search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சத்தியமங்கலம் காந்திநகரில் பண்ணாரி அம்மன் வீதி உலா வந்தபோது எடுத்த படம்.
    X
    சத்தியமங்கலம் காந்திநகரில் பண்ணாரி அம்மன் வீதி உலா வந்தபோது எடுத்த படம்.

    2-வது நாளாக பண்ணாரி அம்மன் சப்பரம் வீதி உலா

    சத்தியமங்கலத்தில் 2-வது நாளாக பண்ணாரி அம்மன் சப்பரம் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் குண்டம் திருவிழாவுக்காக கடந்த 4-ந் தேதி பூச்சாட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து பண்ணாரி அம்மன் மற்றும் சருகு மாரியம்மன் உற்சவ சிலைகள் சப்பரத்தில் வைக்கப்பட்டு வீதி உலா வருகிறது.

    பல்வேறு கிராமங்கள் வழியாக சென்ற சப்பரம் நேற்று முன்தினம் இரவு சத்தி கடைவீதி வந்தது. அங்கு வீதி உலாவை முடித்துக்கொண்டு இரவு கடைவீதியில் உள்ள வேணுகோபாலசாமி கோவிலில் தங்க வைக்கப்பட்டது.

    இந்த கோவிலில் இருந்து நேற்று காலை பண்ணாரி அம்மன் சப்பரம் 2-வது நாளாக சத்தியமங்கலத்தில் வீதி உலா வந்தது. ரங்கசமுத்திரம், எஸ்.ஆர்.டி.கார்னர், கோணமூலை, காந்திநகர், திம்மையன்புதூர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, புதிய விரிவாக்க வீதியில் சப்பரம் வீதி உலா சென்றது. பின்னர் அங்கிருந்து மேற்குபுரம் முத்துமாரியம்மன் கோவிலுக்கு சென்று சப்பரம் இறக்கி வைக்கப்பட்டது.

    அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் தேங்காய் பழம் படைத்து வழிபட்டனர். அதைத்தொடர்ந்து அங்கிருந்து இரவு கோட்டுவீராம்பாளையம் சவுடேஸ்வரி அம்மன் கோவிலுக்கு கொண்டு சென்று சப்பரம் தங்க வைக்கப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) கோவிலில் இருந்து வீதி உலா தொடங்குகிறது.

    பாலமுருகன் கோவில், புதுகுய்யனூர், வசுவபாளையம், புதுப்பீர்கடவு, ராஜன்நகரில் வீதி உலா செல்கிறது. அந்த பகுதியில் வீதிஉலாவை முடித்துக்கொண்டு நள்ளிரவு 12 மணி அளவில் சப்பரம் கோவிலுக்கு வந்து சேருகிறது. அதைத்தொடர்ந்து கோவிலில் நில குழிக்கம்பம் சாட்டப்படுகிறது.

    நாளை (புதன்கிழமை) முதல் 17-ந் தேதி வரை நித்தியபடி பூஜையும், இரவு 7 மணிக்கு மேல் மலைவாழ் மக்கள் தாரை, தப்பட்டை, பீனாட்சி வாத்தியத்துடன் அம்மன் புகழ்பாடும் களியாட்டமும், 18-ந் தேதி இரவு 1 மணிக்கு குளத்துக்கு சென்று அம்மை அழைத்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. முக்கிய நிகழ்வான குண்டம் விழா 19-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு நடக்கிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
    Next Story
    ×