search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கொங்கணகிரி கந்தபெருமான் கோவில் கும்பாபிஷேகம்
    X

    கொங்கணகிரி கந்தபெருமான் கோவில் கும்பாபிஷேகம்

    திருப்பூர் கொங்கணகிரி கந்தபெருமான் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் அரோகரா பக்தி கோஷத்துடன் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    திருப்பூர் காலேஜ் ரோடு கொங்கணகிரியில் மிகவும் பிரசித்தி பெற்ற வள்ளி தேவசேனா சமேத கந்தபெருமான் கோவில் உள்ளது. இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேக விழா நடத்த திருப்பூர் மக்கள் நல அறக்கட்டளை முடிவு செய்தது. இதன்படி கோவிலில் சுற்றுச்சுவர், சிற்ப சாஸ்திர முறைபடி 5 நிலைகள் கொண்ட ராஜகோபுரம், கிரிவலப்பாதை, பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, குளியலறை, சுகாதார வளாகம், உள்பிரகாரத்தில் கருங்கல் பதித்தல், மூல கோபுரங்களுக்கு வர்ணம் பூசுதல் உள்ளிட்ட அனைத்து திருப்பணிகளும் அறக்கட்டளை சார்பில் செய்து முடிக்கப்பட்டது.

    இதையடுத்து கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 18-ந்தேதி முதல் யாக பூஜையுடன் தொடங்கியது. கடந்த 20-ந்தேதி 2-ம் கால யாக பூஜை மற்றும் 3-ம் கால யாக பூஜையும், 21-ந்தேதி காலை 4-ம் கால யாக பூஜை, 5-ம் கால யாக பூஜையும் நடைபெற்றது. மேலும் தினமும் காலை மற்றும் மாலையில் விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், வாஸ்து சாந்தி, தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வந்தது.

    இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா நேற்று காலை 6 மணிக்கு 6-ம் கால யாக பூஜையுடன் தொடங்கியது. காலை 8.45 மணிக்கு தீபாராதனையுடன் கலசங்கள் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு திருப்பூர் மக்கள் நல அறக்கட்டளை தலைவர் மெஜஸ்டிக் கந்தசாமி கொடியசைக்க, வள்ளி தேவசேனா சமேத கந்தபெருமான் கோவில் விமானம், நூதன ராஜகோபுரம், மூலஸ்தான கோபுரம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு திருப்பரங்குன்றம் ராஜா பட்டர் தலைமையில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

    அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, கந்தவேல் பெருமானுக்கு அரோகரா என்ற பக்தி கோஷம் முழங்க சாமிதரிசனம் செய்தனர். மேலும் கோவிலை சுற்றி நின்றிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

    விழாவையொட்டி பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. திருப்பூர் மாநகர போலீஸ் துணை கமிஷனர் உமா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பக்தர்களின் வசதிக்காக கோவில் பகுதியில் குடிநீர், மருத்துவம், ஆம்புலன்சு, தீயணைப்பு, காவல்துறை அறிவிப்பு உள்ளிட்ட அடிப்படை மற்றும் அவசர வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

    விழா ஏற்பாடுகளை திருப்பூர் மக்கள் நல அறக்கட்டளை தலைவர் மெஜஸ்டிக் கந்தசாமி தலைமையில் நிர்வாகிகள், உறுப்பினர்கள், அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×