search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சித்ரா பவுர்ணமியும் திருவண்ணாமலை கிரிவலமும்
    X

    சித்ரா பவுர்ணமியும் திருவண்ணாமலை கிரிவலமும்

    சித்ரா பவுர்ணமி நாளில் திருவண்ணாமலை உள்பட அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொள்வர்.
    சித்ரா பவுர்ணமி என்பது சித்திரை மாதம் பவுர்ணமி திதியில் சித்திரை நட்சத்திரமும் கூடி வருவதால் சித்ரா பவுர்ணமி என அழைக்கப் பெறுகின்றது. மாதத்தின் பெயரும் நட்சத்திரத்தின் பெயரும் ஒன்றாகி (சந்திரன் சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கையில்), சூரியன் உச்ச பலம் பெறும் மேஷ ராசியில் (சித்திரை மாதத்தில்) வரும் பவுர்ணமி தினம் சிறப்புப் பெறுகின்றது. சிறப்புப் பொருந்திய இத் திருநாள் வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வருகிறது.
    இத் திதியும், நட்சத்திரமும், மாதமும் அம்மனுக்குரியனவாக இருப்பதனால்; இத் தினம் அம்பாளை பூசிக்க மிகவும் சிறப்புப் பொருந்திய நாளாக அமைகின்றது. அத்துடன் தாயாரை இழந்தவர்களுக்கு பிதிர் தர்பணம் செய்ய மிகவும் உகந்த நாள். பிரம்மஹத்தி தோஷம் பிடித்தவர்கள் தோஷம் நீங்கும் விரதம் கடைபிடிக்கலாம்.

    இத்தினத்தில் எல்லா அம்மன் ஆலயங்களில் பால்குடங்கள் எடுப்பது, திருவிளக்கு பூஜை, விஷேச அபிஷேக ஆராதனைகளும், வழிபாடும் சித்திரைக் கஞ்சி வார்ப்பும் இடம்பெறும். சிவாலயங்களிலும், பெருமாள் (விஷ்ணு) கோவில்களிலும் சிறப்பு அபிஷேகங்கள், இறை வழிபாடு, வீதி ஊர்வலங்கள் என்றும் சிறப்பாக நடைபெறும். அம்மனுக்குச் சிறப்புப் பொருந்திய இச்சித்ரா பவுர்ணமி விரத நாளிலேயே எமனின் சபையில் நம் பாவ புண்ணியக்கணக்கை இம்மியும் பிசகாமல் எழுதும் சித்திரகுப்தன் அவதரித்த நாளாகவும் இது கருதப்படுவதால் சித்திர புத்திரனார் விரதமும் அமைகின்றது.

    தந்தையை இழந்தவர்கள் ஆடி அமாவாசை அன்று விரதமிருந்து வழிபாடு செய்வதைப் போன்று தாயாரை இழந்தவர்கள் சித்ரா பவுர்ணமி தினத்தில் விரதத்தை மேற்கொள்ளலாம். தாயாரை இழந்தவர்கள் இத்தினத்தில் விரதமிருந்து வழிபாடு செய்வதால் இந்நாள் பித்ருகளுக்குரிய விரத நாளாகவும் அமைகின்றது.

    நம்மைப் பெற்று, சீராட்டி வளர்த்தெடுத்த தாயாரை அவர் மறைந்த பின்பும் நன்றியுடன் நினைவு கூரும் நாளான இந்நாளில் விரதமிருந்து வழிபாடு செய்வதன் மூலம் தாயின் தூய்மையின் பெருமையை மனதிலிருத்தி அவரது ஆன்மா இறைவன் திருவடியில் அமைதி பெற இறைவனைத் தொழும் நாளாகவும் சித்ரா பவுர்ணமி தினம் அமைகின்றது.

    வான் மண்டலத்தில்; சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரத்தின் அளவை “திதி” என்கிறோம். அமாவாசையன்று சூரியனும் சந்திரனும் இணையும் (ஒரே நேர் கோட்டில் அமையும்) நாளில் மூதாதையர்களுக்கு ”திதி” கொடுப்பதும், (அன்று சூரிய சந்திரர்கள் ஒரே டிகிரியில் இணைந்திருப்பார்கள்.) பவுர்ணமியன்று சிறப்பான பூஜைகள், வழிபாடுகள் செய்வதும் சிறந்தது. (அன்று சூரிய சந்திரர்கள் சமமாக இருப்பார்கள்.)

