search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.
    X
    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா தொடங்கியது

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    திருவட்டாரில் ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது. இது, இந்தியாவில் உள்ள 108 வைணவத்தலங்களுள் ஒன்றாகவும், மலைநாட்டு திருப்பதிகள் 13-ல் 2-வது தலம் என்ற சிறப்பையும் பெற்று விளங்குகிறது.

    இங்கு பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 19-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. முதல் நாளான நேற்று அதிகாலை ஹரி நாம கீர்த்தனை நடந்தது. அதைத்தொடர்ந்து தேவசம் தந்திரி சுஜித் நம்புதிரி திருவிழா கொடியை ஏற்றி வைத்தார். இதில் ஆதிகேசவ பெருமாள் கோவில் சேவா டிரஸ்டு தலைவர் அனந்தகிருஷ்ணன், தேவசம் போர்டு நிர்வாகிகள், கோவில் மேலாளர் மோகனகுமார் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவையொட்டி தினமும் காலை பாகவதபாராயணம், சுவாமி பவனி வருதல் தொடர்ந்து தீபாராதனை, மாலை ராமாயண பாராயணம் நடைபெறும். 18-ந்தேதி இரவு 9 மணிக்கு கருட வாகனத்தில் சுவாமி பள்ளி வேட்டைக்கு எழுந்தருளல் நடைபெறுகிறது. 19-ந்தேதி காலை ராமாயண பாராயணம், மாலை தீபாராதனை, இரவு 7 மணிக்கு சுவாமி கருட வாகனத்தில் ஆராட்டுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
    Next Story
    ×