search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கோப்பு மாரியம்மன் கோவில் தேரோட்டம்
    X

    கோப்பு மாரியம்மன் கோவில் தேரோட்டம்

    கோப்பு மாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    திருச்சி ஜீயபுரம் அருகே கோப்பு கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறும். அதேபோல இந்த ஆண்டும் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து கடந்த 13-ந் தேதி படுகள பூஜையுடன் திருவிழா தொடங்கியது.

    பின்னர் கோவிலில் தினமும் அம்மனுக்கு பூஜைகள் நடைபெற்றது. காளை வாகனம், பூதம், சிங்கம், மயில், யானை, காமதேனு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளிவீதி உலா வருதல் மற்றும் மரகழுவேற்றம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    விழாவையொட்டி நேற்று காலை குதிரை வாகனத்தில் அம்மன் அமர்ந்து தண்ணீர் பந்தலுக்கு சென்றார். அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில், விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், தீச்சட்டி எடுத்தும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.

    பின்னர் மாலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருள தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். இரவு வாணவேடிக்கை நடைபெற்றது. தேரோட்டத்தையொட்டி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்பாபு மேற்பார்வையில், ஜீயபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்குமார், பன்னீர்செல்வம் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று (புதன்கிழமை) காலை கிடாவெட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு அம்மன் முத்துப்பல்லக்கில் எழுந்தருளி வீதிஉலா செல்கிறார். நாளை (வியாழக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. 
    Next Story
    ×