search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அற்புத பலன் தரும் அன்னதானம்
    X

    அற்புத பலன் தரும் அன்னதானம்

    அன்னதானம் வழங்குவதன் மூலம் ஆனந்த வாழ்வும் நமக்குக் கிடைக்கும். இறைவனின் பரிபூரண அருளுக்கும் பாத்திரமாக இயலும்.
    அன்னதானம், சொர்ண தானம், வஸ்திரதானம், கோதானம், பூ தானம், கண் தானம் என்று தானங்கள் பல வகைப்படும். இவற்றையெல்லாம் விட ஒரு மனிதனிடம் கட்டாயம் இருக்க வேண்டிய தானம், ‘நிதானம்.’ அந்த நிதானம் நம்மோடு இருந்தால் நிம்மதி கிடைக்கும். ‘பதறாத காரியம் சிதறாது’ என்பார்கள். எனவே எதையும் நிதானமாகச் செய்ய வேண்டும்.

    தானங்களில் பிறர் பசியைப் போக்கும் அன்ன தானம் முதன்மை பெறுகிறது. அன்னதானம் என்பது பிறர் பசியைப் போக்குவது. பாத யாத்திரை வருபவர்களுக்கு, ஸ்தல யாத்திரை வருபவர் களுக்கு, கிரிவலம் வருபவர்களுக்கு எல்லாம், நடந்துவரும் களைப்பைப் போக்க பல இடங்களில் பலரும் உணவளிக்கின்றனர். அதன் மூலம் அவர்களது ஆத்மாக்கள் திருப்தியுடன் நம்மை வாழ்த்துகிறது. தானங்களில் எல்லாம் சிறந்த தானம் ‘அன்னதானம்.’

    ஒருவரிடத்தில் எதைக் கொடுத்தாலும் ‘போதும்’ என்று சொல்ல மாட்டார்கள். பொன், பொருள், ஆடை, ஆபரணங்கள், பணம் கொடுத்தால் ‘இன்னும் கொஞ்சம் தரலாமே’ என்றுதான் மனம் நினைக்கும். ஆனால் சாப்பாடு போடுகிற பொழுது, வயிறு நிறைந்த வுடன் போதும் என்று சொல்லிதான் ஆக வேண்டும். சாப்பிட முடியாத அளவுக்கு இலையில் உணவு பரிமாறி விட்டால், உடனே பதறியபடி ‘போதும்’ என்று சொல்வார்கள். இந்தப் “போதும்” என்ற சொல்லே, அன்னதானம் செய்பவர்களுக்கு போதுமான செல்வத்தைக் கொடுக்குமாம். எனவேதான், எல்லா தானங்களிலும் சிறந்தது அன்னதானம் என்று சொல்லி வைத்திருக் கிறார்கள். அன்னதானம் செய்யும் பொழுது, திருப்தியாக நல்ல மனதோடு செய்ய வேண்டும். ‘போதும்’ என்று பிறர் சொல்லும் அளவிற்கு வைக்க வேண்டும்.

    அன்னதானம் செய்பவர்கள், தாங்கள் சாப்பிடாமல் இருந்து மற்றவர்களுக்கு தங்களது குடும்பத்தினருடன் பரிமாற வேண்டும். தங்கள் கரங்களால் பரிமாறுவதே சிறப்பு. பெரிய அளவிற்கு அன்னதானம் செய்ய முடியாதவர்கள் கூட சிறிய அளவில் தங்களால் முடிந்ததைச் செய்யலாம். தங்கள் மேற்பார்வையில் முறையாகச் செய்ய வேண்டும்.

