search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கோவையில் பண்ணாரி மாரியம்மன் கோவில் திருவிழாவில் குண்டம் இறங்கிய பக்தர்களை படத்தில் காணலாம்.
    X
    கோவையில் பண்ணாரி மாரியம்மன் கோவில் திருவிழாவில் குண்டம் இறங்கிய பக்தர்களை படத்தில் காணலாம்.

    பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா

    கோவை கணபதிமாநகர் பண்ணாரி மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கினர்.
    கோவை கணபதிமாநகர் பகுதியில் பண்ணாரி மாரியம்மன் கோவில் 18-ம் ஆண்டு குண்டம் திருவிழா கடந்த 9-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினம் இரவு 7 மணிக்கு வேல்கம்பம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு திருச்சாட்டு விழா நடைபெற்றது. கடந்த 12-ந் தேதி மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இரவு 9 மணிக்கு சக்திகரகம் அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதையடுத்து நேற்றுமுன்தினம் இரவு 8.30 மணிக்கு அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர். பின்னர். 9.30 மணிக்கு பக்தர்கள் முன்னிலையில் குண்டம் அக்னி வளர்த்தல் நிகழ்ச்சி நடந்தது.

    நேற்று காலை விநாயகர் கோவிலில் இருந்து கரகம் ஜோடித்து அக்னி சட்டி, தீர்த்தக்குடம் அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். பின்னர் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கினர். சிலர் கைகளில் குழந்தையை தூக்கிக்கொண்டு குண்டம் இறங்கினர். மாலையில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. ஊர்வலத்திற்கு முன்பாக கரகாட்டம், ஒயிலாட்டம், குச்சிப்பிடி, சிங்காரிமேள கலைஞர்கள் நடனமாடியபடி சென்றனர். மேலும் பக்தர்கள் அலகு குத்திக்கொண்டு சென்றனர்.

    இதைத்தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருகிறார். நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு அன்னதானமும், அதைதொடர்ந்து வானவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×