search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ஸ்மார்ட்போன் அடிமையாகும் குழந்தைகள்
    X

    ஸ்மார்ட்போன் அடிமையாகும் குழந்தைகள்

    ஸ்மார்ட்போன் விளையாட்டுகள், வீடியோக்கள் உங்களுக்கு ரொம்பப் பிடிக்கலாம், ஆனால் அதனால் ஏற்படும் ஆபத்துகள், விளைவுகளை தெரிஞ்சுக்கோங்க...
    அம்மாவின் ஸ்மார்ட்போன்தான் உங்களுக்கு விருப்பமான விளையாட்டுப் பொருளா? குட்டீஸ். “ஸ்மார்ட்போனில் வீடியோ பார்த்துக்கிட்டேதான் சாப்பிடுவேன்” “செல்போனை விளையாட கொடுத்தாத்தான், ஹோம் ஒர்க் பண்ணுவேன்னு” அடம்பிடிக்கும் அம்முக்குட்டியா நீங்கள்?

    ஸ்மார்ட்போன் ஒரு பூதம் மாதிரி நம்மை கவர்ந்து இழுத்து பாழுங்குழியில் தள்ளுகிறது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருப்பதை நீங்கள் அறிவீர்களா? ஸ்மார்ட்போன் விளையாட்டுகள், வீடியோக்கள் உங்களுக்கு ரொம்பப் பிடிக்கலாம், ஆனால் அதனால் ஏற்படும் ஆபத்துகள், விளைவுகளை நீங்கள் அறிவீர்களா? இதோ கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்க...

    இருந்த இடத்திலிருந்து இடையூறின்றி பேசுவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட ஸ்மார்ட்போனை, பொழுதுபோக்கு சாதனமாக எண்ணி விடாமல் பிடித்துக் கொண்டதுதான் நாம் செய்யும் முதல் தவறு என்கிறார்கள் விஞ்ஞானி அங்கிள்கள். மணிக்கணக்கில் நாம் ஸ்மார்ட்போனில் விளையாடுவதால் ஏற்படும் உடல் - மன மாற்றங்களை அவர்கள் பெரிய பட்டியலாக அடுக்கிக் கொண்டே போகிறார்கள்.

    ‘புளூவேல்’ விளையாட்டின் விபரீதம் புரியாமல் விளையாடி உயிரைவிட்ட சகோதர சகோதரிகளின் கதைகளை நாம் செய்தியாகப் படித்தோம். ஆனால் நாமும் ஸ்மார்ட்போன் அடிமையாக இருக்கிறோம் என்பதை நம்ப மறுக்கிறோம். அம்மாவும், அப்பாவும் எவ்வளவு சொன்னாலும் நம்மால் செல்போன் இல்லாமல் இருக்க முடிவதில்லை. அது ஏன் அம்மூஸ்?. நாமும் செல்போன் அடிமையாகிவிட்டதன் அறிகுறிதான் அது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

    உங்களுக்கு வீடியோ வழியாக கதை சொல்லவும், ரைம்ஸ் காட்டுவதற்கும் ஆரம்பத்தில் அம்மா ஸ்மார்ட்போனை கொடுத்தார்கள், பாடங்களைக்கூட படங்களாக ஸ்மார்ட்போன் வழியே காட்டினார்கள். அதை ரசித்தீர்கள். ஆனால் இப்போது நீங்கள் படிப்பதற்குத் தவிர பொழுது போக்குவதற்காக ஸ்மார்ட்போன் பயன்படுத்துவது தவறு இல்லையா? அதை அம்மா சொல்லிக் காட்டினால், அப்பா கண்டித்தால் அடம் பிடிப்பது நியாயமா? கோபித்துக் கொள்வது முறையா? அம்மாவும், அப்பாவும் உங்கள் நன்மைக்காகத்தானே சொல்வார்கள் என்பதை புரிஞ்சுக்க மாட்டீங்களா குட்டீஸ்.