    இந்நாளில் திருவண்ணாமலை உள்பட அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொள்வர்.

    சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

    திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரரின் அருளை பெறுவதற்காக சித்தர்கள் பல்வேறு வடிவங்கள் எடுத்து கிரிவலம் வருவதாக நம்பப்படுகிறது. நிலவின் ஒளிக்கு சில அபூர்வ ஆற்றல்கள் உண்டு. பயிர், செடி, கொடி, மூலிகைகள் செழிப்பாக வளர்வதற்கு தேவையான சக்தியை அது தரும். நிலவொளி நம் மீது பட்டால் அறிவு பலப்படும். மனக்குழப்பம் நீங்கும். மற்றைய நாளை விட தெய்வீக சக்தி மிக்க மலைகளுக்கு பவுர்ணமியில் சக்தி அதிகரிக்கும்.

    பவுர்ணமி கிரிவலத்தால் தெய்வ அருள், மூலிகைக் காற்றால் உடல்நலம், நிலவொளியால் மனத்தெளிவு உண்டாகிறது. வலம் வருபவர்கள் இறைநாமத்தை உச்சரித்தப்படி அமைதியாக வந்தால் பலன் இரட்டிப்பாகும். குறிப்பாக சித்தர்களின் அருளை நாம் கிரிவலத்தில் பெற முடியும். சித்ரா பவுர்ணமி வழிபாட்டின் மிக முக்கிய அம்சமாக சித்தர்களின் அருளை பெறுவது வலியுறுத்தப்பட்டுள்ளது.நமக்கு மட்டுமல்ல சித்தர்களுக்கும் சித்ரா பவுர்ணமி முக்கியத்துவம் வாய்ந்தது. பொதுவாக சித்ரா பவுர்ணமி தினத்தன்று பூமி யில் இருந்து ஒருவித உப்பு கிளம்பும். அந்த உப்புக்கு பூமிநாதன் என்று பெயர். இந்த உப்பு அதிக சக்தி தரக்கூடியதாகும். இதை சித்தர்கள்தான் கண்டுபிடித்து உலகத்துக்கு தெரிவித்தனர்.

    சித்ரா பவுர்ணமி தினத்தன்று அந்த உப்பு சக்தி பெறுவதற்காகவே சித்தர்கள் பல இடங்களில் தோன்றுவது உண்டு. மேலும் பல முக்கிய தலங்களில் உள்ள இறைமூர்த்தங்களை வழிபடுவதற்காக சித்தர்களும் வருவார்கள். அந்த வகையில் திருவண்ணாமலை, சதுரகிரி மலை, பொதிகை மலை உள்பட பல்வேறு மலைகளில் சித்தர்களும் வலம் வருவார்கள்.

    வண்ணத்துப்பூச்சியாக, ஏதோ விலங்காக அல்லது மனிதர்கள் போலவே சித்தர்கள் வலம் வருவார்கள். அந்த சமயத்தில் நாமும் கிரிவலம் சென்றால் நமக்கு அண்ணா மலையாரின் அருளுடன் சித்தர்களின் அருள் ஆசியும் கிடைக்கும்.எனவேதான் கிரிவல தலங்களில் உள்ள சித்தர்களின் ஜீவ சமாதியை சித்ரா பவுர்ணமி தினத்தன்று தவறாமல் வழிபட வேண்டும் என்று நமது மூதாதையர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    திருவண்ணாமலையில் ஏற்கனவே நிறைய சித்தர்களின் அருள் உள்ளது. சித்ரா பவுர்ணமி தினத்தன்று மற்ற இடங்களில் உள்ள சித்தர்களும் திருவண்ணாமலைக்கு வந்து விடுவார்கள் என்று ஒரு நம்பிக்கை உள்ளது. ஆகையால் வருகிற 18&ந்தேதி இரவு திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்பவர்கள் ஈசன் பெயருடன் சித்தர்களையும் நினைத்து வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.பொதிகை மலையில் அகத்தியரை அன்று வழிபட்டால் சிவபெருமானின் திருவடியை மிக எளிதாக சென்றடைய முடியும் என்பார்கள்.

