search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை இன்று நடக்கிறது
    X

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை இன்று நடக்கிறது

    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி, இன்று நம்பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை நடக்கிறது. நாளைதேரோட்டம் நடக்கிறது.
    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. தினமும் உற்சவரான நம்பெருமாள் ஸ்ரீரங்கம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் உபநாச்சியார்களுடன் சந்தனு மண்டபத்திலிருந்து திருச்சி விகையில் மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு கோவில் வளாகத்தில் உள்ள திருகொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளினார்.

    இதைத்தொடர்ந்து ஆதி பிரம்மோற்சவத்தின் 9-ம் நாளான இன்று (வியாழக் கிழமை) பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது. உற்சவத்தின் சிறப்பு நிகழ்ச்சியாக இன்று நம்பெருமாள்-தாயார் சமேதராக காட்சி அளிக்கும் சேர்த்தி சேவை நடக்கிறது.

    இன்று காலை 6 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து தங்க பல்லக்கில் புறப்பாடு நடக்கிறது. சித்திரை வீதிகள், உள்திருவீதி வலம் வந்து ஆழ்வான் திருச்சுற்று வழியே தாயார் சன்னதியை காலை 9.30 மணிக்கு பல்லக்கு வந்து சேருகிறது. பின்னர் சமாதானம் கண்டருளி தாயார் சன்னதி முன்மண்டபத்திற்கு பகல் 12 மணிக்கு சேருகிறது. மதியம் 12.30 மணி முதல் 1.15 மணிவரை முதல் ஏகாந்தம், 1.30 மணிவரை தளிகை அமுது செய்து புறப்பாடும், பிற்பகல் 2 மணிக்கு பங்குனி உத்திர மண்டபத்தை பல்லக்கு அடைகிறது.

    பின்னர் அங்கிருந்து தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 2.15 மணிக்கு சேர்த்தி மண்டபத்தை சேருகிறார். அங்கு பிற்பகல் 3 மணி முதல் இரவு 10.30 மணிவரை நம்பெருமாள்- தாயார் சேர்த்தி சேவையில் பக்தர்களுக்கு அருள் பாலிக் கின்றனர். நம்பெருமாள்- தாயார் சேர்த்தி சேவையையொட்டி, இன்று தாயார் மற்றும் பெருமாள் சன்னதிகளில் மூலஸ்தான சேவை கிடையாது. இரவு 10 மணிக்கு சின்னப்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளி தாயார் சன்னதி சேருகிறார்.

    இரவு 11.30 மணிக்கு 2-வது ஏகாந்தம் நடக்கிறது. நள்ளிரவு 12 மணி முதல் மறுநாள் (அதாவது நாளை) திருமஞ்சனமும், அதிகாலை 3.30 மணி முதல் 4.30 மணிவரை 3-வது ஏகாந்தமும் நடக்கிறது. காலை 5 மணிக்கு தாயார் மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    பங்குனி உத்திர 10-ம் திருநாளான இன்று அதிகாலை 5.45 மணிக்கு நம்பெருமாள் தாயார் சன்னதியில் இருந்து புறப்பட்டு கோரதத்திற்கு சென்றடைகிறார். காலை 7.30 மணிக்கு ரதாரோஹணம் ரதயாத்திரையும், தொடர்ந்து ‘கோ’ ரதம் என்னும் பங்குனி தேரோட்டமும் நடக்கிறது.

    நாளை மறுநாள்(சனிக்கிழமை) ஆளும் பல்லக்கு புறப்பாடு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோவில் இணை ஆணையர் ஜெயராமன் செய்து வருகிறார். 
    Next Story
    ×