search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    உடுமலை மாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழாவையொட்டி கொடியேற்றம் நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    உடுமலை மாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழாவையொட்டி கொடியேற்றம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றம்

    உடுமலை மாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    திருப்பூர் மாவட்டம், உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை தேர்த்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். அது போல் இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 9-ந்தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதை தொடர்ந்து கோவிலில் கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதை தொடர்ந்து தினமும் காலை, மாலை மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தினமும் காலை, மாலை ஏராளமான பெண்கள் கோவிலுக்கு வந்து கம்பத்துக்கு மஞ்சள் நீர் ஊற்றி வழிபட்டு சென்றனர்.

    திருவிழாவையொட்டி தேவாங்கர் சமூகம் சார்பில் நேற்று கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது.

    இதையொட்டி சிம்ம வாகன கொடிக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அதன்பிறகு மேள, தாளம் முழங்க கொடி கம்பத்தில் சிம்ம வாகன கொடி ஏற்றப்பட்டது. இதை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.

    இதை தொடர்ந்து தேரை அலங்கரிப்பதற்காக முகூர்த்தக்கால் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக முகூர்த்தக்காலுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் கோவில் பரம்பரை அறங்காவலர் யு.எஸ்.எஸ்.ஸ்ரீதர், செயல் அலுவலர் ஆர்.சந்திரமதி, அனுஷம் தியேட்டர் உரிமையாளர் யு.எஸ். சஞ்சீவ்சுந்தரம், தேவாங்கர் சமூக நல மன்ற தலைவர் சவுண்டப்பன், செயலாளர் மாணிக்கம், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் ஆர்.விவேகானந்தன், மணிகண்டன், கைலாசம், சம்பத்குமார், ஓய்வு பெற்ற நகராட்சி ஊழியர் சின்னச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×