search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகள் மீதான வன்கொடுமை முடிவுக்கு வருமா?
    X

    குழந்தைகள் மீதான வன்கொடுமை முடிவுக்கு வருமா?

    ஒவ்வொரு நிமிடத்திலும் நாட்டின் ஏதோ ஒரு மூலையில் சராசரியாக 5 குழந்தைகள் வெறியர்களின் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
    குழந்தையின் சிரிப்பில் இறைவனை காண முடியும் என்பார்கள், ஆனால் சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஆய்வு தகவல்கள் உண்மையில் குழந்தையின் சிரிப்பு இந்தியாவில் பளிச்சிடுகிறதா? அவர்கள் பாதுகாப்பான சூழ்நிலையில் தான் வாழ்கிறார்களா? என்ற கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

    மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து கண்டறிய 13 மாநிலங்களில் குழு ஒன்றை அமைத்தது. இந்த குழு நடத்திய ஆய்வில் சுமார் 70 மாவட்டங்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமான குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கும் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. 

    ஒவ்வொரு நிமிடத்திலும் நாட்டின் ஏதோ ஒரு மூலையில் சராசரியாக 5 குழந்தைகள் வெறியர்களின் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்றால், அது எத்தனை எத்தனை அவமானம். 

    அதிலும் 46 சதவீதத்துக்கும் அதிகமான குழந்தைகள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நன்கு தெரிந்தவர்கள் மூலம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்றால், அது குழந்தைகளை கடவுளாக பாவிக்கும் நம் தேசத்துக்கு வந்த தலை குனிவு அல்லவா? தலைநகர் டெல்லி மற்றும் பீகார், உத்தரபிரதேசம், அரியானா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் குழந்தைகள் மனிதாபிமானமற்ற கொடூரமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர் என்றும், அங்கு வாழும் குழந்தைகள் அதிகமான கொடுமைகளுக்கு உட்படுத்தப்படுவதாகவும் அதிர்ச்சியான தகவல்களை அந்த ஆய்வு கூறுகிறது.

    இப்படிப்பட்ட கொடுமைகளுக்கு ஆளாகும் குழந்தைகள் உடல் அளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியேறவே அஞ்சி நடுங்குகின்றனர். அவர்களின் விளையாட்டு, குறும்புதனம், சந்தோஷம் அனைத்தும் சமூக விரோதிகளால் பறிபோகிறது. 

    தமிழகத்தில் இப்படிப்பட்ட மனிதாபிமானமற்ற செயல்கள் குறைவு என்றாலும், குழந்தைகளின் வாழ்க்கையை உருக்குலைக்கும் நச்சுக்கிருமிகள் நம்மை சுற்றியும் வலம் வரலாம் என்பதை நாம் மறந்துவிடவேண்டாம். நம் குழந்தைகள் இப்படிப்பட்ட மனித மிருகங்களின் கையில் சிக்காமல் விழிப்போடு பாதுகாப்பது மட்டுமின்றி குழந்தைகள் மீதான வன்கொடுமையை முடிவுக்கு கொண்டு வருவோம் என்று ஒவ்வொருவரும் சபதம் ஏற்கவேண்டும்.

    -கவிதை ராகம்
    Next Story
    ×