search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளின் மனதை காயப்படுத்தும் கேலிப்பேச்சுகள்
    X

    குழந்தைகளின் மனதை காயப்படுத்தும் கேலிப்பேச்சுகள்

    பிரச்சினைகள், கேலிப் பேச்சுகளால் மனஅழுத்தத்திற்கு உள்ளாகும் குழந்தைகளிடம் கீழ்க்கண்ட சில அறிகுறிகள் தென்படும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ‘உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் எதை எல்லாம் வழங்கிக்கொண்டிருக்கிறீர்கள்?’ என்ற கேள்வியை பெற்றோர்களிடம் கேட்டால், பதிலாக சொல்ல அவர்கள் நிறைய விஷயங்களை வைத்திருக்கிறார்கள். ‘குழந்தைகளுக்கு உயர்ந்த கல்வியை வழங்குகிறோம். சத்துணவுகளை கொடுக்கிறோம். அவர்களுக்கு தேவையான சவுகரியங்களை உருவாக்கித்தருகிறோம். வருடத்திற்கு ஒன்றிரண்டு சுற்றுலாவுக்கும் அழைத்துச் செல்கிறோம்’ என்றெல்லாம் கூறுகிறார்கள்.

    பெற்றோர் கொடுத்துக்கொண்டிருக்கும் இவை எல்லாம் குழந்தைகளுக்குத் தேவைதான் என்றாலும், இப்போது அவர்கள் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை உணர்வதும், அவர்களது மனக்குழப்பத்தை போக்க எதை தற்போது வழங்கவேண்டும் என்பதை தெரிந்துகொள்வதும் மிக அவசியம்.

    பல்வேறு சம்பவங்கள் ஒவ்வொரு குழந்தையின் மனநிலையையும் பாதிக்கின்றன. சிறுவர், சிறுமிகள் என்ற பேதமின்றி எல்லா குழந்தைகளும் இத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள். ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் இதை உணர்ந்துகொள்ளாமல், ‘நமது குழந்தைக்கு தேவையான அனைத்தையும் செய்துகொடுத்து, அவர்களை நல்லபடியாக கவனித்துக் கொண்டிருக்கிறோம்’ என்று, உண்மையை அறியாமல் நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

    குழந்தைகள் தேடிவந்து ஏதாவது பேச வாயெடுத்தால், பல பெற்றோர்கள் அதை கவனமாக நிதானித்து கேட்பதில்லை. அப்படியே கேட்டாலும் ‘இதெல்லாம் ஒரு பிரச்சினையா? இதைப்போய் சொல்லவந்துவிட்டாயே!’ என்பதுபோல் அலட்சியமாக பதிலளித்துவிடுகிறார்கள்.

    இப்போது பெரியவர்களுக்கு பிரச்சினைகள் அதிகரிப்பதுபோல், குழந்தைகளுக்கும் பிரச்சினைகள் அதிகரிக்கின்றன. அந்த பிரச்சினைகளை குழந்தைகளின் மனநிலையில் இருந்தும், குழந்தைகளின் சூழ்நிலையில் இருந்தும் உணர்ந்தால் மட்டுமே அதை தெளிவாக அணுகி, தீர்வு காணமுடியும். பெற்றோர் தங்கள் சிந்தனையை விசாலப்படுத்திக்கொண்டால் மட்டுமே குழந்தைகளை சரியாக அணுகி, பேசி, அவர்களது பிரச்சினைகளை முழுமையாக உணரமுடியும்.



    பிரச்சினைகள், கேலிப் பேச்சுகளால் மனஅழுத்தத்திற்கு உள்ளாகும் குழந்தைகளிடம் கீழ்க்கண்ட சில அறிகுறிகள் தென்படும்.

    - தோழிகளிடம் இருந்து விலகி, தங்களை தனிமைப்படுத்திக்கொள்வார்கள்.

    - கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவுவார்கள்.

    - பேசுவதற்கு ஆர்வமில்லாமல் ஒதுங்கிக்கொள்வார்கள்.

    - பள்ளிக்கு செல்வதை தவிர்க்கப்பார்ப்பார்கள்.

    - உணவில் ஆர்வம் குறைந்துபோயிருக்கும்.

    - விரக்தியுடன் காணப்படுவார்கள்.

    - அளவுக்கு அதிகமாக கோபம் வரும்.

    - பிடிவாதம் பிடிப்பார்கள்.

    - வீட்டிலும், பள்ளியிலும் சண்டைபோட்டபடி இருப்பார்கள்.

    - தூக்கம் குறையும்.

    - படிப்பில் பின்தங்குவார்கள்.

    - பிரச்சினைக்குரிய பழக்கவழக்கங்களில் ஈடுபட முயற்சிப்பார்கள்.



    சோர்வு, அலட்சியம், விரக்தி, கோபம் போன்றவை குழந்தைகளிடம் வெளிப்படத் தொடங்கிவிட்டாலே பெற்றோர் உடனே அதற்கான காரணங்களை அறிய முன்வரவேண்டும். மாறாக, ‘வேண்டுமென்றே அவ்வாறு குழந்தை செய்கிறது. காலப்போக்கில் அதுவாகவே சரியாகிவிடும்’ என்று நினைத்து, அதற்கு தீர்வு காணாமல் இருந்துவிடக்கூடாது.

    குழந்தைகளின் மனநிலையை உணர்ந்துகொள்ள அவர்களோடு பெற்றோர் அதிக நேரத்தை செலவிடவேண்டும் என்ற அவசியம் இல்லை. தினமும் சிறிது நேரத்தை அவர்களுக்காக ஒதுக்கிவைத்து, அந்த நேரத்தில் மனம்விட்டுப் பேசினாலே போதும்.

    குழந்தைகளுக்காக கவுன்சலிங்கிற்கு வரும் பெரும்பாலான பெற்றோர்கள் தாங்கள் மிகுந்த கடனுக்கு மத்தியிலும், கஷ்டங்களுக்கு மத்தியிலும் வாழ்வதாக சொல்கிறார்கள். கடனாலோ, இதர பிரச்சினைகளாலோ பெற்றோருக்கு மன அழுத்தம் ஏற்படலாம். அதற்கு குழந்தை காரணமில்லை. பெற்றோர் தாங்களாக மனஅழுத்தத்தை உருவாக்கிக்கொண்டு அதற்காக குழந்தைகளை குறைசொல்லக்கூடாது. தங்கள் கவலைகளையும், கஷ்டங்களையும் குழந்தைகளிடம் திணிக்கவும்கூடாது. அவர்களை குழந்தைகளாகவே வாழவும், வளரவும் அனுமதிக்கவேண்டும்.

    குழந்தைகளுக்கு தேவையான முக்கியத்துவமும், அன்பும் பெற்றோர்களிடமிருந்து மட்டுமல்ல, அவர்கள் அதிக நேரத்தை செலவிடும் ஆசிரியர்களிடமிருந்தும் கிடைக்கவேண்டும். சமூகமும் இதில் தனது பங்களிப்பை சரிவர செய்யவேண்டும். ஒட்டுமொத்தமாக அனைவரும் குழந்தைகள் மீது கவனம் செலுத்தினால்தான், அவர்களது மனஅழுத்தம் குறைந்து, அவர்களது மனநிலையில் நல்ல மாற்றமும், மறுமலர்ச்சியும் உருவாகும்.

    - விஜயலட்சுமி பந்தையன்
    Next Story
    ×