search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் பிரம்மோற்சவம்
    X

    திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் பிரம்மோற்சவம்

    திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்திபெற்ற தேவநாதசுவாமி கோவில் உள்ளது. 108 வைணவ தலங்களில் ஒன்றான இந்த கோவிலுக்கு கடலூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இப்படி சிறப்புவாய்ந்த இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியையொட்டி பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவத்தையொட்டி நித்திய உற்சவர் தேவநாதசுவாமி, பல்லக்கில் எழுந்தருளி புற்றுமண் எடுத்து வரும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் விஸ்வரூப தரிசனம் நடந்தது. இதைத்தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத தேவநாதசுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. அதன்பிறகு உற்சவ மூர்த்திகள் காலை 5 மணிக்கு கோவில் கொடி மரம் அருகே எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். தொடர்ந்து கொடி மரத்திற்கு பட்டாச்சாரியார்கள் சிறப்பு பூஜை நடத்தி, பிரம்மோற்சவ கொடியை ஏற்றினர். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ என்ற பக்தி கோஷங்களை எழுப்பி சாமிதரிசனம் செய்தனர். பின்னர் காலையில் சூரிய பிரபை வாகனத்திலும், இரவு வெள்ளி சிம்ம வாகனத்திலும் சாமி வீதிஉலா நடைபெற்றது.

    பிரம்மோற்சவத்தையொட்டி தினமும் காலை, மாலை நேரங்களில் சிம்மம், யாளி, சேஷம், யானை போன்ற பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதிஉலா நடைபெற உள்ளது.

    விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான கருட சேவை உற்சவம் 15-ந்தேதி இரவு நடக்கிறது. பின்னர் 17-ந்தேதி தெருவடைச்சான் உற்சவமும், 18-ந்தேதி காலை பேட்டை உற்சவமும், இரவு வெள்ளி குதிரை வாகனத்தில் சாமி வீதிஉலாவும் நடைபெறுகிறது.

    பிரம்மோற்சவத்தின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 19-ந்தேதி சித்ரா பவுர்ணமியையொட்டி தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று அதிகாலை தேவநாதசுவாமிக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்று அதிகாலை 4.15 மணி முதல் 5.50 மணிக்குள் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு தேரோட்டம் நடைபெறுகிறது.

    தொடர்ந்து தீர்த்தவாரியும், மாலையில் மதுர கவி ஆழ்வார் உற்சவ சாற்றுமுறையும், இரவு பானக பூஜையும் நடக்கிறது. 20-ந்தேதி காலையில் மட்டையடி உற்சவமும், தங்கப்பல்லக்கில் சுவாமி வீதிஉலாவும், இரவு தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. 21-ந்தேதி விடையாற்றி உற்சவத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். 
    Next Story
    ×