search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா 8-ந்தேதி தொடங்குகிறது
    X

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா 8-ந்தேதி தொடங்குகிறது

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா வருகிற 8-ந்தேதி தொடங்குகிறது. மேலும் திருக்கல்யாணத்திற்காக பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு மாதம் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆடி, ஆவணி, புரட்டாசி, மாசி, பங்குனி ஆகிய திருவிழாக்கள் சிறப்பு வாய்ந்தவை. அதிலும் சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருவிழாக்கள் அனைத்தும் தீர்த்தவாரி என்று சொல்லக்கூடிய திருவிழாவின் நிறைவு நாளை முடிவு செய்து கொண்டு தொடங்க பெறுவதாகும். சித்திரை நட்சத்திரத்தில் தீர்த்தத்தை முடிவு செய்து கொண்டாடும் விழாவாக சித்திரை திருவிழா கொண்டாடப்படுகிறது.

    அந்த சிறப்பு வாய்ந்த சித்திரை திருவிழா அடுத்த மாதம்(ஏப்ரல்) 8-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி வரை நடக்கிறது. 7-ந் தேதி வாஸ்து சாந்தி நடக்கிறது.

    அதை தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் வருகிற 8-ந் தேதி காலை 10.05 மணிக்கு மேல் 10.29 மணிக்குள் நடக்கிறது. அப்போது அங்கு எழுந்தருளும் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். விழாவையொட்டி தினமும் காலை, மாலை என இருவேளையும் மீனாட்சியும், சுந்தரேசுவரரும் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் 15-ந்தேதி அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் இரவு 8 மணிக்கு நடக்கிறது. அன்றைய மாதமான சித்திரை முதல் ஆவணி வரை 4 மாதங்கள் மீனாட்சி அம்மன் ஆட்சி நடைபெறுவதாக ஐதீகம்.

    16-ந் தேதி திக்குவிஜயமும், விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணம் 17-ந்தேதி காலை 9.50 மணிக்கு மேல் 10.14 மணிக்குள் வடக்கு, மேற்கு ஆடிவீதியில் உள்ள மண்டபத்தில் நடக்கிறது.

    திருக்கல்யாணத்தை காணவரும் பக்தர்களுக்காக பந்தல் அமைக்கும் பணி தற்போது ஆடி வீதிகளில் நடந்து வருகிறது. சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் திருக்கல்யாணத்தை காணும் வகையில் பந்தல் அமைக்கப்படுகிறது. 18-ந் தேதி தேரோட்டமும், 19-ந் தேதி தீர்த்தவாரி மற்றும் தேவேந்திர பூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    திருவிழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக சித்திரை வீதிகளில் பந்தல் அமைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும் தேர் திருவிழாவிற்காக கீழ மாசி வீதியில் நிறுத்தப்பட்டுள்ள தேர்களை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே கண்ணாடி கூண்டுகள் அகற்றப்பட்டு தேர்களை ஊழியர்கள் சீரமைத்து வருகின்றனர். தேர்கள் செல்லும் மாசி வீதிகளில் பல இடங்களில் குண்டு குழியுமாக உள்ளது. இதை சீரமைக்க பொதுமக்கள் சார்பில் மாநகராட்சியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து மாசிவீதிகளில் சாலைகள் சீரமைக்கும் பணியும் நடந்து வருகிறது.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், கோவில் இணை கமிஷனர் நடராஜன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×