search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சாமி முன்பு படைக்கப்பட்ட முக்கனிகளின் குவியலை படத்தில் காணலாம்.
    X
    சாமி முன்பு படைக்கப்பட்ட முக்கனிகளின் குவியலை படத்தில் காணலாம்.

    உச்சிக்கருப்பணசாமி கோவிலில் முக்கனிகள் படையல் விழா

    திருப்பரங்குன்றம் அருகே உள்ள உச்சிக்கருப்பணசாமி கோவிலில் முக்கனிகள் படையல் விழா நடைபெற்றது. இதில் ஆண் பக்தர்கள் மட்டும் கலந்து கொண்டு சாமிக்கு மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளை படைத்து வினோத வழிபாடு நடத்தினர்.
    திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளம் செல்லும் வழியில் உச்சிகருப்பணசாமி கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் சாமிக்கு உருவம் கிடையாது. ஆனால் பெரிய அளவிலான 2 கல்தூண்கள் கருவறையாக அமைந்துள்ளது. இங்கு காற்றின் வேகத்திற்கு அசைந்து ஒலி கொடுக்கும் வெங்கல மணிகளும், கல்தூண்களுக்கு மையத்தில் 5 அடி உயரமுள்ள 2 அரிவாள்களும் உள்ளன.

    இந்த கோவிலில் தொன்று தொட்டு ஆண் பக்தர்கள் மட்டுமே வழிபட்டு வருகிறார்கள், கோவிலில் தரும் விபூதியை ஒவ்வொரு பக்தரும் அவரவர் நெற்றியில் பூசிக்கொள்கின்றனர். அதேவேளையில் கோவிலைவிட்டு வெளியேறும் போது அவர்கள் நெற்றியில் பூசிய விபூதியை அழித்து விட்டு செல்கின்றனர். இத்தகைய கட்டுப்பாடுகள் கொண்டு காவல் காக்கும் கோவிலாக விளங்குகிறது, உச்சிக்கருப்பணசாமி கோவில். இங்கு ஒவ்வொரு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கனரக வாகனங்கள், லாரி, கார் போன்ற மோட்டார் தொழில் செய்பவர்கள் இங்கு வந்து வழிபட்டு சென்றால், எவ்வித சேதமுமின்றி, தொழில் நல்ல முறையில் நடைபெறும் என்பது அவர்களின் நம்பிக்கை.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பவுர்ணமிக்கு அடுத்த வெள்ளிக்கிழமை அன்று கனி மாற்றும் திருவிழா தொன்று தொட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடத்திற்கான கனி மாற்றும் விழா நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதியில் உள்ள சாமி பெட்டி இருக்கும் இடத்திலிருந்து ஏராளமான ஆண்கள் ஆயிரக்கணக்கில் வாழை, மாம்பழம் மற்றும் பலா பழங்களான முக்கனிகளை ஒரு வாகனத்தில் வைத்து அலங்காரத்துடன் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக உச்சிக் கருப்பணசாமி கோவிலுக்கு வந்தனர்.

    அங்கு உச்சிக்கால வேளையில் சாமிக்கு குவியலாக முக்கனிகள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான ஆண் பக்தர்கள் திரண்டு வந்து பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். இந்த வழிபாட்டு நிகழ்ச்சியில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்பது ஐதீகமாக கருதப்படுகிறது. பக்தர்கள் அனைவருக்கும் பழங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.

    அதை பக்தர்கள் தங்களின் தேவைக்கு எடுத்து சாப்பிட்டு விட்டு மீதியை கோவில் வளாகத்திலேயே வைத்து விட்டு சென்று விடுவார்கள். பிரசாத பழங்களை வீட்டுக்கு கொண்டு செல்லக்கூடாது என்பது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் இந்த கோவில் வழிபாட்டு நிகழ்ச்சிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. வழிபாடு முடிந்த பின்பு அனைவரும் தங்களது நெற்றியில் பூசிய விபூதியை அழித்து விட்டு கோவிலிலிருந்து வெளியே சென்றனர்.
    Next Story
    ×