search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளை பாதிக்கும் தொண்டை அடைப்பான்
    X

    குழந்தைகளை பாதிக்கும் தொண்டை அடைப்பான்

    வயது வந்தவர்களையும் டிப்தீரியா(Diphtheria) என்ற தொண்டை அடைப்பான் தாக்கும் என்றாலும், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள்தான் அதிகம் டிப்தீரியாவுக்கு ஆளாகிறார்கள்.
    பாக்டீரியா கிருமிகளால் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளில் டிப்தீரியா என்ற தொண்டை அடைப்பானும் முக்கியமான ஒன்று. கிட்டத்தட்ட தீவிரமிக்க ஒரு தொற்றுதான் டிப்தீரியா. வயது வந்தவர்களையும் டிப்தீரியா(Diphtheria) என்ற தொண்டை அடைப்பான் தாக்கும் என்றாலும், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள்தான் அதிகம் டிப்தீரியாவுக்கு ஆளாகிறார்கள். எனவே, பெற்றோர் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

    Corynebacterium diphtheriae என்ற பாக்டீரியா காரணமாக தொண்டை அடைப்பான் உண்டாகிறது. இக்கிருமிகள், தொண்டை, மூக்கு பகுதிகளுக்கும் பரவி சளிச்சவ்வை பாதிக்கின்றன. பாதிப்புக்குள்ளானவரின் இருமல், தும்மல் மற்றும் பேசுதல் மூலமாகக் கிருமி வெளியேறி காற்றின் மூலமாக மற்றவருக்கும் பரவுகிறது.

    தொற்று ஏற்பட்ட ஆரம்ப நிலையில் சளி, காய்ச்சல், தலைவலி, தொண்டைப்புண் ஆகியவற்றுடன் டிப்தீரியா ஆரம்பிக்கிறது. இதன் அறிகுறியாக நாடித்துடிப்பு அதிகமாக இருக்கும். தொண்டையின் அடிப்பகுதியிலும் சில சமயங்களில் மூக்கினுள்ளும் உதடுகளின் மீதும் மஞ்சளும் சாம்பல் நிறமும் கலந்த நிறத்தில் ஒரு மேற்படலம் உருவாகும். குழந்தைகளின் கழுத்து வீங்கலாம். சுவாசம் துர்நாற்றமடிக்கும். உடல் பலவீனமும் சுவாசிப்பதில் சிரமமும் இருக்கும்.

    குழந்தைக்குத் தொண்டை அடைப்பான் ஏற்பட்டிருக்கிறது என்று தோன்றினால், உடனடியாக மருத்துவ உதவி பெறுவது அவசியம். தொண்டை அடைப்பானுக்குப் பிரத்யேகமான மருந்துகள் இருக்கின்றன. டிப்தீரியா மற்றவர்களுக்கு தொற்றாத வண்ணம் பாதிக்கப்பட்ட குழந்தையைத் தனியறையில் படுக்க வைக்க வேண்டும். வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பைக் கலந்து தொண்டையில் படும்படி கொப்பளிக்கச் சொல்லலாம். ஆவி பிடிக்கச் செய்வது நல்லது. வெதுவெதுப்பான திரவ உணவுகளையும் கொடுக்கலாம்.

    தொண்டை அடைப்பானை ஆரம்பநிலையில் தடுப்பூசி கொண்டு எளிதில் தடுத்துவிடலாம். ஒரு குழந்தையிடம் இருந்து மற்ற குழந்தைகளுக்கு எளிதில் பரவும் என்பதால் வீட்டிலுள்ள மற்ற குழந்தைகளையும் பரிசோதித்துக் கொள்வது நல்லது.

    தேவைப்பட்டால் தடுப்பு மருந்துகளும் கொடுக்கலாம்.சுவாசப் பிரச்சனைகள், நுரையீரல் தொற்று, பக்கவாதம், இதயத்தசைகள் மற்றும் நரம்புகளை சேதப்படுத்தும் தன்மை கொண்டது டிப்தீரியா. எனவே, ஆரம்ப நிலையில் சரி செய்வதே பாதுகாப்பானது!
    Next Story
    ×