
தஞ்சை மாநகர பா.ஜனதா சார்பில் வீரன் அழகு முத்துகோன் ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் தேசிய செயலாளர் எச்.ராசா கலந்து கொண்டு, அழகுமுத்துகோன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
1857-ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக நாடு முழுவதும் சுதந்திர போராட்டம் நடந்தது. இதுதான் முதல் சுதந்திர போராட்டம் என கூறுகிறோம்.
ஆனால் இதற்கு முன்பே வீரன் அழகுமுத்து கோன் பிரிட்டஷ் அரசுக்கு எதிராக போராடி தன்னுயிரை மாய்த்து கொண்டார்.
சுதந்திரத்துக்காக பாடுபட்ட தீரன் சின்னமலை, அழகு முத்து கோன் ஆகியோர் வரலாற்றுகளை பாடத்திட்டத்தில் சேர்க்கக் கோரியும், தபால் தலை வெளியிட கோரியும் என்னிடம் வலியுறுத்தினார்கள்.
தமிழக சட்டசபையில் லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்றி உள்ளனர். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படியே இந்த சட்டத்தை கொண்டு வந்து உள்ளனர்.
சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. தி.மு.க. ஆட்சி காலத்தில் சுமார் 3800 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால் அப்போது விவசாயிகளின் 400 ஹெக்டேர் நிலம் தான் எடுக்கப்பட்டு உள்ளது. இது விவசாயிகளின் அனுமதியுடன் தான் நிலம் கையக்கப்படுத்தப்பட்டு வருகிறது. 8 வழிச்சாலை திட்டத்தில் விவசாயிகளின் கிளர்ச்சி இல்லை. நாட்டின் முன்னேற்றத்துக்கு நிலத்தை தர விவசாயிகள் தயாராக உள்ளார்கள்.

தமிழக அமைச்சர் ஒருவர் நான் அமித்ஷா சொன்னதை திரிந்து சொன்னதாக கூறி வருகிறார். அவருக்கு இந்தி தெரியவில்லை. நல்ல ஆசிரியரை வைத்து இந்தி கற்றுகொள்ள வேண்டும். பிறகு இதன் அர்த்தத்தை அவர் தெரிந்து கொள்ளலாம். இதற்கு அமைச்சருக்கு ஒருவார காலம் அவகாசம் அளிக்கிறேன்.
தமிழகத்தில் சமூக விரோத, தீய சக்திகள் உருவாகி உள்ளனர். இவர்களால் தமிழகம் பாதிக்கப்படும் சூழ்நிலை இருந்து வருகிறது. தூத்துக்குடி பிரச்சனையில் தமிழக அரசு தூங்கி விட்டது. ஆனால் சேலம் 8 வழிச்சாலை பிரச்சனையில் தமிழக அரசு விழித்து கொண்டது.
கதிராமங்கலம், தூத்துக்குடி, நெடுவாசல் போன்ற இடங்களில் நக்சலைட்டுகளின் எதிர்ப்பு உள்ளது. இதில் தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும். நக்சலைட்டுகளின் பேச்சை கேட்டு இளைஞர்கள் செயல்படுகிறார்கள். இதனால் தான் தமிழகம் தொழில்துறையில் 15-வது இடத்தில் பின்தங்கி உள்ளது. அரசு மட்டும் காரணமல்ல, பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் நக்சலைட்டுகளும் தான் காரணம்.
இவ்வாறு அவர் கூறினார். #BJP #Amitshah #HRaja