநிலையையும் கெடுத்துக் கொள்கிறார்கள் என்பதே உண்மை. இந்த இடைவேளை உணவுகள்தான் உடல் பருமனையும், சோம்பலையும் கொண்டு வருகிறது. அதுவே நாளடைவில் தேவையற்ற நோய்கள் பரவவும் காரணமாகிறது.

    சாப்பிடும்போது நன்றாக சாப்பிட்டுவிட்டு, அடுத்த இடைவேளையில் உணவு உண்ணுங்கள். எப்போது சாப்பிட்டாலும் முழு வயிற்றை நிரப்ப வேண்டாம். எவ்வளவு ருசியாக இருந்தாலும், முக்கால் வயிறு சாப்பிட மனதை பழக்கப்படுத்துங்கள்.

    இடையில் பசித்தால் தண்ணீர் அல்லது பழ ஜூஸ் குடிக்கலாம். இளநீர், காய்கறி- பழ சாலட் உங்கள் ஸ்நாக்ஸ் உணவுகளாக இருக்கட்டும்.

    செயற்கை குளிர்பானங்கள், எண்ணெய் பலகாரங்கள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுப்பண்டங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. இது உடல்பருமனை தடுத்து, படிப்பில் மனம் லயிக்க துணை செய்யும்.

    ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை பழக்கமாக இல்லாமல் எப்போதாவது ருசிக்காக சாப்பிடுங்கள். அதுவும் மாலை வேளையில் மட்டும் சிறி தளவு சாப்பிடுங்கள். எண்ணெயில் செய்த இனிப்பு-காரம் மற்றும் மாமிசம் அளவுடன் சாப்பிடுங்கள். வயிறு பிரச்சினைகள் ஏற் படுவதை உணர்ந்தால் இவற்றை முற்றிலும் தவிர்க்கலாம்.

    காலையிலும், இரவிலும் பல்துலக்குவதையும், மலம் கழிப்பதையும் பழக்கமாக்குங்கள்.

    ஒரே நேரத்தில் தூங்கி எழுவதை பழக்கமாக மாற்றுங்கள். இரவு 11 மணிக்குள்ளாக தூங்கிவிடுங்கள். அதிகாலையில் எவ்வளவு சீக்கிரம் எழும்ப முடியுமோ, அதை பழக்கமாக்குங்கள். சிறுவர்கள் 8 மணி நேரமும், பெரிய வகுப்பு படிக்கும் மாணவர்கள் 5 மணி நேரத்திற்கு குறையாமலும் உறங்குவதை பழக்கமாக்க வேண்டும்.

    புகை, மது போன்ற தீய பழக்கங்களை முற்றிலும் தடை செய்யுங்கள். இவை ஆரோக்கியத்தையும், ஒழுக்கத்தையும் கெடுக்கும். படிப்பில் நாட்டமில்லாமல் செய்துவிடும்.

    சுவர் இருந்தால்தான் சித்திரம் தீட்டலாம் என்பது பழமொழி. ஆம் ஆரோக்கியம் இருந்தால்தான் அனைத்தையும் பெற முடியும். யாகாவராயினும் நாகாக்க என்ற வள்ளுவரின் வாக்கு, பேச்சுக்கு மட்டுமல்லாமல், உணவுக் கட்டுப்பாட்டிற்கும் பொருந்தும். மாணவர்கள் உடல்நலனைக் காத்து, கல்வியிலும் வெற்றிக்கொடி நாட்டுங்கள்.
    Next Story
    ×