search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகள் பள்ளிக்கு சாப்பிடாமல் போகலாமா?
    X

    குழந்தைகள் பள்ளிக்கு சாப்பிடாமல் போகலாமா?

    சத்தான காலை உணவே குழந்தைகளின் நினைவுத்திறன், எச்சரிக்கை உணர்வு, மன ஒருமைப்பாடு, சாதுரிய மனப்பான்மைக்கு உதவியாக இருக்கும்.
    # ‘அம்முக்குட்டி... செல்லக்குட்டி... மணி ஏழரை ஆச்சு... எந்திரிமா...’ என அம்மா எழுப்ப... ‘இன்னும் கொஞ்ச நேரம்’ என அன்பு அம்மாவை கெஞ்சிவிட்டு தூங்கிவிடுகிறீர்களா?

    # பிறகு எழுந்தததும் ‘லேட் ஆயிடுச்சு மம்மி, எனக்கு டிபன் வேண்டாம், ஸ்நாக்ஸ் சாப்பிட்டுக்கிறேன்னு’ பள்ளிக்கு ஓட்டம் பிடிக்கிறீர்களா?

    # இப்படி, காலை உணவை தவிர்ப்பது எவ்வளவு தீமையானது என்பது உங்களுக்குத் தெரியுமா?

    காலை உணவின் நன்மைகளையும், அதை தவிர்ப்பதால் ஏற்படும் உடல் மன பிரச்சினைகள் பற்றியும் கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா...

    95 சதவீத குழந்தைகள் சத்தான உணவை எடுத்துக் கொள்வதில்லை என்கிறது ஒரு புள்ளி விவரம். பாதி குழந்தைகள் காலை உணவில் கவனம் செலுத்துவதில்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.

    சத்தான காலை உணவே குழந்தைகளின் நினைவுத்திறன், எச்சரிக்கை உணர்வு, மன ஒருமைப்பாடு, சாதுரிய மனப்பான்மைக்கு உதவியாக இருக்கும். நிம்மதியாக சாப்பிட்டு மனநிறைவுடன் பள்ளிக்கு கிளம்புபவர்கள் மகிழ்ச்சியான மனநிலையுடன் எதையும் எதிர்கொள்வார்கள்.

    பசி, பட்டினியுடன் பள்ளிக்குப் போனால் படித்த பாடங்கள் நினைவுக்கு வருவதில் சிரமம் ஏற்படும். பார்ப்பவர்கள் மீது எரிச்சலுடன் பாய்வீர்கள். பள்ளி மீதும், ஆசிரியர் மீதும் வெறுப்பு வரலாம். இதற்கு அம்மாதான் காரணம் என கோபம் ஏற்படலாம். இதுபோன்ற எரிச்சல் மற்றும் எதிர்மறை மனநிலைகள் நாள் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி அன்றைய தினத்தை சந்தோஷமற்றதாக மாற்றிவிடும் வாய்ப்பு உண்டு.

    அடிக்கடி காலை உணவை சாப்பிடாமல் கிளம்புபவர்களுக்கு வயிற்றில் சுரக்கும் ஜீரண திரவங்களால் வயிற்றில் புண் ஏற்பட்டு, ‘அல்சர்’ எனும் தீராத வயிற்றுவலி பிரச்சினையாக மாற வாய்ப்பு உண்டு.

    காலை உணவை தவிர்த்தால் அன்றைய பொழுதுக்குத் தேவையான ரத்த ஓட்டம் மூளைக்கு கிடைப்பதில் சிரமம் ஏற்படுவதால் மூளை சோர்வடையும். இதுவே நினைவுத்திறன் பாதிப்பு முதல், எரிச்சல் வரை எல்லா பிரச்சினைகளையும் கொண்டு வரும்.

    அதிகமாக காலை உணவை தவிர்த்தால் உடல் வளர்ச்சி பாதிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். பல்வேறு நோய் பாதிப்புகள் வரலாம். எனவே வெறும் பால் அல்லது ரொட்டித் துண்டு, பிஸ்கட்டுகளை மட்டும் சாப்பிடுவதை தவிர்த்து, சுவையான, சத்தான காலை உணவை எடுத்துக் கொள்வது அவசியமாகும்.

