search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கோவை தண்டுமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் தீச்சட்டி எடுத்து ஊர்வலமாக வந்த காட்சி.
    X
    கோவை தண்டுமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் தீச்சட்டி எடுத்து ஊர்வலமாக வந்த காட்சி.

    தண்டுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா: பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி ஊர்வலம்

    பிரசித்தி பெற்ற கோவை தண்டுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
    கோவை மாநகர் அவினாசி சாலையில் பிரசித்தி பெற்ற தண்டுமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றையதினம் மாலை 6.30 மணிக்கு பூச்சாட்டு நடைபெற்றது.

    மேலும் மகா கணபதி ஹோமம், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆகியவையும் நடைபெற்றது. தொடர்ந்து கடந்த 19-ந் தேதி மாலை 6.30 மணிக்கு திருவிளக்கு பூஜை வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கேற்றி அம்மனை வழிபட்டனர். அன்று இரவு 8 மணிக்கு வெள்ளி சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதைத்தொடர்ந்து கடந்த 20-ந் தேதி இரவு 8 மணிக்கு குதிரை வாகனத்தில் அம்மன் வீதி உலாவும், 21-ந் தேதி இரவு 8 மணிக்கு சிம்மவாகனத்தில் வீதி உலாவும், 22-ந் தேதி மாலை 6.30 மணிக்கு விளக்கு பூஜை வழிபாடும், 22-ந் தேதி மாலை 6.30 மணிக்கு அன்ன வாகனத்தில் அம்மன் வீதி உலாவும் நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். அன்று இரவு 8.30 மணிக்கு மலர் பல்லக்கில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான பக்தர்கள் தீச்சட்டி எடுத்து ஊர்வலம் வரும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவை பெரியகடை வீதியில் உள்ள கோனியம்மன் கோவில் முன் திரண்டனர். பின்னர் அங்கிருந்து கைகளில் தீச்சட்டி எடுத்துக்கொண்டு ஊர்வலமாக வந்தனர். இதில் பலர் முளைப்பாரி, கரகம் எடுத்து வந்ததுடன், அலகு குத்தி நேர்த்தி கடன் செலுத்தினர்.

    ஊர்வலம் கோனியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு டவுன்ஹால், ஒப்பணக்காரவீதி, லிங்கப்ப செட்டிவீதி, பால்மார்க்கெட், சிரியன் சர்ச்ரோடு, புரூக்பாண்ட் ரோடு, அவினாசி ரோடு மேம்பாலத்தின் கீழ் பகுதி, சோமசுந்தரம் மில் ரோடு வழியாக அனுப்பர்பாளையம் நஞ்சப்பா ரோட்டை அடைந்து அவினாசி ரோடு மேம்பாலத்தின் கிழக்கு பகுதி வழியாக அவினாசி ரோட்டில் உள்ள தண்டுமாரியம்மன் கோவிலை வந்தடைந்தது. ஊர்வலத்தையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

    இதைத்தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு அம்மனுக்கு மகா அபிஷேகம், காலை 11 மணிக்கு மஞ்சள் நீர் ஊர்வலம், மாலை 7 மணிக்கு கொடி இறக்குதல், 8 மணிக்கு கம்பம் கலைத்தல், நாளை (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழில் லட்சார்ச்சனை, 28-ந் தேதி காலை 7 மணிக்கு சங்காபிஷேகம், இரவு 7 மணிக்கு வசந்த உற்சவத்துடன் சித்திரை பெருந்திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×