search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளை பாதிக்கும் பிறவி இதயக்குறைபாடு - வராமல் பாதுகாப்பது எப்படி?
    X

    குழந்தைகளை பாதிக்கும் பிறவி இதயக்குறைபாடு - வராமல் பாதுகாப்பது எப்படி?

    தீவிர பிறவி இதயக் குறைபாடு இருக்கும் குழந்தைகளைக் குணப்படுத்த சிகிச்சைகள் இருக்கின்றன. ஆனால், அதற்கு ஆகும் செலவு மிக அதிகம்.
    இந்தியாவில் குழந்தைகள் இறப்பு விகிதம் (Infant Mortality Rate) 1,000 குழந்தைகளில் 34 பேர்’ என்கிறது ஒரு புள்ளிவிவரம். இதில் 10 சதவிகிதக் குழந்தைகள் `பிறவி இதயக் குறைபாட்டால்' பாதிக்கப்படுவதாகச் சொல்கிறது ஓர் ஆய்வு.

    பிறக்கும் குழந்தைக்கு சுவாசக் கோளாறு இருப்பதை பிரசவம் செய்யும் மருத்துவரோ அல்லது உடனிருக்கும் செவிலியரோ எளிதாகக் கண்டுபிடித்துவிடுவார்கள். ரத்த ஓட்டம் காரணமாகப் பிறந்த குழந்தை சிவப்பாகத்தான் இருக்கும். அப்படி இல்லையென்றால், ஏதோ கோளாறு இருக்கலாம்.

    இந்தக் குறைபாட்டில் இரண்டு வகைகள் இருக்கின்றன. ஒன்று, இதயத்தில் ஓட்டை இருப்பது. இதைக் கண்டுபிடித்துவிட்டால் சிகிச்சைகள் மூலம் குணப்படுத்திவிடலாம். இதனால் குழந்தையின் உயிருக்கு ஆபத்தில்லை. இரண்டாவது, `சினாப்டிக் கான்ஜெனிட்டல் ஹார்ட் டிசீஸ்’ (Synaptic Congenital Heart Disease). இந்தக் குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகள் நீல நிறத்தில் மாறிவிடுவார்கள். இந்தக் குழந்தைகளின் உடலில் ஆக்சிஜன் அளவு மிகக் குறைவாக இருக்கும். இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உயிர் பிழைப்பது கடினம். தொடர் சிகிச்சைகள் அளித்தாலும், ஆயுளை நீட்டிக்கலாமே தவிர, காப்பாற்றுவது கடினம்.

    பிறவி இதயக் குறைபாடு ஏன் ஏற்படுகிறது?

    * மரபணுக் குறைபாடு
    * பெற்றோர்களுக்குச் சர்க்கரைநோய் இருப்பது
    * கர்ப்பமாக இருக்கும்போது அதிக மாத்திரைகள் சாப்பிடுவது
    * கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு இருப்பது
    * கர்ப்ப காலத்தில் வைரஸ் காய்ச்சலால் பாதிப்பு
    * ருபெல்லா தடுப்பூசி (Rubella Vaccine) போடாமல் விடுவது.


    பிறவி இதயக் குறைபாடு வராமல் பாதுகாப்பது எப்படி?

    * சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு முறையாகச் சிகிச்சையளிக்க வேண்டும்.
    * ருபெல்லா தடுப்பூசி குறித்துப் பெண்களுக்கு விழிப்புஉணர்வை ஏற்படுத்தலாம்.
    * கருவிலேயே குழந்தையின் இதயக் குறைபாட்டைக் கண்டறிந்து (Fetal Heart Screening) சிகிச்சையளிக்கலாம்.
    * பெற்றோர்களுக்கு மரபணுக் குறைபாடு இருக்கிறதா என்பதை சோதனை செய்து பார்க்கலாம்.

    உலக அளவில், பிறக்கும் 1,000 குழந்தைகளில் 9 குழந்தைகள் இதயக் குறைபாட்டுடன் பிறக்கின்றன. அந்த 9 குழந்தைகளில், மூன்று குழந்தைகள் தீவிர பிறவி இதயக் குறைபாட்டுடன் பிறக்கின்றன. இது பொதுவான புள்ளிவிவரம். தமிழ்நாட்டில் இதற்கான கணக்கெடுப்புகள் இதுவரை நடத்தப்படவில்லை. முறையாகக் கணக்கெடுத்தால்தான் எத்தனை குழந்தைகள் இதயக் குறைபாட்டுடன் பிறக்கின்றன என்று உறுதியாகச் சொல்ல முடியும்.

    தீவிர பிறவி இதயக் குறைபாடு இருக்கும் குழந்தைகளைக் குணப்படுத்த சிகிச்சைகள் இருக்கின்றன. ஆனால், அதற்கு ஆகும் செலவு மிக அதிகம். இத்தனை குழந்தைகளுக்கும் அறுவைசிகிச்சை செய்து, சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனைகளில் வசதிகள் இருக்கிறதா என்றால், பதில் கேள்விக்குறிதான். தனியார் மருத்துவமனைகளிலும் இந்த வசதிகள் இல்லை. தமிழ்நாட்டில் குழந்தைகள் நல மருத்துவமனை (Institute of Child Health and Hospital) சென்னையில் மட்டுமே இருக்கிறது. இதுபோன்ற மருத்துவமனைகளை தமிழ்நாடு முழுவதும் நிறுவி, இதற்கான சிகிச்சைகளைச் செய்தால் குழந்தைகள் இறப்பைத் தடுத்துவிடலாம். 
    Next Story
    ×