search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் இன்று மஞ்சள் நீர் ஊர்வலம்
    X

    ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் இன்று மஞ்சள் நீர் ஊர்வலம்

    ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி இன்று (சனிக்கிழமை) 3 கம்பங்களுடன் பக்தர்கள் மஞ்சள் நீர் தெளித்தபடி ஊர்வலமாக செல்கிறார்கள்.
    ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் மற்றும் அதன் வகையறா கோவில்களான சின்ன மாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களின் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கடந்த மாதம் 19-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

    23-ந் தேதி இரவு 8.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், இதைத்தொடர்ந்து 10.30 மணிக்கு 3 கோவில்களின் முன்பும் கம்பங்களும் நடப்பட்டன. இந்த கம்பத்துக்கு தினமும் பெண்கள் புனிதநீர் ஊற்றி வருகிறார்கள். அதன்படி நேற்றும் ஆயிரக்கணக்கான பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி அம்மனை வழிபட்டனர்.

    கடந்த 2-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர். அன்று இரவு 9 மணிக்கு பெண்கள் மாவிளக்கு எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.

    3-ந் தேதி காலை 9.30 மணிக்கு பொங்கல் விழாவும், மாலை 4 மணிக்கு சின்ன மாரியம்மன் கோவிலில் தேரோட்டமும் நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு பெரிய மாரியம்மன் மலர் பல்லக்கிலும், நேற்று இரவு 9.30 மணிக்கு சின்ன மாரியம்மன், இரவு 10 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன் மலர் பல்லக்கிலும் வீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் பிடுங்குதல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா இன்று (சனிக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது.

    பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோவில்களில் நடப்பட்டுள்ள கம்பங்கள் பிடுங்கப்பட்டு பக்தர்கள் தோளில் வைத்துக்கொண்டு ஆடியபடி ஈரோடு மணிக்கூண்டு பகுதியில் ஒன்று கூடுவார்கள். அப்போது பக்தர்கள் உப்பு, மிளகு போன்றவற்றை கம்பத்தின் மீது வீசுவார்கள்.

    அதைத்தொடர்ந்து 3 கம்பங்களும் மணிக்கூண்டில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு காரைவாய்க்காலில் விடப்படும். இதையொட்டி பக்தர்கள் ஒருவரின் மீது ஒருவர் மஞ்சள் நீரை ஊற்றி மகிழ்வார்கள். நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.
    Next Story
    ×