search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பிரிந்து வாழும் பெண்கள் குழந்தைகளை வளர்க்கும்போது..
    X

    பிரிந்து வாழும் பெண்கள் குழந்தைகளை வளர்க்கும்போது..

    விவாகரத்து பெற்றுவிட்டு தனியாக வாழும் பெண்கள் தங்கள் குழந்தைகளை வளர்ப்பதென்பது ஒரு சவாலான விஷயமாகத்தான் இருக்கிறது.
    விவாகரத்து பெற்றுவிட்டு தனியாக வாழும் பெண்கள் தங்கள் குழந்தைகளை வளர்ப்பதென்பது ஒரு சவாலான விஷயமாகத்தான் இருக்கிறது. அதிலும் அவள் கணவரிடம் போராடி, நீதிமன்றத்துக்கு அலைந்து விவாகரத்து பெற்றிருந்தால், தனியாகப் பிரிந்து புதிய வாழ்க்கையை தொடங்கும்போது மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பலவீனப்பட்டிருப்பார். சமூகம் அவளை பார்க்கும் பார்வையும் வித்தியாசமாக இருக்கும். இதனால் அத்தகைய பெண்கள் ஓரளவு மனதளவில் பாதிக்கப்பட்டவர்களாகவே இருப்பார்கள்.

    இருவருமாக சேர்ந்து வளர்த்த குழந்தைகளை தாய் மட்டும் வளர்த்து, பராமரிக்கும்போதும் தடுமாற்றங்கள் ஏற்படத்தான் செய்யும். வாழ்நாள் முழுவதும் துணையாக வருவார் என்று கருதிய துணை இடையில் காணாமல் போகும்போது ஏற்படும் மன உளைச்சலால் சிந்தனைகளும் சிதறிப்போகும். ‘இனி குழந்தை களுக்காக மட்டுமே வாழவேண்டும்’ என்று நினைத்துவிட்டால் நீண்ட தனிமை ஒன்று கண்முன்னே வந்து நிற்கும். எப்படி அதை கடந்து செல்லப்போகிறோமோ என்ற மலைப்பு தோன்றும். இனி வேறு எதுவும் செய்ய முடியாது என்ற நிலையில் ஒருவித சோர்வு வந்து மனதை பலவீனப்படுத்தும்.

    இது பற்றி மனநல நிபுணர் மாதவி கூறுகையில், ‘‘காலத்தின் கட்டாயத்தில் கணவரை பிரிந்து வாழும் பெண்கள், பிள்ளைகளை வளர்க்க தனிமையில் பெரும்பாடுபடுகிறார்கள். இவர் களுக்கு இந்த சமூகம் நன்மைகள் எதுவும் செய்வதில்லை. அதனால் ஆறுதலாகவாவது இருக்கலாம். வளரும் குழந்தைகளுக்கு தாயின் வாழ்க்கைச் சுமை தரும் வலி பற்றி எதுவும் தெரியாது. அவர்கள் மற்ற குழந்தைகளைப் போல வாழ விரும்புவார்கள். அதற்கு ஏதாவது தடை ஏற்பட்டால் மனதளவில் தளர்ந்துவிடுவார்கள். அது அவர்கள் உடல்நிலையையும் பாதிக்கும். அதனால் தனிமைத் துயர் வாட்டாது அவர்களை, மற்ற குழந்தைகள்போல் வளர்க்க முன்வரவேண்டும்.



    தாய் எவ்வளவு கஷ்டப்பட்டாலும், நிலைமையை புரிந்துகொள்ளும் அளவுக்கு பக்குவப்படாத குழந்தைகளிடமிருந்து எந்த அனுசரணையும் தாய்க்கு கிடைக்கப்போவதில்லை. குழந்தைகள் குழந்தைகள் தான். எந்த நிலையிலும் அவர்களை குழந்தைகளாகத்தான் தாய் பாவித்து வளர்க்க வேண்டும்..’’ என்கிறார்.

    தனியாக குழந்தைகளை வளர்க்கும் தாய்மார்கள் கருத்தில் கொள்ளவேண்டியவை:

    அப்பாவின் அன்பையும், அதுபோல் தேவைப்படும் கண்டிப்பையும் ஒரு சேர தாய் வழங்கவேண்டும்.

    மற்றவர்களின் கேலிப் பேச்சுகள் அவர்களை புண்படுத்தாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

    எப்போதும் நம்பிக்கையாக பேசி, அவர்கள் மனந்தளர்ந்துவிடாத அளவுக்கு நடந்துகொள்வது அவசியம்.

