search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவையாறு ஐயாறப்பர் கோவில் சித்திரை தேரோட்டம்
    X

    திருவையாறு ஐயாறப்பர் கோவில் சித்திரை தேரோட்டம்

    திருவையாறு ஐயாறப்பர் கோவில் சித்திரை தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    திருவையாறில் பிரசித்தி பெற்ற ஐயாறப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான சித்திரை விழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 14-ந் தேதி மாலை தன்னைத்தான பூஜித்தல் நடைபெற்றது. இதில் மரகதலிங்கத்துக்கு பால், தேன், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. நேற்று காலை ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் தேரில் அமர்ந்து பஞ்ச மூர்த்திகளுடன் திருவையாறு நான்கு வீதிகளிலும் தேர் உலா வந்தது. திருவையாறு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் நிலைக்கு வந்ததும் பொதுமக்கள் தீபாராதனை காட்டி சாமிதரிசனம் செய்தனர்.

    தேரோட்டத்தையொட்டி திருவையாறில் எங்கு நோக்கினும் மக்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இருப்பினும் தேரோட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு பெரியண்ணன், இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.

    21-ந் தேதி(ஞாயிற்றுக் கிழமை) சப்தஸ்தான பெருவிழா நடக்கிறது. அன்று காலை ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வரர் சுயசுவாம்பிகையுடன் வெட்டிவேர்் பல்லக்கில் புறப்பட்டு திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, சென்று அன்று இரவு காவிரி ஆற்றில் 6 ஊர் பல்லக்குகளும் தில்லைஸ்தானத்தில் சங்கமிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இரவு தில்லைஸ்தானம் காவிரி ஆற்றில் வானவேடிக்கை நடைபெறுகிறது. 22-ம் தேதி(திங்கட்கிழமை) தில்லைஸ்தானம் பல்லக் குடன் 7 ஊர் பல்லக்குகளும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பொம்மை பூ போடும் நிகழ்ச்சி முடிந்தவுடன் 6 ஊர் பல்லக்குகளும் கோவிலுக்கு சென்று தீபாராதனை முடிந்து அந்தந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து உள்ளனர்.
    Next Story
    ×