search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பள்ளி மாணவர்களுக்கான உளவியல் தேர்வுகள்
    X

    பள்ளி மாணவர்களுக்கான உளவியல் தேர்வுகள்

    நிஜத்தில் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியாக பாடம் நடத்துவது உளவியல் முறைப்படி தவறாகும். மாணவர்களின் திறனை உளவியல் தேர்வுகள் மூலம் அறிந்து அதற்கேற்ப பயிற்சி வழங்க வேண்டும்.
    மாணவர்கள் நாட்டின் எதிர்காலத் தூண்கள். அவர்களை நல்வழிப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு அதிகப்படியான பயிற்சிகளை வழங்குவதை ஏராளமான பள்ளிகள் வாடிக்கையாக வைத்துள்ளன. குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்துடன் பெற்றோரும் இதை பொறுத்துக் கொள்வது உண்டு. ஆனால் குழந்தைகளின் மனம் இதை பொறுத்துக் கொள்ளுமா? என்பதே இங்கு யோசிக்கப்பட வேண்டும்.

    மாணவர்கள் வெறும் மதிப்பெண்களை வாங்கி பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் எந்திரங்களல்ல. மாணவர் நலன் கருதிய ஆராய்ச்சிகளெல்லாம், ஒவ்வொரு மாணவரின் மனநிலைக்கு ஏற்ப பயிற்சி அளிக்க வேண்டும் என்றே சொல்கிறது. ஆனால் மாணவர்களின் மனநிலையை புரிந்து கொள்ளும் நிலையில் பெற்றோரும், பள்ளி நிர்வாகங்களும் இருக்கிறார்களா? என்பது கேள்விக்குறிதான்.

    நிஜத்தில் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியாக பாடம் நடத்துவது உளவியல் முறைப்படி தவறாகும். மாணவர்களின் திறனை உளவியல் தேர்வுகள் மூலம் அறிந்து அதற்கேற்ப பயிற்சி வழங்க வேண்டும். பின்தங்கிய மாணவர்களை மனதைக் காயப்படுத்தாமல் அவர்களின் திறன் வளர்ச்சிக்கான பயிற்சிகளை வழங்க வேண்டும். மேலும் அவர்கள் எத்தகைய திறனில் சிறந்து விளங்குகிறார்களோ, அது சார்ந்த பாடங்களையும், பயிற்சிகளையும் வழங்கி அவர்களையும் மேம்பட்டவர்களாக உயர்த்த வேண்டும்.

    மாணவர்களின் திறனை மதிப்பீடு செய்ய பள்ளிகள் செய்ய வேண்டிய சில உளவியல் பயிற்சிகளை இங்கு பார்ப்போம்...

    பலம் பலவீனம் அறிதல்

    பாடங்கள் படிக்கும் திறனை வைத்து மாணவரின் பலம் பலவீனத்தை அளவிடுவதையே பெரும்பாலான பள்ளிகள் வாடிக்கையாக வைத்திருக்கின்றன. நிஜத்தில் அது புத்திசாலித்தனத்தை அறியும் பயிற்சியாக கூட இருப்பதில்லை என்பதே உண்மை. உளவியல் ரீதியாக ஒருவரின் பலம் பலவீனத்தை அறிய வேண்டுமானால் முதல் இரண்டு வாரங்களுக்காவது பாடங்கள் நடத்தாமல் மாணவர்களோடு பழக வேண்டும் அல்லது பாடங்களை விளையாட்டு கலந்த பயிற்சியோடு வழங்க வேண்டும். அப்போதுதான் மாணவர்களின் உடல் ரீதியான பலமும், மனம் ரீதியான பலம்-பலவீனங்களும் தெரியவரும். அதுதான், ஒரு மாணவர் கணிதத் திறனில் சிறந்து விளங்குகிறாரா, அறிவியலில் நாட்டம் கொண்டிருக்கிறாரா?, சமூக பண்பாட்டை கடைப்பிடிக்கிறாரா? என்பதை தெரிந்து கொள்ள உதவும்.

    எழுத்து வடிவில் நடத்தப்படும் உளவியல் தேர்வுகளைவிட, செயல்பாட்டின் அடிப்படையில் நடத்தப்படும் உளவியல் தேர்வுகள் மாணவர்களின் திறனை நன்கு மதிப்பிட உதவும். இந்த மதிப்பீடு மாணவர்களை வகைப்படுத்தவோ, புறக்கணிக்கவோ பயன் படக்கூடாது. அவர்களின் திறனை வளர்ப்பதற்காக, ஊக்குவிப்பதற்காக பயன்பட வேண்டும்.

