search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மனப்பாடமும், வீட்டுப் பாடமும்
    X

    மனப்பாடமும், வீட்டுப் பாடமும்

    பள்ளிகளில் 2-ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தேவையில்லை என்ற கருத்தும், மனப்பாடம் மற்றும் வீட்டுப்பாட முறையை மாற்றி அமைக்கும் முயற்சியும் சமீப காலமாக வலுப்பெற்றுள்ளது.
    நமது பள்ளிக் கல்வி முறையில் நீண்ட காலமாக மனப்பாடமும், வீட்டுப்பாடமும் இருக்கிறது. இரண்டும் ஒவ்வொருவிதமான திறன் வளர்ப்பு பயிற்சிகள் என்றாலும், அதன் விளைவுகள் சிறந்த பலனைத் தந்திருக்கிறதா? என்ற ஆய்வுக்கு வந்திருக்கிறார்கள் கல்வியாளர்கள். அதனால்தான் பள்ளிகளில் 2-ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தேவையில்லை என்ற கருத்தும், மனப்பாடம் மற்றும் வீட்டுப்பாட முறையை மாற்றி அமைக்கும் முயற்சியும் சமீப காலமாக வலுப்பெற்றுள்ளது. வீட்டுப்பாடம் மற்றும் மனப்பாடம் பற்றிய சிறிய கண்ணோட்டம்...

    பாடங்கள் எளிதில் மனதில் பதிவதற்காக மனப்பாட பயிற்சி செய்வது சிறந்த மாணவர்களின் பண்பு. முக்கியமான பாடப் பகுதிகள், வாய்ப்பாடுகள், விதிகள், பாடல்கள் போன்றவற்றை அனைத்து மாணவர்களும் அறிந்து வைத்திருக்க வேண்டும் என்பதற்காக குறிப்பிட்ட இவற்றை கண்டிப்பாக மனப்பாடம் செய்து வர வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்துவது உண்டு. தேர்வுகளிலும் மனப்பாடப் பகுதியில் இருந்து சில கேள்விகள் கேட்பது உண்டு.

    மாணவர்கள் எளிதில் மதிப்பெண் பெறவும், தேர்ச்சி பெறவும் மனப்பாட பகுதிகள் துணை நிற்கும். மனப்பாடப் பகுதிகளை மனதில் நிறுத்துவதற்காக மீண்டும், மீண்டும் படிப்பது மாணவர்களின் வழக்கம். இப்படி பயிற்சி செய்வதால், விடை எழுதும்போது மாணவர்கள் ஓரிரு வார்த்தைகள்கூட மாற்றாமல் அப்படியே எழுதும் பழக்கமும் அதிகரித்தது. காலம் காலமாக நடைமுறையில் உள்ள இந்த பழக்கம் மாணவர்களின் படைப்புத் திறனை ஒருவகையில் பாதிப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம். பாடங்கள் எப்போதும் புரிதலுக்கானவையே தவிர, ஒப்புவிப்பதற்கானதல்ல. மனப்பாட முறையானது படித்ததை, விடைத்தாளில் கொட்டி வைக்கும் முறையை வளர்ப்பதாக அமைவதால் சமீப காலமாக மனப்பாட பயிற்சி முறையை மாற்றி அமைக்கும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    இது போலவே வீட்டுப் பாட பயிற்சி முறையும், மாணவர்களின் திறனில் எதிர்மறையை உருவாக்கியிருக்கிறதோ என்ற எண்ணமும் எழுந்திருக்கிறது. பள்ளியில் நடத்தும் பாடங்களை புரிந்து கொண்டு, அது சார்ந்த பாடங்களை படித்து எழுதிப் பயிற்சி பெறுவதற்காக வீட்டுப்பாட பயிற்சிகள் வழங்கப்பட்டன. கணக்குப் பாடத்தில் புதிர்களை விடுவித்தல், விடை காணல் என பயிற்சிகள் வழங்கப்பட்டன.