    அவர்களின் ஒவ்வொரு கேள்விக்கும் நம்பிக்கையோடு பதிலளிக்கவேண்டும்.

    அவர்கள் மனதில் எப்போதும் எதிர்காலத்தைப் பற்றிய பயம் வந்துவிடக்கூடாது.

    தன்னால் அவர்களை சிறந்த முறையில் உருவாக்க முடியும் என்ற மனோபலம் தாய்க்கு மிக அவசியம்.

    அப்பா இல்லை என்றவுடன் 50 சதவீத சுதந்திரம் அவர்களுக்கு கிடைத்துவிடும். மனம்போன போக்கில் வாழ நினைப்பார்கள். அவர்களை அன்போடு கண்காணிக்கவேண்டும்.

    தனியாக வாழும் பெண்கள் சமூகத்தின் கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அது அவளை மனதளவில் நம்பிக்கை இழக்கச் செய்யும். அந்த விரக்தி மனோபாவம் கோபமாய், எரிச்சலாய் குழந்தைகள் மீது விழலாம். அது தவிர்க்க முடியாதது. ஆனால் எல்லாம் அளவோடு இருக்கவேண்டும்.

    பிரிந்து வாழும் பெண்கள், திருமணத்தின் தோல்வியைப் பற்றி அடிக்கடி மற்றவர்களிடம் பேசிப் பேசி மனதை தேற்றிக் கொள்ள நினைப்பார்கள். அதற்கு வாய்ப்பில்லாத நேரத்தில் அழுகையும், சஞ்சலமும், சிடுசிடுப்பும் எப்போதும் அவர்களை ஆக்கிரமித்திருக்கும். இதையெல்லாம் பார்த்து வளரும் குழந்தைகள் மனதில் எதிர்காலத்தைப் பற்றிய பயமும் திருமணத்தைப் பற்றிய அவநம்பிக்கையும் உண்டாகும். அப்படி ஒரு அவநம்பிக்கை உருவாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.



    வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவங்களை குழந்தைகளிடம் சொல்லி அவர்கள் மனதில் வெறுப்பை உருவாக்கக்கூடாது.

    பராமரிப்பு செலவுகள் அதிகரித்து பயமுறுத்தும். தான் மட்டுமே சம்பாதிக்க வேண்டிய நிலை உருவாகும். இந்த போராட்டம் மிகவும் சவாலானது. தைரியமாக அதனை எதிர்கொள்ளவேண்டும்.

    வாழ்க்கை என்பது நாம் எதிர்பார்ப்பது போன்று அமைவதில்லை. ஆனால் வாழ்க்கை முழுவதும் ஏமாற்றமாக இருக்காது. எதிர் காலம் எப்போதுமே நன்மைகளை உருவாக்கித்தரும்.

    திருமண வாழ்க்கை பாதியில் முடிந்துவிட்ட நிலையில் இன்னொரு திருமணம் செய்துகொள்ள இன்றைய சமூகத்தில் வழி இருக்கிறது. ஆனாலும் குழந்தைகள் புதிதாக ஒருவரை அப்பாவாக ஏற்றுக்கொள்ள தயங்கும்போது அம்மாவின் மீது காரணமற்ற வெறுப்பு வரும்.

    எல்லோருக்குமே தனிமை பாதுகாப்பற்ற மனநிலையை உருவாக்கும். அது பயமாகமாறும். சுற்றி இருப்பவர்களை சந்தேகக்கண்ணோடு காணச்செய்யும். எல்லோரையும் சந்தேகக்கண்ணோடு பார்த்தால், வாழ்க்கையே சுமையாகிவிடும்.

    தனியாக வசிக்கும் பெண்களுக்கு எப்போதும் மனதில் எதிர்மறை எண்ணம் தோன்றிக் கொண்டே இருக்கும். தனக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்னவாகும்? இந்த வருமானமும் நின்றுவிட்டால் என்ன செய்வது? என்பது போன்ற எதிர்மறையான கேள்விகள் உருவாகிக்கொண்டே இருக்கும். அதை தவிர்க்க வேண்டும். எந்த நிலையிலும் என்னால் வாழமுடியும் என்ற எண்ணம் தோன்றினால் மனம் உறுதியடையும். வாழ்க்கையும் சிறப்படையும்.
    Next Story
    ×