search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேரோட்டம்
    X

    கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேரோட்டம்

    கும்பகோணம் சாரங்கபாணி கோவில் சித்திரை தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேர், திருவாரூர் தியாகராஜர் கோவில் தேர் ஆகிய தேர்களுக்கு அடுத்து மிகப்பெரிய தேர் கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் உள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒரு கோவிலான இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

    நேற்று அதிகாலை 5.30 மணிக்கு பெருமாள் சீதேவி, பூதேவியுடன் தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    காலை 7.10 மணிக்கு கும்பகோணம் க.அன்பழகன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ராம.ராமநாதன், கோவில் செயல் அலுவலர் ஆசைதம்பி மற்றும் பொதுமக்கள் தேரை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். தேர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை அடைந்தது. அப்போது வழிநெடுகிலும் திரண்டிருந்த பக்தர்கள் தேரில் எழுந்தருளிய பெருமாளை வணங்கினர். தேரோட்டத்தையொட்டி சாரங்கபாணி கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் எங்கு நோக்கினும் மக்கள் கூட்டம் அலைமோதியது. தேர் நிலைக்கு வந்ததை தொடர்ந்து இரவு 10 மணிக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. தேரோட்டத்துக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், உபயதாரர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×