search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளுக்கு டேகேர் பாதுகாப்பானதா?
    X

    குழந்தைகளுக்கு டேகேர் பாதுகாப்பானதா?

    டேகேருக்கோ அல்லது ப்ளே ஸ்கூலுக்கோ குழந்தைகள் போகத் தொடங்கினால்தான் தன் வயது ஒத்த குழந்தைகளை பார்க்கும்போது சாப்பிடவும் ஏதோ ஒரு மணிநேரமாவது உட்கார்ந்து விளையாடவும் செய்வார்கள்.
    டேகேருக்கோ அல்லது ப்ளே ஸ்கூலுக்கோ குழந்தைகள் போகத் தொடங்கினால்தான் தன் வயது ஒத்த குழந்தைகளை பார்க்கும்போது சாப்பிடவும் ஏதோ ஒரு மணிநேரமாவது உட்கார்ந்து விளையாடவும் பின் நன்றாக தூங்கவும் செய்வார்கள். குழந்தையை பார்த்துக்கொள்ள வீட்டில் யாருமற்றவர்களாகவும் பணிக்குச் சென்றே ஆகவேண்டிய கட்டாயத்திலும் இருக்கும் பெண்களுக்கு டேகேர் ஒரு மிகப்பெரிய கொடை.

    இப்படி நகர வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக இன்று டேகேர்களும், க்ரீச்களும் மாறிவிட்ட சூழலில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் டே கேர்கள் எப்படியிருக்க வேண்டும் தெரியுமா? பெரும்பாலானவர்கள் ஏசி ரூம் இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள். ஏசி ரூம் மட்டுமல்ல அது இல்லாத காற்றோட்டமான இயற்கையான வெளிச்சம் கொண்ட அறைகள் இருக்க வேண்டுமென எதிர்பாருங்கள். ஏசி ரூம் என்று சொன்னாலும் அது ஜன்னல், கதவு என அடைத்திருக்கும் சிறை என்று தான் குழந்தைகளுக்கு தெரியும். காற்றோட்டமுள்ள அறைகள் அவர்களுக்கு கூடுதல் உற்சாகத்தையும் விடுவிப்பையும் கொடுக்கும் விளையாட வெளியில் இடமும் இருக்க வேண்டும் என்பதை மறக்காதீர்கள்.

    சரியாக கவனித்துக்கொள்ள முறையாக படித்த ஆசிரியர்களும் அவர்களுக்கு உதவியாக இருக்கும் உதவியாளர்களும் இருப்பதை உறுதி செய்யுங்கள். டாய்லெட் பாத்ரூம்களை எத்தனை நாளுக்கு ஒருமுறை சுத்தம் செய்கிறார்கள் என்பதை விசாரித்துக் கொள்ளுங்கள். டையஃபர்கள் மாற்றும் போது நன்றாக கழுவி துடைத்து பவுடர் போட்டு விட்டு மாற்ற வேண்டுமென அறிவுறுத்துங்கள். அந்த இடம் குழந்தைகளுக்கு பழகிவிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக சிறுநீர் கழிக்க பாத்ரூம்தான் போக வேண்டுமென சொல்லிக் கொடுக்க சொல்லுங்கள். சீக்கிரமே டையஃபர் பழக்கம் மாறிவிடும்.

    மற்ற குழந்தைகளுடன் பேசும் வாய்ப்பு கிடைப்பதால் குழந்தைகளின் பேச்சுத்திறன் வெகுவிரைவில் வசப்படும். முதலில் இரண்டு மணி நேரம் மூன்று மணிநேரம் என விட்டு அழைத்து வாருங்கள். இடமும் பிடித்த நண்பர்களும் அமைந்து விட்டால் அவர்களே பையை தூக்கிக் கொண்டு புறப்பட்டு விடுவார்கள். மற்ற குழந்தைகள் என்ன செய்கிறார்களோ அதையே திரும்ப செய்யவும் பழகுவார்கள். அது நல்லதாகவும் இருக்கலாம் கெட்டதாகவும் இருக்கலாம். அனைத்தையும் எதிர்பார்க்க பழகிக் கொள்ளுங்கள்.

    குழந்தைகளின் வளர்ச்சியில் டே கேர்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. பிறருடன் பழகவும் விளையாடவும் பகிர்ந்து உண்ணும் பழக்கத்தையும் ஏற்படுத்தும். நமக்குத்தான் இவர்கள் குழந்தைகள். சமுதாயத்திற்கு இவர்கள் நல்லதொரு மனிதர்களாகவும் மற்ற கலாசாரங்களை மதிக்கவும் தங்களுக்கான நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொள்ளவும் இவர்களுக்கு முதல் பயிற்சி கூடம்தான் இது.

    கண்ணீருடன் குழந்தையை டேகேரில் விட்டுவிட்டு வராதீர்கள். இந்த இடம் உனக்கு மிகவும் பிடிக்கும் என்பதை குழந்தைக்கு உங்கள் செய்கைகளின் மூலம் உணர்த்துங்கள். நம் குழந்தைகள் மனம் விரும்பும் இடத்தினை சரியாக தேர்ந்தெடுத்து அவர்களை உற்சாகமாக அனுப்புங்கள். 
    Next Story
    ×