search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளையும் பாதிக்கும் சிறுநீரகக்கல்
    X

    குழந்தைகளையும் பாதிக்கும் சிறுநீரகக்கல்

    மாறிவரும் உணவுப் பழக்கங்களும் விரைவான வாழ்க்கை முறையால் பெரியவர்களை மட்டுமே பாதித்து வந்த சிறுநீரகக்கல் பிரச்சனை இப்போது குழந்தைகளையும் ஆட்டிப்படைக்கத் தொடங்கி இருக்கிறது.
    பெரியவர்களை மட்டுமே பாதித்து வந்த சிறுநீரகக்கல் பிரச்சனை இப்போது குழந்தைகளையும் ஆட்டிப்படைக்கத் தொடங்கி  இருக்கிறது. மாறிவரும் உணவுப் பழக்கங்களும் விரைவான வாழ்க்கை முறையும் நோய்களை மிக வேகமாக கொண்டுவருகின்றன. பிறக்கும் குழந்தையை கூட இந்த சிறுநீரகக் கல் விட்டு வைப்பதில்லை.

    ‘‘நூடுல்ஸ், பர்கர், பீட்சா, நிறைய உப்பு போட்ட ஃபிரெஞ்ச் ஃபிரை போன்ற ஜங்க் உணவுகளை இந்தக் கால குழந்தைகள் அதிகமாக விரும்பி சாப்பிடுகிறார்கள். இதுபோன்ற உணவுகள் அதிக அளவு உப்பும், கெட்டுப்போகாமல் இருக்க சில வேதியியல் பொருட்களும் சேர்க்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டே தயாராகின்றன. இவற்றைத் தொடர்ந்து சாப்பிடும் குழந்தைகளுக்கு ரத்தத்தில் கால்சியம் அளவு அதிகமாகி, எளிதாக சிறுநீரகக் கல் வரும். தண்ணீருக்கு பதிலாக நிறைய குழந்தைகள் பானங்களை விரும்பிக் குடிக்கிறார்கள். இந்த பழச்சாறுகளிலும் உப்பு சேர்க்கப்படுகின்றன. இந்த உப்பு உடலில் கரைவதற்கு தண்ணீரும் குடிக்க வேண்டும்.

    அதை பெரும்பாலான குழந்தைகள் செய்வதில்லை. பள்ளியிலும் குழந்தைகள் சரியாக தண்ணீர் குடிப்பதில்லை. அங்குள்ள கழிப்பறை நாற்றத்தைச் சகிக்க முடியாமலும், சோம்பறித்தனத்தாலும் கூட சில குழந்தைகள் சிறுநீரை அடக்கிக் கொள்வார்கள். இதுவும் கல் ஏற்படுவதற்கான முக்கிய காரணம். இந்தப் பிரச்சனையைத் தவிர்க்க சில உணவுப்பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். உப்பின் அளவை குறைப்பது முக்கியம். டப்பாக்களில் அடைக்கப்பட்டு வரும் உடனடி உணவுகள் மற்றும் ஜங்க் உணவுகளை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். தக்காளி தொக்கு, பசலைக்கீரை, மொச்சைக்கொட்டை ஆகியவற்றையும் தவிர்ப்பது நல்லது.

    பசலைக்கீரையில் அதிக அளவு சுண்ணாம்பு சத்தும், தக்காளியில் ஆக்ஸாலிக் மற்றும் யூரிக் அமிலமும் உள்ளது. இவை குழந்தைகளின் சிறுநீரகத்தில் கற்களை உருவாக்கக் கூடியவை. கோகோ சேர்க்கப்பட்ட பிஸ்கெட்டுகள், சாக்லெட்டுகள் போன்றவையும் வேண்டாம். அசைவ உணவுகளில் ஆட்டிறைச்சியை தவிர்க்க வேண்டும். வேக வைத்த மீன் அல்லது மீன் குழம்பு சாப்பிடலாம். எண்ணெயில் பொரித்த மீனை சாப்பிடக் கூடாது. கருவாடு, உப்புக்கண்டம் போன்ற உப்பு அதிகம் சேர்க்கக்கூடிய பண்டங்களையும் தவிர்க்க வேண்டும். ஆசைக்காக ருசி பார்க்க மாதம் ஒரு நாள் சிறிய துண்டு கருவாடு சாப்பிடலாம்.

    அப்போது, மற்ற உணவுகளில் உப்பின் அளவை பாதியாக குறைத்து விட்டால், அளவு சமச்சீராகி விடும். காளான் வறுவலையும் தவிர்க்கலாம். இயற்கை முறையில் காய்கறிகள் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளை மட்டும் குழந்தைகளுக்குக் கொடுப்பது நல்லது. வாழைத்தண்டு சேர்த்துக்கொண்டால் ஆக்ஸலேட் உப்பை சிறுநீரில் கரைத்து அனுப்பிவிடும். தண்ணீர் நிறைய குடிப்பது எப்போதும் நல்லது..

    அறிகுறிகள்...

    சிறுநீரில் ரத்தக்கசிவு, எரிச்சல், கடுமையான வயிற்றுவலி, சில நேரம் வயிற்றுவலியுடன் வாந்தியும் ஏற்படும். சிறுநீரில் சின்னச் சின்ன கற்கள் வெளிவரும். உடனே பெற்றோர் சிறுநீரகக் கற்கள் வெளியே வந்து விட்டது என மெத்தனமாக இருக்கக் கூடாது.

    உடனடியாக மருத்துவரை அணுகி, தேவைப்பட்டால் ஸ்கேன் செய்து கற்களின் இருப்பை தெரிந்து கொண்டால்தான் முழுமையாக சிறுநீரகக் கற்கள் வராமல் தடுக்க முடியும். கால்சியம் ஆக்ஸலேட், கால்சியம் பாஸ்பேட் என இரண்டு வகை சிறுநீரகக் கற்கள் உள்ளன. சிலருக்கு இரண்டும் கலந்தும் இருக்கும். எந்த வகைக் கற்கள் என்பதை அறிந்து அதற்கான சிகிச்சையை கொடுக்க வேண்டும். ஆரம்ப கட்டத்தில் சிறியதாக கல் இருந்தால் மருந்துகள் மூலமே குணமாக்கி விடலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட கற்கள் இருந்தால், ‘லித்தோட்ரிப்ஸி’ முறையைப் பயன்படுத்தி கற்களை பிரித்து எடுத்துவிடலாம். வலி, வேதனையில்லாத சிகிச்சை இது. ‘யூரிட்ரோஸ்கோபி’ முறையில் சிறிய அறுவை சிகிச்சை மூலமும் சிறுநீரகக் கற்களை அகற்றலாம்...
    Next Story
    ×