search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    துயர் துடைக்கும் கொண்டத்துக்காளியம்மன்
    X

    துயர் துடைக்கும் கொண்டத்துக்காளியம்மன்

    திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் கொண்டத்துக்காளியம்மன் என்ற திருநாமத்தில் எழுந்தருளி தன்னை தரிசிக்க வரும் பக்தர்களின் துயரை துடைத்து அருள்பாலித்து வருகிறார்.
    அகில உலகையும் ரட்சிக்கும் பரம்பொருள் எங்கும் வியாபித்து உள்ளது. அதில் பராசக்தியும் அடங்கும். பரந்து விரிந்த இப்பூவுலகில் தன்னை தரிசிக்கும் அனைத்து உயிர்களுக்கும் அன்னையாக, கருணையின் வடிவமாக அவர் விளங்குகிறார். இத்தகைய சிறப்பு பெற்ற பராசக்தி திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் கொண்டத்துக்காளியம்மன் என்ற திருநாமத்தில் எழுந்தருளி உள்ளார்.

    முன்னொரு காலத்தில் தாருகன் என்ற அசுரன் கடும் தவம் இருந்து இறைவனிடம் பெண்ணால் இன்றி எந்த ஒரு ஆணாலும் என்னை அழிக்க முடியாத வரத்தை அருளுமாறு வேண்டினான். இறைவனும் அவனது தவத்தை மெச்சி வரம் அருளினார். வரம் பெற்ற தாருகன், தேவர்களை துன்புறுத்தினான். இவனது துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட தேவர்கள் சிவபெருமானிடம் தாருகனை அழிக்கும்படி பணிந்து வேண்டினர். உடனே சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய சக்தி வடிவமான காளி, சிவனருள் பெற்று, தாருகாசூரனை எரித்து சாம்பல் ஆக்கினார். இதே போல் மகிஷாசூரனையும் அன்னை பராசக்தி காளி வேடம் அவதரித்து அழித்தது புராண வரலாறு.

    முன்னொரு காலத்தில் பெருமாநல்லூர் பகுதியில் வாழ்ந்த பழங்குடி மக்கள் ஒரு மரத்தடியில் துர்க்கை அம்மனை எழுந்தருள செய்து வழிபட்டனர். அந்த அம்மன் நாளடைவில் கொண்டத்துக் காளியம்மனாக திருநாமம் பெற்றார். அவர் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களின் துயரை துடைத்து அருள்பாலித்து வருகிறார்.

    கருவறையில் அமர்ந்த கோலத்தில் கொண்டத்துக் காளியம்மன் காட்சி தருகிறார். எட்டுத்திருக்கரங்களில் பல்வேறு ஆயுதங்கள் ஏந்தி இருக்கிறார். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. கோவில் முன்பு 60 அடி நீள குண்டம் உள்ளது. இங்கு விரதம் இருக்கும் பக்தர்கள் பயபக்தியுடன் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். தன்னை தரிசித்த பக்தர்களுக்கு வேண்டிய வரத்தை வழங்கி அருள்பாலிக்கிறார். இத்தகைய சிறப்பு பெற்ற கொண்டத்துக் காளியம்மன் கோவிலில் இன்று(செவ்வாய்க்கிழமை) குண்டம் திருவிழா நடைபெறுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
    Next Story
    ×