    அன்னதானத்திற்கு பெயர் பெற்ற ஊர் வடலூர். இங்கு அணையா அடுப்பும், அணையா விளக்கும் உள்ளது. அருட்பிரகாச வள்ளலார் ராமலிங்கம்பிள்ளையின் சத்யஞான சபை அருகில் உள்ள மண்டபத்தில், மூன்று வேளையும் பசிப்பிணி போக்கும் அன்னதானம் இன்றளவும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 1867-ல் ஏற்றப்பட்ட அந்த அடுப்பு இன்றுவரை அணையாமல் அன்னத்தைச் சமைத்துக் கொண்டே இருக்கிறது என்று சொன்னால் எவ்வளவு ஆச்சரியம்.

    தைப்பூச விழாவின் போது பழனிக்கு, பல லட்சம் பக்தர்கள் நடைப்பயணமாக செல்கிறார்கள். நடந்து செல்லும் பக்தர்களுக்கு ஆங்காங்கே தண்ணீர் பந்தல் வைத்து தண்ணீர் கொடுப்பார்கள். நீர், மோர் கலந்து ஒரு சிலர் கொடுப்பார்கள். ரொட்டி, பழம், லட்டு என ஒரு சிலர் வழங்குவார்கள். அதனால் புண்ணியத்தை சேர்க்க முற்படுகின்றனர். ஆனால் வாங்கிய பொருட்களை அவமதிக்காமல் யாருக்காவது பயன்படும் விதத்தில் கொடுத்து உதவ வேண்டும். இன்றைய பொருளாதாரச் சூழ்நிலையில் உணவை வீணாக்கக் கூடாது. கொடுப்ப தற்கு ஆளின்றி இருக்கும் இவ்வுலகில், உணவைக் கெடுப்பதற்கு ஒருபோதும் நினைக்கா தீர்கள்.

    வாரம் ஒருவருக்கு அல்லது மாதம் ஒருவருக்கு உணவு வழங்கலாம். வருடம் ஒரு முறை விழாக்களை முன்னிட்டு அன்னதானம் வழங்கலாம். உங்களது பிறந்த நாள், திருமண நாள், குழந்தைகளின் பிறந்தநாள், முன்னோர்களின் நினைவு நாள் ஆகிய நாட்களிலும், இறைவனுக்கு உகந்த நாட்களிலும் அன்னதானம் செய்யலாம்.

    அன்னதானம் செய்ய இயலாதவர்கள், ‘பசி’ என்று சொல்லி வருபவர்களுக்கு முகமலர்ச்சியோடு உணவளித்தாலே போதும். அதுவே அன்னதானத்திற்குச் சமமானதுதான். அடுத்தவர் முகமறிந்து பசிதீர்த்து, பிறகு நாம் நமது பசிக்கு உருவருந்தினால், அது இந்தப் பிறவியின் பயனை நமக்கு பெற்றுத்தரும். எனவே பசித்தவருக்கு ‘இல்லை’ என்று ஒருபோதும் சொல்லாதீர்கள். இருப்பவற்றை கொடுத்து இளைப்பாறச் செய்யுங்கள். இறைவன் உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும் அமர்ந்து, எந்நாளும் உதவி செய்வான் என்பது உண்மை.

    அன்புடனும், கருணையுடனும் மனிதாபிமான அடிப் படையிலும் செய்யும் அன்னதானங்கள், நம்முடைய அடுத்த பிறவி வரை பலன் கொடுக்கும். மீனுக்கு பொரி போடுவதும், யானைக்கு கரும்பு கொடுப்பதும், பசுவிற்கு கீரை, பழம், வைக்கோல், பருத்திக் கொட்டை கொடுப்பதும் கூட ஒரு வகையில் அன்னதானம் தான். அன்னதானம் செய்பவர்களின் வாழ்க்கையில் பசிப்பிணி வராது. அவர் களின் சந்ததிகளும் தழைத்தோங்க வழிகிடைக்கும்.

    அன்னதானம் வழங்குவதன் மூலம் ஆனந்த வாழ்வும் நமக்குக் கிடைக்கும். இறைவனின் பரிபூரண அருளுக்கும் பாத்திரமாக இயலும்.
    Next Story
    ×