    சித்ரா பவுர்ணமி தினத்தன்று சித்திரை நட்சத்திரமும், பவுர்ணமி திதியும் சேர்வதால் கடலில் நீராடுவது மிகவும் நல்லது என்று நம் முன்னோர்கள் கணித்து உள்ளனர். வருகிற 19-ந்தேதி கடலில் நீராடினால் இதுவரை சம்பாதித்த பாவங்கள் அனைத்தையும் கரைத்து விடலாம் என்பது ஐதீகம். சித்ரா பவுர்ணமி தினத்தன்று கடலில் புனித நீராட வருபவர்களுக்காக சித்தர்கள், ரிஷிகள் தயாராக காத்து இருப்பார்கள் என புராணங்களில் குறிப்பிடப் பட்டுள்ளது. எனவே வருகிற 19-ந்தேதி கடலில் புனித நீராடினால் சித்தர்களின் ஆசி பரிபூரண மாக நமக்கு கிடைக்கும்.



    தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்பட்டாலும், மதுரையில் தான் சித்ரா பௌர்ணமி விழா விசேஷமாக கருதப்படுகிறது. ஒருமுறை விருத்தராசுரன், விஸ்வரூபன் என்ற இருவரை தேவேந்திரன் கொன்றான்.

    இதனால் இந்திரனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. அதிலிருந்து விடுபட தன் குருவை நாடி உபாயம் கேட்டான். குருபகவான் அவனிடம் பூலோகம் சென்று பல்வேறு சிவஸ்தலங்களில் வழிபட்டால் ஓரிடத்தில் உன் தோஷம் நீங்கும் என்று கூறினார். அதன்படி இந்திரன் காசி முதலிய பல ஸ்தலங்களில் வழிபட்டு தெற்கு நோக்கி வந்தான்.

    ஓரிடத்தில் கடம்ப மரத்தின் கீழ் சென்றவுடன் தன்னைப் பற்றியிருந்த தோஷம் விலகக் கண்டான். இந்திரன் மகிழ்ச்சியடைய அவன் முன் கடம்ப மரத்தடியில் சிவபெருமான் திருஆலவாய் சோமசுந்தரர் அவனுக்கு காட்சி கொடுத்தார். இந்திரன் சிவபெருமானுக்கு கோவில் கட்ட நினைத்து தேவலோகத்தில் இருந்து ஒரு விமானம் வரவழைத்தான்.

    இத்தலத்து இறைவனுக்கு இந்திரன் விமானம் அமைத்ததால் அதற்கு இந்திர விமானம் என்றும், விண்ணில் இருந்து வந்ததால் விண்ணிழி விமானம் என்றும் சொல்லப்படுகிறது. ஆலயம் எடுத்த இந்திரனிடம் ஒவ்வொரு வருடமும் சித்ரா பவுர்ணமி நாளில் என்னை இங்கு வந்து வழிபடுக என்று கட்டளையிட்டார்.

    அதன்படி ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி நாளில் இந்திரன் இங்கு வந்து வழிபடுகிறான் என்று திருவிளையாடல் புராணம் கூறுகிறது. அதனால் தான் சித்ரா பவுர்ணமி மதுரையில் விசேஷமாகக் கருதப்படுகிறது.

    பவுர்ணமி தினம் அன்று அம்பாளை வழிபட்டால் குடும்பத்தில் ஒளி உண்டாகும். துன்பங்களாகிய இருள் நீங்கி நன்மை கிட்டும். பௌர்ணமி அன்று உபவாசம் இருந்து வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் பெறலாம் என்பது நம்பிக்கை.

    பவுர்ணமி பூஜை பொதுவாக அனைவருக்கும் நன்மை செய்யக்கூடிய பூஜை என்றாலும் பெண்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கக் கூடியது. திருமணமான பெண்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும், திருமணமாகாத பெண்கள் திருமணப் பேறு கிட்டவும் இந்த பூஜை செய்து அம்பிகையின் அருள் பெறலாம்.

    சித்திரை மாத பவுர்ணமியன்று அம்பாளுக்கு பூப்போட்ட வஸ்திரம் சார்த்தி, பத்மராகம் என்ற நவரத்தினக்கல் பதித்த ஆபரணம் அணிவிக்க வேண்டும். மஞ்சள் கலந்த சாதம், பானகம், ஏலம், கிராம்பு, பச்சைக் கற்பூரம் சேர்ந்த தாம்பூலம் நைவேத்தியம் செய்ய வேண்டும்.

    அன்னதானம் செய்யுங்கள்


    சித்ரா பவுர்ணமியில் அன்னதானம் செய்து சிவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டால் கேட்டது கிடைக்கும். கேட்க மறந்ததும் கிடைக்கும். காரணம் சிவன் கருணை வள்ளல், தியாகராஜன், தன்னிடம் பிரார்த்தனை செய்து கொண்டால் கையேந்தி தன் அடியார்களை அவன் வெறுங்கையுடன் அனுப்பியது இல்லை.

