search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தையின் வளர்ச்சியில் ஏன் தாமதம் ஏற்படுகிறது?
    X

    குழந்தையின் வளர்ச்சியில் ஏன் தாமதம் ஏற்படுகிறது?

    தங்கள் குழந்தையின் வளர்ச்சியில் தாமதம் தெரிந்தாலோ அல்லது ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டாலோ, குழந்தை நல மருத்துவரையோ உளவியல் நிபுணரையோ ஆலோசிக்க வேண்டியது அவசியம்.
    குழந்தையின் அந்தந்த வயது வளர்ச்சியை பெற்றோர்கள் எதிர்பார்ப்பார்கள். சில குழந்தைகளுக்கு குறிப்பிட்ட ஒரு திறன் வளர்ச்சியில் மட்டும் தாமதம் ஏற்படலாம்; அல்லது பல திறன்பாடுகளிலும் ஒருசேரத் தாமதம் ஏற்படலாம். தங்கள் குழந்தையின் வளர்ச்சியில் தாமதம் தெரிந்தாலோ அல்லது ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டாலோ, குழந்தை நல மருத்துவரையோ உளவியல் நிபுணரையோ ஆலோசிக்க வேண்டியது அவசியம். அவர்கள் குழந்தையின் வளர்ச்சியைக் கண்டறிந்து, அதற்கேற்ற சிகிச்சையைப் பரிந்துரை செய்வதன் மூலம் அக்குழந்தை பயனடைய முடியும்.

    பொதுவாக, கீழ்வரும் காரணங்களால் குழந்தையின் வளர்ச்சியில் தாமதம் ஏற்படுகிறது (முதல் இரண்டு காரணங்கள் பிரதானமானவை).

    * மரபணு
    * மரபணு அல்லது குரோமோசோம் குறைபாடுகள் (டவுன்ஸ் சிண்ட்ரோம்/ஃப்ரஜில் ‘X’ சிண்ட்ரோம்)
    * சுற்றுச்சூழல்
    * குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் போது, அல்லது பிறந்தவுடன் அது எதிர்கொள்ள நேரிடும், தீங்கு விளைவிக்கும் நச்சு    பொருட்களின் தாக்குதல் (Lead poisoning)
    * நரம்பு மண்டல நோய்த்தொற்று
    * குறைப்பிரசவம்
    * கர்ப்பகால சிக்கல்கள்
    * கடுமையான வறுமை
    * மோசமான ஊட்டச்சத்து
    * அக்கறையின்மை



    ஏன் வேண்டும் ஆரம்பகால சிகிச்சை (Early Intervention)?

    குழந்தையின் 3 வயதுக்குள் இப்படிப்பட்ட நரம்பியல் வளர்ச்சி சார்ந்த (Neuro Developmental Disorders) குறைபாடுகளைக் கண்டறிவதன் மூலம், அக்குழந்தை தகுந்த சிகிச்சை பெற்று நலம் பெறும் வாய்ப்பு அதிகரிக்கிறது. குழந்தைகளின் தன்மைக்கேற்ப, அவர்களுக்கு பேச்சு சிகிச்சை (speech therapy), தொழில்சார் சிகிச்சை (occupational therapy), உடல் மற்றும் நடத்தை சிகிச்சை (physical and behavioral therapy) அளிக்கப்படுகிறது.

    ஆட்டிஸம், ஏ.டஹெச்.டி (Attention Deficit Hyperactivity Disorder - ADHD), அறிவுத்திறன் குறைபாடு (Intellectual Disability) போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் பல குழந்தைகளுக்கு, சிறு வயதில் வளர்ச்சியில் தாமத அறிகுறிகள் (Developmental delay) இருந்திருக்கும். ஆனால், அதை சரியான நேரத்தில் கண்டுபிடித்து, சிகிச்சை அளிக்கப்படாததால், அக்குழந்தையின் வளர்ச்சியில் முன்னேற்றம் இல்லாமலேயே போகும் வாய்ப்பு உண்டாகியிருக்கும்.

    அதே நேரம், ஆரம்ப நிலையிலேயே இவ்வித சிகிச்சைகள் கொடுக்கப்படும்போது, பாதிக்கப்பட்ட குழந்தை தன்னுடைய அதிகபட்ச செயல்பாட்டை அடைந்து வீட்டில் மற்றும் சமூகத்தில் ஒன்றிவாழ முடியும். மேலும், குழந்தையின் குடும்பத்துக்கும் அந்த சிகிச்சை ஆதரவு மற்றும் வழிகாட்டுதலை வழங்கும். ஒவ்வொரு குழந்தையின் இயல்பும் பிரச்னையின் தன்மைக்கேற்ப வேறுபடும். சிலர் யாருடைய உதவியும் இன்றி செயல்படலாம், சிலர் ஓரளவு உதவியுடன் வாழலாம், இன்னும் சிலருக்கு அதிகபட்ச உதவி தேவைப்படலாம். மொத்தத்தில், ஆரம்ப கால சிகிச்சை குழந்தையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும்.
    Next Story
    ×