search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பூத்தட்டுகளை யானைமீதும், தலையில் சுமந்தபடியும் பக்தர்கள் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து சென்ற காட்சி.
    X
    பூத்தட்டுகளை யானைமீதும், தலையில் சுமந்தபடியும் பக்தர்கள் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து சென்ற காட்சி.

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பூச்சொரிதல் விழா நடைபெறுவது வழக்கம். இதையொட்டி மாரியம்மன், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எவ்விதமான நோய்களும், தீவினைகளும், அணுகாது சகல சவுபாக்கியங்களும் கிடைக்கவும், நாடு தழைக்கவும், மண்ணுலக உயிர்களை காக்கவும், உலக நன்மைக்காகவும் 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பார். ஆண்டுதோறும் மாசி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை முதல் பங்குனி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை அவர் விரதம் மேற்கொள்வார். இந்த 28 நாட்களும் கோவிலில் அம்மனுக்கு தளிகை, நைவேத்தியம் கிடையாது. துள்ளு மாவு, நீர் மோர், கரும்பு, பானகம் மற்றும் இளநீர் மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்படும்.

    இந்த ஆண்டு பூச்சொரிதல் விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை கோவில் கொடிமரத்தில் இருந்து யானை மீது கோவில் அர்ச்சகர் பூக்கூடைகளில் பூக்களை வைத்து அமர்ந்திருக்க, கோவிலை வலம் வந்து கடைவீதி வழியாக கோவிலுக்கு சென்றடைந்தனர். அங்கு அம்மனுக்கு பூக்கள் சாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இணை ஆணையர்(பொறுப்பு) தென்னரசு, முன்னாள் இணை ஆணையர் குமரதுரை, கோவில் மேலாளர் ஹரிஹர சுப்பிரமணியன், மணியக்காரர் ரமணி, முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் துரைராஜசேகர் மற்றும் கோவில் பணியாளர்கள், ஊழியர்கள், பக்தர்கள், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து அம்மன் பச்சை பட்டினி விரதம் தொடங்கினார். மேலும் காலை 8 மணியில் இருந்து திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பக்தர்கள் மஞ்சள் உடை உடுத்தியும், மாலையணிந்தும் பாதயாத்திரையாக அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் அம்மன் படத்தை வைத்து பூக்களை எடுத்து கொவிலுக்கு வந்து, அம்மனுக்கு சாற்றினர்.

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.

    பூச்சொரிதல் விழாவையொட்டி திருச்சி மாவட்டம் மட்டுமின்றி கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சை, நாமக்கல், சேலம், ஆத்தூர் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சமயபுரம் வந்து அம்மனை தரிசனம் செய்தனர். நேற்று இரவு முழுவதும் கட்டணம் இல்லாமல் அம்மனை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) தென்னரசு, ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    கொள்ளிடம் நெ.1 டோல்கேட்டில் இருந்து கூத்தூர், பழூர், பனமங்கலம், சமயபுரம் நால்ரோடு, ஒத்தக்கடை, சந்தை பகுதி ஆகிய இடங்களில் தொட்டிகள் வைக்கப்பட்டு, பக்தர்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டது. மேலும் நடமாடும் கழிவறை, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளை ச.கண்ணனூர் பேரூராட்சி செயல் அலுவலர் மத்தியாஸ் தலைமையில் தலைமை எழுத்தர் சதீஸ் கிருஷ்ணன் மேற்பார்வையில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் செய்து இருந்தனர்.

    பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து துறையின் சார்பாக திருச்சி, துறையூர் போன்ற இடங்களில் இருந்து சமயபுரத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் தலைமையில் 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலைய அலுவலர் மெல்கியுராஜா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சமயபுரத்தில் முகாமிட்டுள்ளனர். 
    Next Story
    ×