    னிநபர் பாடங்கள்

    ஏற்கனவே சொன்னதுபோல, பாடத்திட்டங்கள் அனைத்தும் அனைவருக்கும் பொருத்தமானதல்ல. நாம் உருவத்தில்தான் ஒற்றுமை கொண்ட மனிதர்கள். அதிலும்கூட பல வேற்றுமைகள் இருக்கலாம். உள்ளத்தால் ஒவ்வொருவரும் வேறு வேறானவர்கள். கருத்தொற்றுமை கொண்டவர்கள் இருந்தாலும், அவர்கள் அனைவருமே ஒரே மனப்போக்கு கொண்டவர்களாக இருக்க மாட்டார்கள். பாடங்கள் எப்படி பல உட்பிரிவுகளாக பிரிந்து கொண்டே செல்கிறதோ, அதுபோலவே மாணவர்களும் விருப்பத்தாலும், திறன்களாலும் வேறுபட்டவர்களே. அவர்களுக்கு ஒரே மாதிரியான பாடத்திட்டங்கள் ஆகாது.



    அடிப்படைப் பாடத்திட்டங்கள் அனைவருக்கும் பொதுவானவை என்றாலும், கணக்கு வராததற்காக ஒரு மாணவனை கடிந்துகொண்டே இருப்பது தேவையற்றது. கணிதம் தெரிந்தவர்கள் கணிதத்தை ஆண்டால், அறிவியல் தெரிந்தவர்கள் அறிவியலை ஆளலாம். அனைத்தையும் அறிந்து கொண்டு அகிலத்தையே ஆட்டிப்படைக்க ஒருவராலும் முடியாது.

    எனவே மாணவர் விருப்பத்தின் அடிப்படையில் பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டு பயிற்சி வழங்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் மாணவரின் திறனுக்கேற்ப பாடச்சுமையை கூட்டி, குறைத்து கொடுக்க வேண்டும். விருப்பப்பாடத்தில் திறமைகளை வளர்க்கவும், மற்ற பாடங்களில் அடிப்படையை அறியவும் வித்திட்டாலே அவர் சிறந்த நிலையை எட்டிவிடுவார்.

    வகுப்பறை மட்டுமே போதனைக்கூடமல்ல...

    தொடர்ந்து வகுப்பறையிலேயே பாடங்கள் நடத்தப்படுவதும், உளவியல் முறையில் தவறானதாகும். எல்லாவற்றையும் எழுத்துகளிலேயே கற்றுக் கொடுத்துவிட முடியாது. போதனையால் மட்டும் புத்திசாலித்தனத்தை வளர்க்க முடியாது. வகுப்பறை மட்டுமே போதுமென்றால் பள்ளிகளில் மைதானங்கள் தேவையிருக்காது. ஒரு மனமாற்றத்துக்காக, புத்துணர்ச்சிக்காக விளையாட்டு வகுப்புகளை வைத்திருக்கும் பள்ளிகள், வகுப்பறையைத் தாண்டிய கற்பித்தலுக்கு வந்தால் மாணவர்களின் திறன் பலமடங்கு உயரும் என்கிறது உளவியல் முறை. வாரத்திற்கு ஒன்றிரண்டு விளையாட்டு நேரம், வருடத்திற்கு ஒரு சுற்றுலா என்பதைக் கடந்து, “பயிற்சி வழி படிப்பு, உலா வந்து உவகையுடன் கல்வி” என்பதே மாணவர் திறனை வளர்க்க உளவியல் சொல்லும் தீர்வு.

    முன்னேற்றங்களை அளவிடல்

    மதிப்பெண் உயர்வதை வைத்தே பெற்றோரும், ஆசிரியரும் மாணவரின் திறனை, முன்னேற்றத்தை அளவிடுகிறார்கள். ஒரு மாணவனை மீண்டும் தேர்வெழுத வைத்தால் அதே மதிப்பெண் பெறுவார் என்பது சாத்தியமில்லை. ஆனால் திறன் அடிப்படையில் முன்னேற்றத்தை வளர்ப்பது, பயந்த மனிதனுக்கு பயத்தை போக்கியது போன்ற வீரத்தை வளர்ப்பதாகும். அது அவனுக்கு தோல்வி என்ற நினைப்பே வராமல் வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும். எந்தச் சூழலிலும் வெற்றியை நோக்கி நடைபோடும் தைரியத்தை வளர்க்கும். அத்தகைய அபார ஊக்கம், மாணவர்களை அவரவர் உளவியல் அடிப்படையில் உற்சாகப்படுத்தும்போதே நிகழ்கிறது. மாற்றுவழியில் மாணவர் திறனை மாற்றியமைப்பதே முன்னேற்றப்படியாகும்.

    பள்ளிகளும், பெற்றோரும் மாணவர்களை மதிப்பெண்களுக்காக தயார்படுத்தாமல், இப்படி உளவியல் ரீதியில் தயார் படுத்தினால், ஒவ்வொருவரும் முதன்மை மாணவர்களாக உயர்ந்து இந்த சமூகத்தையே உயர்த்துவார்கள் என்பதில் ஐயமில்லை! 
    Next Story
    ×