search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தண்டு மாரியம்மன் கோவிலில் கம்பம் நடப்பட்டது
    X

    தண்டு மாரியம்மன் கோவிலில் கம்பம் நடப்பட்டது

    குண்டம் விழாவை முன்னிட்டு சத்தியமங்கலம் தண்டு மாரியம்மன் கோவிலில் கம்பம் நடப்பட்டது.
    சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் மிகவும் பழமையான தண்டு மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் விழா ஆண்டுதோறும் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு குண்டம் விழா நேற்று காலை கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதற்காக கடந்த 10-ந் தேதி சத்தியமங்கலத்தை அடுத்த கள்ளிப்பட்டி அருகே உள்ள கொண்டையம்பாளையத்தில் இருந்து அரச மரத்தின் கம்பம் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் 3 கிளைகள் கொண்ட கம்பமாக அது செதுக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து நேற்று காலை 9 மணிக்கு கம்பத்தை பவானி ஆற்றுக்கு தூக்கி சென்றனர். அங்கு கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி மஞ்சள், குங்குமம் பூசப்பட்டது. பின்னர் கம்பத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையடுத்து தாரை, தப்பட்டையுடன் கம்பத்தை ஆற்றில் இருந்து கோவிலுக்கு பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு வந்தனர். பிறகு பக்தர்களின் பக்தி கோஷங்கள் முழங்க கோவிலில் கம்பம் நடப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார். இரவு 8 மணியில் இருந்து 11 மணி வரை அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கம்பத்தை சுற்றி ஆடினர்.

    வருகிற 23-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா 24-ந் தேதி காலை 6 மணிக்கு நடக்கிறது. 25-ந் தேதி கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சியும், 26-ந் தேதி திருவிளக்கு பூஜையும், 27-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், அடுத்த மாதம் (மே) 2-ந் தேதி மறுபூஜையும் நடக்கிறது.
    Next Story
    ×