    உங்களுக்கு செல்போனில் என்ன விஷயம் வேண்டுமானாலும் பிடித்திருக்கலாம், ஆனால் அதற்காக நேரம் காலமின்றி போன்களை கைகளில் வைத்து உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பது உங்களுக்கு நல்லதில்லையே?

    போன்கள் உங்கள் கைகளில் நீண்ட நேரம் இருப்பதால் உங்கள் உடலில் என்னென்ன மாற்றம் ஏற்படுகிறது தெரியுமா...



    நமது மண்டை ஓடு, முழுமையாக வளர்ச்சி அடைய 13 வயதாகும். ஸ்மார்ட்போனில் இருந்து வரும் கதிர்வீச்சு எளிதாக மூளையைத் தாக்கக்கூடியது என்று கண்டுபிடிச்சிருக்காங்க தெரியுமா? அதுவும், முழுமையாக வளராத மண்டை ஓட்டைக் கடந்து உங்களின் மென்மையான மூளையை அதிகமாக பாதிக்கிறது செல்போன் கதிர்வீச்சு.

    கதிர்வீச்சு அபாயத்தால் சிந்திக்கும் ஆற்றல் குறையும்னு சொல்றாங்க. ஹார்மோன்களும் சுரப்பும் தாறுமாறாகிறதாம். உங்களுக்கு அதிக கோபம் வருவதற்கு, பொறுமையிழந்து செயல்படுவதற்கும் இந்த ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் மாற்றங்களே காரணம்னு கண்டுபிடிச்சிருக்காங்க ஆராய்ச்சியாளர்கள்.

    ஸ்மார்ட்போனில் பார்க்கும் விஷயங்களால் அறிவு வளர்வதைவிட, தீமைகளே அதிகமாக உள்ளன. உங்கள் புத்திசாலித்தனம் தூண்டப்படுவதைவிட அதிகமாக கோபமும், ஆத்திரமும்தான் தூண்டப்படுகிறது. இதனால் மனஅழுத்தமும் அதிகரிக்கிறது. கண்டிக்கும் பெற்றோர் மீதும் பாசம் குறைந்து, ஆத்திரம் வருகிறது.

    ‘அம்மா எதற்கெடுத்தாலும் திட்றாங்க’ என தவறாக சிந்திக்கும் அளவுக்கு மூளையை மழுங்கடித்துவிடுகிறது ஸ்மார்ட்போன்கள். நம் தூக்கத்தையும், ஆரோக்கியத்தையும் கெடுக்கிறது. அடம்பிடிக்கும் தன்மையையும் அதிகரிக்கிறது. பெற்றோரை உதாசீனப்படுத்தும் குணத்தையும் தூண்டுகிறது.

    ஓடி, ஆடி விளையாடும் விருப்பத்தை குறைக்கும் செல்போன்கள் உங்கள் உடல் வளர்ச்சியுடன், மனவளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது.

    அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, ஜப்பான் போன்ற தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த நாடுகளில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 80 முதல் 90 சதவீதம் பேர் ஸ்மார்ட்போன் அடிமையாகி இருக்கிறார்களாம். இந்தியாவிலும் இந்த எண்ணிக்கையில் பெரிய அளவில் வித்தியாசம் இருப்பதில்லை.

    ஆம், உங்களால் செல்போன் இன்றி இருக்க முடியவில்லைதானே, அப்போ அவங்க சொல்றது உண்மைதான். அம்மா, அப்பா சொன்னதையேதான், ஆராய்ச்சியாளரும் சொல்லியிருக்காங்க. நீங்க எப்போ செல்போனை பயன்படுத்தமாட்டேன்னு சேலஞ்ச் செய்யப்போறீங்க? குட்டீஸ். உடனே உங்களை மாத்திக்கிட்டா நீங்கதான் சமர்த்து!
    Next Story
    ×