search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகள் தூங்கும்போது நகம் வெட்டுங்கள்
    X

    குழந்தைகள் தூங்கும்போது நகம் வெட்டுங்கள்

    குழந்தைகளின் நகங்களை வெட்டுவதும், காதை சுத்தம் செய்வதும் எவ்வளவு சிரமமான விஷயம் என்று தாய்மார்களுக்குத்தான் தெரியும். குழந்தையின் நகத்தை வெட்டும் போது கவனிக்க வேண்டியவை.
    குழந்தைகள் மென்மையானவர்கள். அவர்களின் பராமரிப்பிலும் தாய்மார்கள் மென்மையை கடைபிடிக்க வேண்டும். குழந்தைகளின் நகங்களை வெட்டுவதும், காதை சுத்தம் செய்வதும் எவ்வளவு சிரமமான விஷயம் என்று தாய்மார்களுக்குத்தான் தெரியும். அந்த விஷயங்களில் உங்களுக்கு உதவும் எளிய டிப்ஸ் இதோ…

    * குழந்தைகள் விளையாடும் வேளைகளில் அதிகமாக நகங்களை பயன்படுத்துவதால் அதில் ஏராளமாக அழுக்கு படியும். இதனால் நோய் தொற்ற வாய்ப்பு உண்டு. எனவே அதிகமாக வளரும் நகங்களை அவ்வப்போது வெட்டிவிடுவது சிறந்தது.

    * குழந்தைகளின் நகங்களை வெட்ட சரியான நேரம் அவர்கள் தூங்கும் வேளைதான். இல்லாவிட்டால் அவர்கள் வளைந்து, நெளிந்து ஆர்பாட்டம் நடத்துவார்கள். பிறகு அழுகையையும் நிறுத்த முடியாது.

    * குளிப்பாட்டியவுடன் குழந்தைகளின் நகம் மேலும் மென்மையாக மாறிவிடும் என்பதால் அப்போதும் நகங்களை நறுக்கலாம்.

    * குழந்தைகளுக்கு வேகமாக நகம் வளர்ந்து விடும் என்று சொல்வார்கள். அது உண்மையல்ல. மெதுவாகவே வளரும். 2 வாரங்களுக்கு ஒரு முறை நகங்களை வெட்டிவிடலாம்.



    * குழந்தைகளின் கால் நகங்கள், கை நகங்களைவிட மெதுவாகத்தான் வளரும். அதுவும் மிருதுவாகத்தான் இருக்கும். கால்நகங்களை அதிகமாக பயன்படுத்துவதில்லை என்பதால் அடிக்கடி வெட்டிவிட வேண்டிய அவசியமில்லை. நன்றாக வளர்ந்தபிறகு கத்தரிக்கலாம்.

    * நகங்களை வெட்டுவதற்கு குழந்தைகளுக்கான `நெயில்கட்டர்’ கருவியை பயன்படுத்தலாம். கத்தரிக்கோல் கொண்டு வெட்டுவது, சாணைக்கல்லில் நகங்களை உரசுவது போன்றவை கூடாது.

    * காதுகளை சுத்தம் செய்ய சுத்தமான துணியை லேசாக தண்ணீரில் நனைத்து காதை துடைத்தால் போதும். காதுக்குள் குடைந்து எடுக்க வேண்டாம்.

    * காதுகளில் மயிர்க்கால்கள் வளர்வதை உணர்ந்தால் அதை நீங்களே அகற்ற முயற்சிக்க வேண்டாம். குழந்தைகள் நல மருத்துவரை அணுகவும்.

    * காதுக்குள் சொட்டு மருந்துகள் எதையும் டாக்டர்களின் ஆலோசனையின்றி விடவேண்டாம்.

    * கண்களை சுத்தபடுத்தும்போது சுத்தமான துணியை வெதுவெதுபான நீரில் முக்கி பிழிந்துவிட்டு கண்ணின் சுற்றுபுறத்தை துடைத்தால் போதும். சோப்பு கொண்டு கண்களை கழுவக்கூடாது.

    Next Story
    ×