search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மங்கலதேவி கண்ணகி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
    X

    மங்கலதேவி கண்ணகி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

    மங்கலதேவி கண்ணகி கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    கூடலூர் அருகே உள்ள பளியன்குடி மலை உச்சியில் மங்கலதேவி கண்ணகி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று முழுநிலவு விழா நடைபெறும். இந்த ஆண்டு நேற்று சித்ரா பவுர்ணமி முழுநிலவு விழா நடந்தது. இதையொட்டி கோவில் வாசலில் வாழை மரங்கள், மா இலை தோரணங்கள் கட்டப்பட்டிருந்தது. கோவிலில் கண்ணகிக்கு பட்டு உடுத்தி, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. துர்க்கை, சிவனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. அதிகாலை 6 மணிக்கு பள்ளி உணர்த்தலுடன் விழா தொடங்கியது. அதைத்தொடர்ந்து மலர் வழிபாடு, யாகபூஜை, மங்கல இசை, பொங்கல் வழங்குதல், பால்குடம் எடுத்தல், அமுத சுரபியில் உணவு வழங்குதல், திருவிளக்கு பூஜை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    விழாவில் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை குழு கவுரவ தலைவர் மு.ராஜேந்திரன், செயலாளர் த.ராஜகணேசன், பொருளாளர் பி.எஸ்.எம் முருகன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சென்னை, ஈரோடு, நெல்லை, தஞ்சாவூர் உள்பட தமிழகத்தில் பல்வேறு ஊர்கள் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து இருந்தனர். கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவரும் மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதனை செய்யப்பட்ட, பின்னரே கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    கம்பம் பகுதியில் இருந்து குமுளி, பளியன்குடி பகுதிகளுக்கு அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. கூடலூர் அருகே லோயர்கேம்பை அடுத்த பளியன்குடியில் இருந்து 6.6 கிலோ மீட்டர் தூரம் மலைப்பாதையில் கோவிலுக்கு பக்தர்கள் நடந்து வந்தனர். இவையில்லாமல் பக்தர்களின் வசதிக்காக கேரள மாநிலம் குமுளியில் இருந்து ஏராளமான ஜீப்கள் இயக்கப்பட்டன. விழாவுக்கு வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    கோவில் முன்பு பெண் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிப்பட்டனர். பெண் பக்தர்களுக்கு வளையல் மற்றும் மங்கல பொருட்கள் வழங்கப்பட்டன. கோவில் உள்ள இடம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் தமிழக மற்றும் கேரள வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பகுதியில் ஈடுபட்டிருந்தனர். கோவிலுக்கு வந்த ஜீப்களின் பதிவு எண் மற்றும் எத்தனை பேர்கள் என பதிவேட்டில் பதிவு செய்து கொண்டனர். பயங்கரவாதிகளின் நடமாட்டம் உள்ளதால் போலீசார்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. தமிழக-கேரள அரசு சார்பில் குடிநீர் மற்றும் மருத்துவ வசதிக்கான ஏற்பாடுகள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணிக்கு தமிழக-கேரள போலீசார்கள் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா மாலையில் பூமாரி நிகழ்ச்சியுடன் நிறைவடைந்தது.
    Next Story
    ×