search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆண்டவன் உத்தரவு பெட்டியில் ஐம்பொன் வேல் வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
    X
    ஆண்டவன் உத்தரவு பெட்டியில் ஐம்பொன் வேல் வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் ஐம்பொன் வேல் வைத்து பூஜை

    காங்கேயம் சிவன்மலை சுப்பிரமணிய சாமி கோவிலில் உள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியில் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த வெள்ளி வேல் அகற்றப்பட்டு ஐம்பொன்னால் செய்யப்பட்ட வேல் வைத்து பூஜை செய்யப்படுகிறது.
    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சாமி கோவில் உள்ளது. மலை மீது அமைந்துள்ள இந்த கோவில் சன்னிதானத்தில் ஆண்டவன் உத்தரவு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. வேறு எந்த கோவிலிலும் இல்லாத ஒரு சிறப்பு அம்சமாக சிவன்மலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டவன் உத்தரவு என்ற பெயரில் பக்தர்கள் கொண்டு வரும் ஏதாவது ஒரு பொருளை அந்த உத்தரவு பெட்டியில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்படுவது வழக்கம். இந்த நடைமுறை கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது.

    சிவன்மலை ஆண்டவன் தன்னுடைய பக்தர் ஒருவரின் கனவில் வந்து குறிப்பிட்ட ஒரு பொருளை கூறி அந்த பொருளை ஆண்டவன் உத்தரவு பெட்டிக்குள் வைத்து பூஜை செய்யும் படி உத்தரவிடுவார். இவ்வாறு உத்தரவு பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி தனது கனவில் உத்தரவான பொருளை கூறுவார். கோவில் நிர்வாகம் சார்பில் சாமி சன்னிதானத்தில் வைத்து சிவப்பு மற்றும் வெள்ளை ஆகிய 2 பூக்களை வைத்து சாமியிடம் உத்தரவு கேட்கப்படும். வெள்ளைப்பூ வந்தால் மட்டுமே அந்த பொருள் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டு தினசரி பூஜை செய்யப்படும்.

    இப்படி ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் என்று எதுவும் இல்லை. மற்றொருபக்தரின் கனவில் வந்து அடுத்தபொருளை சுட்டிக்காட்டும் வரையில் பழைய பொருளே அந்த ஆண்டவன் உத்தரவு பெட்டிக்குள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் இத்தகைய பொருள் சமுதாயத்தில் முக்கியத்துவம் பெறும் என்பது பக்தர்களின் நம்பிகை.

    இவ்வாறு வைக்கப்பட்டு பூஜை செய்யப்படும் பொருள் சமுதாயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வந்திருக்கிறது. இவ்வாறு வைக்கப்பட்டு பூஜை செய்யப்படும் பொருள் நாட்டில் ஏற்றமும் பெறலாம். இறக்கமும் பெறலாம் என்பதற்கான குறியீடாக இந்த ஆண்டவன் உத்தரவுபெட்டியில் வைக்கப்படும் பொருளை இப்பகுதி மக்கள் நம்புகிறார்கள்.

    அந்த வகையில் இதற்கு முன்னர் இந்த உத்தரவு பெட்டியில் ஏர்கலப்பை, தங்கம், ரூபாய் நோட்டு, துப்பாக்கி, தண்ணீர், மணல் உள்பட 100-க்கும் மேற்பட்ட பொருட்கள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு வந்துள்ளது. கடந்த 5-ந் தேதி முதல் வெள்ளியினால் ஆன வேல் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று அந்த வெள்ளி வேல் அகற்றப்பட்டு நாணய குவியலுடன் உள்ள ஐம்பொன்னால் செய்யப்பட்ட வேல் வைத்து பூஜை செய்யப்படுகிறது.

    இந்த ஐம்பொன் வேலை முத்தூர் அருகே உள்ள வேலம்பாளையம் கிராமத்தை சேர்ந்த கோகுல்ராஜா (வயது 35) என்ற விவசாயி வைத்துள்ளார். இந்த வேல் ஒரு அடி உயரம் உள்ளது.

    இது குறித்து கோகுல்ராஜா கூறுகையில், ‘சமீபத்தில் பொள்ளாச்சியில் நடந்த சம்பவத்தை நினைத்து மனதளவில் வேதனை அடைந்தேன். பெண்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் செயல் நடப்பதை நினைத்து வருந்தினேன். அதிகார பலத்தால் நாட்டில் நடக்கும் தவறான செயல்களை செய்பவர்களை தெய்வம் அழிக்கும் என்று என் மனதில் தோன்றியது. இந்த நிலையில் என் மனதில் தோன்றிய முருகன் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நாணய குவியலுடன் ஐம்பொன் வேல் வைத்து பூஜை செய்ய உத்தரவிட்டார். ஏற்கனவே சிவன்மலை சுப்பிரமணிய சாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியை பற்றி அறிந்திருந்தேன். அதன்படி கோவிலுக்கு சென்று கோவில் நிர்வாகத்திடம் இதுபற்றி கூறினேன். பின்னர் கோவிலில் பூ போட்டு பார்க்கப்பட்டது. இதில் வெள்ளைப்பூ கிடைத்தது. அதைத்தொடர்ந்து ஆண்டவன் உத்தரவுபெட்டியில் ஐம்பொன்னால் ஆன வேல் வைத்து பூஜை செய்யப்பட்டது’ என்றார்.

    இது சமுதாயத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை.
    Next Story
    ×