    சிறந்த பயிற்சி முறையான வீட்டுப்பாட முறை, சமீப காலத்தில் மாணவர்களுக்கு அதிக மனச்சுமையை ஏற்படுத்துவதாக மாறி உள்ளது. ஒவ்வொரு பாடத்திலும் வழங்கப்படும் அதிகப்படியான பயிற்சிகள், மாணவர்களை எந்திர கதியில் இயங்க வைக்கிறது. பள்ளி முன்பருவ குழந்தைகளுக்கும் விதவிதமான சேகரிப்புகளுடன்கூடிய வீட்டுப்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதனால் இளம் குழந்தைகள் பள்ளிச்சூழலை வெறுக்கும் அபாயம் ஏற்படுகிறது என்ற புரிதல் வலுப்பெற்று, 2-ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தேவையில்லை என்ற முடிவு சமீபத்தில் எட்டப்பட்டிருக்கிறது. நீதிமன்றமே இதற்கான உத்தரவை பிறப்பித்திருக்கிறது. அதற்கு பெரும்பாலான பெற்றோர்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள். இருந்தாலும் இந்த உத்தரவு இன்னும் நடைமுறைப்படுத்தப்படவிலலை.

    தனியார் பள்ளிதோறும் மழலையர் பாடத்திட்டங்களில் மாறுதல்கள் இருக்கின்றன. பயிற்றுவிக்கும் முறையிலும், மாணவர்களிடம் பயிற்சி வாங்கும் முறையிலும் வேறுபாடுகள் காட்டுகிறார்கள். விளையாட்டுப் பருவம் மாறாத மழலைகளுக்கு கல்வி என்ற பெயரில் கடுமையான பயிற்சிகள் வழங்குவது ஏற்புடையதல்ல. அவர்களுக்கு பக்கம் பக்கமாக வீட்டுப் பாட பயிற்சி வழங்குவது குழந்தைகளை விரைவில் சோர்வடையச் செய்துவிடுகிறது. அதுவே பள்ளிச்சூழலை குழந்தைகள் வெறுக்கும் நிலையை ஏற்படுத்திவிடும் அபாயமும் உள்ளது. அதிகமான பாடச்சுமையால் குழந்தைகள் எழுத மறுத்து அடம்பிடிப்பதும், பெற்றோர் குழந்தைகளை விரட்டுவதும், இறுதியில் குழந்தைகளுக்காக பெற்றோரே சில பாடங்களை எழுதிக் கொடுப்பதும் வழக்கமாகிவிட்டது. இதைத் தடுக்க சிறுவர்களின் வீட்டுப்பாட சுமையை குறைக்க உத்தரவு வெளியாகி இருப்பது நல்லதுதான்.

    2 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய பள்ளிக்கல்வி வாரியம் மனப்பாடம் மற்றும் வீட்டுப் பாட பயிற்சித் திட்டத்தை முற்றிலும் மாற்றி அமைத்தது. அதில் வீட்டுப்பாடத்தை மாணவர்கள் ரசித்துச் செய்யும் வகையில் பல பயிற்சிகள் சேர்க்கப்பட்டன. 318 பக்கங்கள் கொண்டதாக அந்த பயிற்சி செயல்திட்ட அறிக்கை வெளியானது. அதில் வீட்டின் நிர்வாக கணக்குகள் வழியே மாணவர்கள் கணிதப்பாடத்தை விளங்கிக்கொள்வது, பத்திரிகை, டி.வி. சானல்கள் வழியே சமூக நிலவரங்கள், பிரச்சினைகள், தீர்வுகளை தெரிந்து கொள்ளும் பயிற்சிமுறையும் சேர்க்கப்பட்டது.

    மாணவர்களின் மனநிலை, வயது உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் கவனத்தில் கொண்டு, காலத்திற்கேற்ற மாற்றங்களுடன் பாடப் பயிற்சிகளை மாற்றி அமைப்பதில் தவறில்லை. அதற்கான கல்வியாளர்கள், உளவியலாளர்கள் குழு துடிப்புடன் செயல்படட்டும். அதுவே நாட்டின் எதிர்கால தூண்களான சிறந்த மாணவர்களை உருவாக்கும்!
    Next Story
    ×