search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சாஸ்தா கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா நாளை நடக்கிறது
    X

    சாஸ்தா கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா நாளை நடக்கிறது

    நெல்லை- தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள சாஸ்தா கோவில்களில் நாளை(வியாழக்கிழமை) பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது.
    அரிக்கும், சிவனுக்கும் பிறந்தவர் தான் அரிகரபுத்திரன் என்ற சாஸ்தா. இந்த சாஸ்தாவை அய்யனார், சாஸ்தா, சாத்தான் என்று பல பெயர்களில் அழைப்பார்கள். இந்த சாஸ்தா பங்குனி உத்திரத்தன்று தான் அவதரித்தார். இதனால் தான் பங்குனி உத்திரத்தன்று தென்மாவட்ட மக்கள், தங்களின் குலதெய்வமான சாஸ்தாவை வழிபட்டு வருகிறார்கள். குடும்பத்தில் எந்தவொரு நல்ல காரியம் என்றாலும், குல தெய்வமான சாஸ்தாவுக்கு தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தி விட்டுதான் அதனை தொடங்குவார்கள்.

    குலதெய்வத்தை வழிபடுவதால் நமக்கு முன்னோர்களின் ஆசியும், ஆண்டவனின் அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம். சாப விமோசனம், திருமண தடை நீங்கும், மனதில் நினைத்த காரியம் நடக்கும். இந்த சாஸ்தா கோவில்கள் பெரும்பாலும் கிராம பகுதியிலும், காட்டு பகுதியிலும், குளக்கரையிலும் தான் அதிகம் இருக்கின்றன. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக நடக்கிறது.

    கோவிலில் சாஸ்தா அதாவது அய்யனார், பூரண, புஷ்கலை என்ற தேவியரோடு காட்சி தருவார். சாஸ்தாவுக்கு பிரதான காவல் தெய்வமான கருப்பசாமி எதிரே குதிரை வாகனத்துடன் காட்சி தருவார். அவருக்கு அருகில் சுடலைமாடசாமி, சங்கிலிபூதத்தார், அக்கினி மாடசாமி, சப்பாணி மாடசாமி, தூண்டில் மாடசாமி, கரடி மாடசாமி, முண்டசாமி, பேச்சி, பிரம்மராட்சி, சுடலை, உதிரமாடசாமி, தளவாய் மாடசாமி, முன்னோடி மாடசாமி, கழு மாடசாமி, பலவேசகாரன், பட்டவராயன், பொம்மக்கா, திம்மக்கா, தூசி மாடன், கசமாடன், மாசானமூர்த்தி, மந்திரமூர்த்தி, கருத்தப்பாண்டி சுடலை, கட்டேரியாடும்பெருமாள், பொன்னூருவி, சிவனணைந்தபெருமாள், காலசாமி, எமகாலதூதராஜா, அருமசண்டாளன், இருளப்பன், லாடகுருசன்னியாசி ஆகிய பரிவார தெய்வங்கள் இருக்கும்.

    பக்தர்கள் முதலில் சாஸ்தாவுக்கு ரோஜா பூ மாலை அணிவித்து அர்ச்சனை செய்து வணங்கிவிட்டு, அவருக்கு எதிரே உள்ள காவல் தெய்வங்களுக்கு மாலை அணிவித்து பூஜை செய்வார்கள்.

    பங்குனி உத்திர திருவிழா நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை காலை 5 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணி வரை சாஸ்தாவுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடக்கும். பக்தர்கள் பொங்கலிட்டு, சைவ படப்பு போட்டு வழிபடுவார்கள்.

    நள்ளிரவு 12 மணிக்கு பிறகு கருப்பசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பொங்கலிட்டு கிடா வெட்டி அசைவ படப்பு போட்டு வழிபாடு நடத்துவார்கள். 
    Next Story
    ×