    ஆகவே நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்தால் மனதில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும் வறுமை அகலும். நோய்கள் நீங்கும். கடன் தொல்லைகள் தீரும். திருமணம் நிறைவேறும். மகப்பேறும் கிடைக்கும். மனக்குழப்பங்கள் ஒழியும். புண்ணியங்கள் சேரும், வீடு பேற்றை அடையவும் முடியும்.

    வீடுகளில் தீபம் ஏற்றுங்கள்

    சித்ரா பவுர்ணமி தினத் தன்று தமிழகம் முழுவதும் அவரவர் வீடுகளில் தீபங்கள் ஏற்றி கோடிக் கணக்கான விளக்குகளை ஒளிரச் செய்ய வேண்டும்.
    வீட்டு வாசல்களிலும் தங்களுக்கு சொந்தமான நிறு வனங்களிலும், வர்த்தக கட் டிடங்களிலும், கோவில்களிலும், அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் குடும்பத்தோடு அல்லது சக ஊழியர்களோடு, தனியா கவோ அல்லது கூட்டா கவோ விளக்கேற்றி வைக்க வேண்டும்.

    ஏற்றி வைக்கும் விளக்கு, குத்து விளக்காகவும் இருக்கலாம். காமாட்சி விளக்காகவும் இருக்கலாம், சாதாரண அகல் விளக்காகவும் இருக்கலாம். அவரவர் வசதிக்கு ஏற்ப மாலை 6.30 மணிக்கு தமிழகம் முழுவதும் தீபங்களை ஏற்றி கோடிக் கணக்கான விளக்குகளை ஒளிரச் செய்ய வேண்டும்.

    சித்ராதேவி

    சித்ரா பவுர்ணமியன்று வணங்க வேண்டிய தெய்வம் சித்ராதேவி. இவள் குபேரனின் மனைவி. லட்சுமிக்குரிய செல்வத்தை குபேரன் பராமரிக்கிறான். உலக உயிர்கள் செய்யும் பாவ, புண்ணியம், முன் வினை பயன்களுக்கு ஏற்ப அதைப் பிரித்துத் தருகிறான்.

    அவ்வாறு தரும்போது, உழைப்பாளிகளுக்கு சற்று அதிகமாகத் தர சிபாரீசு செய்பவள் இவள். எனவே இவளை சித்ரா பவுர்ணமி நாளில் நெய் தீபமேற்றி வணங்க வேண்டும். இவளை வணங்கினால் சோம்பல் நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை.

    எண்ணெய் முழுக்கு பலன்

    தீபாவளியைப் போல, எண்ணைக் குளியலுக்கு முக்கியமான மற்றொரு நாள் சித்ரா பவுர்ணமி. சித்ரா பவுர்ணமிக்குரிய தெய்வம் சித்ரகுப்தர். எமனின் கணக்குப் பிள்ளை இவர். எமனுக்கு உதவி செய்ய அவுதும்பரன், சண்டா முருகன், சம்பரன், சார்த்தூலன் என்ற நான்கு தூதர்கள் உள்ளனர். திசைக்கு ஒருவராகச் சென்று குறித்த நேரத்திற்குள் உயிரைப் பறிப்பது இவர்களின் பணி.

    சித்ரகுப்தர் உயிர்கள் செய்த பாவ, புண்ணியங்களை கணக்கிட்டு எமதர்ம ராஜாவுக்கு அறிக்கை அளிப்பார். அதன் அடிப்படையில் எமன் அவர்களுக்கு தண்டனை கொடுப் பார். சித்ரா பவுர்ணமி அன்றுதான் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுமாம்.

    எனவே அன்று சித்ரகுப்தரை மனதார நினைத்து, சித்ர குப்தரே என் பாவ, புண்ணிய கணக்கை எழுதும் போது, பாவங்களைக் குறைத்து புண்ணியத்தை எழுதுவீர். இனி நான் எத்தகைய பாவத்தையும் செய்ய மாட்டேன். இதுவரை செய்த பாவங்களுக்கு, இந்த எண்ணை குளியலுடன் முழுக்கு போட்டு விடுகிறேன் எனச் சொல்லி, நல்லெண்ணையை தேய்த்து குளித்து விட வேண்டும். இதற்கு கை மேல் பலன் உண்டு.
    Next Story
    ×