search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கட்டீல் துர்கா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் தேரோட்டம்
    X

    கட்டீல் துர்கா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் தேரோட்டம்

    ஆண்டு பிரம்மோற்சவத்தையொட்டி கட்டீல் துர்கா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அப்போது, தீப்பந்தங்களை ஒருவர் மீது ஒருவர் வீசி நூதன முறையில் வழிபட்டனர்.
    கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் இருந்து 28 கிலோ மீட்டர் தூரத்தில் கட்டீல் என்ற கிராமத்தில் பிரசித்தி பெற்ற துர்கா பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கோவில், நந்தினி ஆற்றின் நடுவே அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள்.

    இந்த கோவிலின் ஆண்டு பிரம்மோற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், கட்டீல் அருகே உள்ள அட்டூர் மற்றும் கொடத்தூர் கிராமங்களை சேர்ந்த மக்கள் ஆண்டுதோறும் பாரம்பரிய முறைப்படி ஒருவர் மீது ஒருவர் தீப்பந்தங்களை வீசி எறிந்து நூதன முறையில் வழிபட்டு வருவது முக்கிய நிகழ்ச்சியாகும். இதில் அந்த கிராமங்களில் இருந்து வீட்டுக்கு ஒருவர் கட்டாயம் கலந்துகொள்வார்கள். இதில் யாருக்காவது தீக்காயம் ஏற்பட்டால், கோவில் பிரசாதத்தை பூசினால் அது சரியாகி விடும் என்பது ஐதீகம்.

    இந்த நிலையில் துர்கா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டு பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. இந்த நிலையில் விழாவின் முதல் நாளான நேற்று அதிகாலை துர்கா பரமேஸ்வரி அம்மனின் தேரோட்டம் நடந்தது. முன்னதாக, துர்கா பரமேஸ்வரி அம்மன் கோவில் முன்பு அட்டூர், கொடத்தூர் கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீப்பந்தங்களை ஒருவர் மீது ஒருவர் வீசி எறிந்து வேண்டுதலை நிறைவேற்றினர்.

    இந்த நூதன வேண்டுதலில் தீப்பந்தங்களை வீசி எறியும் போது யாருக்கும் எந்த தீக்காயமும் ஏற்படாது. இவ்வாறு செய்வதன் மூலம் தங்களுக்கு நல்லது நடக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள். இதற்காக பக்தர்கள் கடுமையான விரதம் இருந்து, தீப்பந்தங்களை தூக்கி வீசும் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள்.

    இதையடுத்து துர்கா பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இந்த தேர், அந்த கிராமத்தின் முக்கிய பகுதிகள் வழியாக வந்து மாலை கோவிலை அடைந்தது. அதன்பின்னர் நேற்று இரவு கோவிலில் வாணவேடிக்கை நடந்தது. இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×