search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மரத்தடி விநாயகரின் மகிமை
    X

    மரத்தடி விநாயகரின் மகிமை

    விநாயகரை ஆலயத்திற்குச் சென்றும் வழிபடலாம். ஆற்றங்கரையிலும், அரச மரத்தடியிலும் கண்டு வழிபாடு செய்யலாம். எப்படி வழிபாடு செய்தாலும் கைகூப்பித் தொழுபவரை கணபதி காப்பாற்றுவார்.
    உலகத்திலேயே பிள்ளையாருக்காக முதன் முதலில் தனியாக அமைக்கப்பட்ட குடவரைக் கோவில், சிவகங்கை மாவட்டம் பிள்ளையார் பட்டியில் உள்ள கோவில்தான். பிள்ளையாரின் பெயரைக் கொண்ட ஊராகவே அது அமைந்திருப்பது இன்னும் விசேஷம்.

    அந்த வகையில் எல்லோருக்குமே பலன் தரும், மூல முதற்கடவுள் பிள்ளையார். அவரை ஆலயத்திற்குச் சென்றும் வழிபடலாம். ஆற்றங்கரையிலும், அரச மரத்தடியிலும் கண்டு வழிபாடு செய்யலாம். எப்படி வழிபாடு செய்தாலும் கைகூப்பித் தொழுபவரை கணபதி காப்பாற்றுவார்.

    திருச்சியில் உச்சிப் பிள்ளையார், மலையின் உச்சியில் இருக்கிறார். காரைக்குடி அருகில் உள்ள கோட்டையூரில் சொற்கேட்ட விநாயகராக காட்சி தரு கிறார். செல்வ விநாயகர் என்றும், சித்தி விநாயகர் என்றும், வல்வினைகள் போக்கும் வல்லபகணபதி என்றும், லட்சுமியோடு இணைந்து லட்சுமி கணபதி என்றும் அழைக்கப்படுகிறார். இப்படி ஊர் தோறும் உன்னதமாகக் காட்சி தரும் பிள்ளையார் மஞ்சளிலே பிடித்து வைத்தாலும், மண்ணிலே செய்தாலும், சாணத்தில் செய்தாலும், சந்தனத்தில் செய்து வைத்து வணங்கினாலும், அவர்களின் வாழ்வில் வசந்தம் வீசச் செய்வார்.

    ஆலயங்களில் உள்ள பிள்ளையார்கள் பெரும்பாலும் மரங்களின் கீழே வீற்றிருப்பதை நாம் காண முடியும். அந்தப் பிள்ளையாரை எல்லாம், அரச மரத்தடிப் பிள்ளையார், வேப்ப மரத்தடி பிள்ளையார், வன்னி மரத்தடிப் பிள்ளையார் என்றெல்லாம் சொல்லி அழைத்து வழிபாடு செய்வார்கள். தாவரங்களுக்குப் பக்கத்தில் இருக்கும் பிள்ளையாரிடம், “தா! வரம்” என்று கேட்டால், உடனடியாக தந்து விடுவார். நாவால் பாடி துதித்தால் நற்பலன்களை அள்ளி வழங்குவார். மரத்தடி விநாயகருக்குப் பொங்கல் வைத்து (சர்க்கரைப் பொங்கல்), அதை பக்தர்களுக்கு வினியோகம் செய்தால், இல்லத்தில் அன்பு பொங்கும், ஆற்றல் பொங்கும், இன்பம் பொங்கும்.

    எந்த மரத்தடியில் பிள்ளையார் இருக்கின்றாரோ, அந்த மரத்திற்குரிய நட்சத்திரம், நாள் பார்த்து அன்றைய தினம் யோகபலம் பெற்ற நேரத்தில் பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். அதோடு வஸ்திரமும், மாலையும் அணிவித்து, அவல், பொரி, கடலை, அப்பம், மோதகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை நைவேத்தியமாக படைத்து வழிபட்டால், நினைத்த காரியம் நினைத்தபடி நடைபெறும்.

    அரச மரத்தடிப் பிள்ளையாரை எப்பொழுது வணங்கினாலும் உடனடியாக நற்பலன் கிடைக்கும். மேலும் மூல நட்சத்திரமன்று மோதகம் படைத்து, குறிப்பிட்ட அளவில் வலம் வந்தால் தோஷங்கள் நிவர்த்தியாகும். சந்தோஷங்கள் வந்துசேரும்.

    வேப்ப மரத்தடிப் பிள்ளையாரை விரும்பிச் சென்று பணிபவர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும். ஆரோக்கியத்தில் இருந்த குறைபாடுகள் அகலும். பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் கன்னிப் பெண்ளுக்கு கவலை தீரும். வணிகர் களுக்கு வளர்ச்சி கூடும். தயிர் சாதம் நைவேத்தியமாக படைத்து, பக்தர் களுக்கு வழங்கினால் கடன் தொல்லை அகலும்.

    வன்னி மரத்தடி விநாயகரை வழிபட்டால் எண்ணிய காரியங்கள் எளிதில் நிறைவேறும். ஆலமரத்தடி விநாயகரை வழிபட்டால் ஞாலம் போற்றும் வாழ்வு அமையும். பரணி நட்சத்திரம் அன்று நெல்லி மரத்தடிப் பிள்ளையாரை வழிபட்டால் நீங்கள் சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாக மாறும்.

    நாவல் மரத்தடி விநாயகரை வழிபாடு செய்தால் குடும்ப ஒற்றுமை கூடும். மகிழ மரத்தடிப் பிள்ளையார் வெளிநாட்டுத் தொடர்புக்கு வித்திட்டவர். அருகம்புல் மாலையை ஆனைமுகனுக்குச் சாத்தி வழிபட்டால் பொன், பொருள் பெருகும் என்பதை அனுபவித்தில் அறிந்து கொள்ளலாம். மரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகரை மனமுருகி வழிபட்டால் மகிழ்ச்சி பெருகும். மன அமைதி கூடும்.

    “அருகம் புல்லையள்ளி ஆனைமுகன் உனக்களிக்கப்

    பெருகும் பொன்னையள்ளிப் பெருமையுடன் தருபவன் நீ!

    உருகி மனமுருகி உனைத்தொழுது போற்றுகின்றேன்!

    அருகில் வந்தெம்மை ஆதரிப்பாய் கற்பகமே!”

    என்ற பாடலை பாராயணம் செய்து, விநாயகரை வழி படுங்கள். அவர் உங்களுக்கு உன்னதமான வாழ்வைத் தருவார்.
    Next Story
    ×