    சாப்பிடவில்லையே என பசியைத் தள்ளிப்போட நொறுக்குத் தீனிகளை உண்டால் உடல் எடை கூடும்.



    காலை உணவு எடுத்து கொள்ளவில்லை என்றால் இரைப்பை காலியாக இருக்கும். இதனால் இரவில் இயல்பாக சுரந்துள்ள பித்தநீர் மெல்ல தலைக்கு ஏறும் அபாயம் உள்ளது. பித்தம் தலைக்கு ஏறினால் பல்வேறு உடல் நலக்கோளாறுகள் ஏற்படும்.

    காலை உணவு சாப்பிடாதவர்கள் மதிய உணவையும் திருப்தியாக சாப்பிட முடியாது. கொஞ்சம் சாப்பிட்டவுடனே வயிறு நிறைந்து விட்டது போன்ற உணர்வு ஏற்படும்..

    எல்லாம் சரி, காலை உணவு சாப்பிட முடியாமல் போக என்ன காரணம் என்பது பற்றி சிறிது யோசிப்போமா...

    காலை 7 மணியில் இருந்தே பள்ளி பேருந்துகள், பிள்ளைகளை அள்ளிச் செல்ல வீதிவலம் வந்துவிடுகின்றன. நடந்து செல்பவர்களைத் தவிர அனைவரும் 8.30க்குள் பள்ளிக்கு சென்றுவிடுகிறார்கள். இவ்வளவு சீக்கிரமாக பள்ளி செல்பவர்கள், தங்கள் பள்ளி வாகனம் வரும் நேரத்திற்கு சுமார் 2 மணி நேரத்திற்கு முன்பு படுக்கையை விட்டு எழுந்தால்தான், பரபரப்பின்றி அனைத்து பணிகளையும் முடித்து, நிம்மதியாக சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு கிளம்ப முடியும்.

    நீங்கள் 8.30க்குள் வீட்டிலிருந்து கிளம்ப வேண்டுமென்றால், 6.30 முதல் 7 மணிக்குள் எழுந்தாக வேண்டும். இவ்வளவு சீக்கிரம் எழுந்திருக்க வேண்டுமா? என்று நீங்கள் யோசித்தால், உங்கள் அம்மாவின் சிரமத்தை எண்ணிப் பாருங்கள். உங்களுக்கும் 2 மணி நேரம் முன்னதாகவே எழுந்து எல்லாப் பணிகளையும் முடித்தால்தான் நீங்கள் நிம்மதியாக கிளம்ப முடியும்.

    காலைக்கடன்கள், பள்ளிப் பாடங்கள், குளித்தல், சாப்பிடுதல், சீருடை அணிதல், துணி துவைத்தல், இஸ்திரி செய்தல் என ஒவ்வொருவருக்கும் எண்ணற்ற பணிகள் இருக்கலாம். தாமதமாக எழுந்திருப்பதால் சின்னச்சின்ன வேலைகளும் நேரத்தை விழுங்கும். பரபரப்பில் பல பணிகளை மறந்துபோகவும் வாய்ப்பு உண்டு.

    பள்ளி முடிந்து வந்ததும் வீட்டுப் பாடங்களை முடித்து வைப்பதுடன், பேனா பென்சில் முதல் ஐ.டி. கார்டு வரை அனைத்தையும் ஒரே இடத்தில் எடுத்து வைத்திருந்தால் காலையில் கொஞ்சம் பரபரப்பு இல்லாமல் கிளம்பலாம். இல்லாவிட்டால் கடைசி நேரத்தில் ‘அய்யோ. .. வீட்டுப் பாடம் முடிக்கலையே,’ ‘இந்த ஐ.டி. கார்டை எங்கே வச்சேன்னு தெரியலையே’ என பரபரப்பில் எரிச்சல் ஏற்பட்டு, கோபம் தலைக்கேறி சாப்பிடாமல் ஓட வேண்டி வரலாம். சீக்கிரம் எழுந்துவிட்டால் இந்த சிரமங்கள் இல்லை. 
    Next Story
    ×