search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சுசீந்திரம் கோவிலில் கனி காணும் நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம்.
    X
    சுசீந்திரம் கோவிலில் கனி காணும் நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம்.

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் கனி காணும் நிகழ்ச்சி

    குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் கனி காணும் நிகழ்ச்சி நடந்தது.
    குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் பூஜைகள் அனைத்தும் கேரள விதிமுறைப்படியும், கேரள பஞ்சாங்கத்தின் படியும் நடைபெறுவது மரபு. இங்கு ஆண்டுதோறும் விஷூ (கேரள புத்தாண்டு) கனி காணும் நிகழ்ச்சி கொண்டாடப்படுவது வழக்கம். தமிழகத்தில் தமிழ் ப்புத்தாண்டு நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் கனி காணும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. ஆனால், கேரள விதிமுறைப்படி பூஜைகள் நடைபெறும் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் விஷூ கனி காணும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

    இதையொட்டி மூலஸ் தானமான தாணு மாலயசாமியின் எதிரே உள்ள செண்பகராம மண்டபத்தில் சிவனின் முழு உருவ படத்தை பெரிய அளவில் கலர் கோலமாக வரைந்தனர். அதனை சுற்றிலும் அனைத்து விதமான காய், கனிகள் படைக்கப்பட்டு பெரிய அளவில் நிலை கண்ணாடி வைத்து அதில் தங்க ஆபரணங்கள் சூட்ட ப்பட்டன. மூலவராகிய தாணுமாலய சாமிக்கு தங்க அங்கி சாத்தப்பட்டு பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க குடங்கள், தங்கத்தால் ஆன பழங்கள் பக்தர்கள் பார்க்கும் விதத்தில் மூலஸ்தானத்தில் நேற்று ஒரு நாள் மட்டும் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.

    நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும், கனி காணும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் கை நீட்டமும், காய்-கனிகளும் பிரசாதமாக வழங்க ப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை தாணுமாலயன் தொண்டர் அறக்கட்டளையினரும், கோவில் நிர்வாகத்தினரும் இணைந்து செய்திருந்தனர்.

    இதுபோல், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், குமாரகோவில் குமாரசாமி கோவில் போன்ற கோவில்களிலும் விஷூ கனி காணும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. 
    Next Story
    ×